இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர் எரிக்வோல்ஸ்

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரி;ப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொது சன நூலகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசா கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது.

கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலவாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரியின் கொடும்பாவிகளை எரித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தமிழர் இனப்படுகொலை நினைவுதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழர்கள் உரிமைக்கான கனடாவின் ஆதரவிற்கு பதில் நடவடிக்கையாகவே ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

கனடாவில் அமைக்கப்படும் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பு

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு நினைவுத்தூபியை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேயர் நிராகரித்துவிட்டார் என இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தீவிரவாதிகள்வேறு பெயர்களில் செயற்படுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கனேடிய பூர்வகுடிகளின் இனப்படுகொலையை இலங்கையில் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

கனடாவில் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, இலங்கையிலும் அனுட்டிக்க வேண்டுமென இலங்கை மேலவை சபை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.

இதனை இந்த சபை கண்டிக்க வேண்டும். கனடாவில் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அண்மையில் பெரிய புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ஜூன் 21 ஆம் திகதி அனுட்டிக்கிறார்கள். இலங்கையில் நடக்காத இனப்படுகொலையை அவர்கள் அனுட்டிக்க முடியுமென்றால், கனடாவில் நடந்த இனப்படுகெ்கொலையை நாம் ஏன் அனுட்டிக்க முடியாது?

அதனால் ஜூன் 21ஆம் திகதி கனடா இனப்படுகொலையை நாம் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்ற வேண்டுமென்றார்.

கனேடியப் பிரதமர் தனது கருத்தை மீளப்பெறக் கோரி காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கனடிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , கடிதமொன்றையும் கையளித்திருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,

இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.

கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் இந்தக் கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்கள் வெவ்வேறு பேரூந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது. இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?

சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர். ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.

எதிர்ப்பைப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இலங்கையில் இனப்படுகொலை’ நடந்தது என கனடா பிரதமர் வெளிப்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று (மே 18) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பதாக கூறியது. அதில் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

கனேடியப் பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக வேற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என்று அமைச்சு மேலும் கூறியது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதில் கனடா உறுதியாக உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சுக்கு கனடா தகவல் வழங்கியது. இனப்படுகொலை தகவலை நீக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை கனடா கண்டுகொள்ளவில்லை.