காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.

வடக்கு கிழக்கில் தைப்பொங்கலின் போது காணி விடுவிப்பதற்கு சாத்தியம் !

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அமெரிக்க செனட் சபை குழு வடக்குக்கு விஜயம்

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் (07) திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது, பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.