காணிகளை விடுப்பதாக கூறிக்கொண்டு காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்திலும் அரசாங்கம் தீவிரம் – தவிசாளர் நிரோஷ்

வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்த நிலையில் அவ்விடத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விரைந்து செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கையில், கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன் அவ்வாறாக குறித்த காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன். இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03.02.2023) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுக்கின்றனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. நான் பரிதொரு கூட்டத்தில் இருந்து அவசரமாக குறித்த கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கிருந்து ஏற்கனவே கடற்படையினர் விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் கருமம் முடித்துச் சென்றார்களோ, அல்லது நான் வருகின்றேன் என தகவல் அறிந்து சென்றார்களோ தெரியவில்லை.

பின்னர் நான் குறித்த பிரதேசத்தை பார்வையிட்ட போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சிட்டை பெற்று மக்களோடு மக்களாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நின்றனர். அடிப்படையில் இந் நிலம் உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். இதில் பிரதேச செயலாளர் முடிவுகளை இராணுவத்திற்’கு வழங்குவதற்கு முடிவுகளை எடுக்க முடியாது. மேலும் மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது. எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும் காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தினை முற்கொண்டு செல்வதிலும் அரசாங்கம் தீவிரம் காட்டியே வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.

இராணுவத்தின் ஆலோசனையின்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

நட்டஈடு எங்களுக்கு வேண்டாம் சுவீகரித்த காணிகளே வேண்டும் ; வலி வடக்கு மக்கள் கோரிக்கை

“காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை. காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம், விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம். காணியின் பெறுமதி தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மாக இருக்கும்”

ஆனால் இவர்கள் என்ன பெறு மதியை தரப்போகிறார்கள், வய தான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெரு வில் நிற்கிறோம்.” -இவ்வாறு தெரிவித்துள்ளனர் வலி.வடக்கில் அரசினால் சுவீகரிக் கப்பட்ட காணிகளின் உரிமை யாளர்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீ கரிக்கப்பட்டடிருந்தன. வலி.வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப் பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன் தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத் தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் தெல்லிப் பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, நிலஅளவை திணைக்களம், விலை மதிப் பீட்டு அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.

இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினர்.

எங்களுக்கு நட்ட ஈடு எதுவும் தேவை யில்லை. எமது சொந்தக் காணிகளே வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகம் உள்ள மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் அமுலாவுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இன்று (21) பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிட்டதுடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று(16) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக எவரும் சமூகமத்திருக்கவில்லை ஆனால் இன்று(16) இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.a

கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.