இலங்கையின் நண்பனாகவே துறைமுக நகரத்திற்குச் சென்றேன் – டேவிட் கமரூன்

நான் இலங்கையின் நண்பன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன்தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சீனாவின் கொழும்புதுறைமுக நகரதிட்டத்திற்கு நான் இலங்கையின் நண்பனாகவே விஜயம் மேற்கொண்டேன் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்துதெரிவித்துள்ள டேவிட் கமரூன் தான் சீனாவின் நண்பர் என்பதை நிராகரித்துள்ளதுடன் இலங்கையின் நண்பனாகவே நான் கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் சுற்றுலாவிற்கு சென்றவேளை இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் வந்திருந்தார் நான் அவரை சந்தித்த பின்னர் அதன் பின்னர் நான் கொழும்பு துறைமுக நகரத்தை சென்று பார்வையிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி மாதம் டேவிட்கமரூன் கொழும்பின் துறைமுக நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரியில் இலங்கை வரும் மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல்

சீனாவின் சி யான் 6ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்இந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவநோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங் 3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில்தரித்து நிற்கின்றது இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில்விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான் 6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்க நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்புதுறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர்சென்னையிலிருந்து 500 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்புமற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும் , தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் எனஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை பெற்றுகொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்துவருகின்றது.

கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது.

சீன சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இதற்கான யோசனைக்கு அழைப்பு விடுத்த போது சீனாவின் சினோபெக் நிறுவனமும் மற்றும் Vitol நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் Vitol நிறுவனம் இந்த செயல்முறையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது – செல்வம் எம்.பி. கடும் எதிர்ப்பு

சீனாவைப் பொருத்த வரையில் இலங்கையிலே ஒரு பொது நல நோக்கோடு அவர்களின் செயற்பாடுகள் இடம் பெறுவது இல்லை. மாறாக தங்களுடைய இலாபத்தை கருத்தில் கொண்டே சீனா செயற்படுகின்றது எனவும் வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது எனவும் அதை நாங்கள் எதிர்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு இன்று வெள்ளிக்கிழமை (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய இலாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.

அதேபோல் போர்ட் சிட்டியும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது. அதேநேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.

அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாத நிலையில் இருக்கிறோம். இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.

எப்படி என்று சொன்னால் இங்கே தன்னுடைய லாபம் கருதி எண்ணெய் விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றர். அதேநேரம் மீனவர்களுக்கு மீன் வலைகளையும் வழங்குகின்றார்.

ஆகவே சீனா நினைப்பது என்ன வென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டு வந்தால் வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கும் எங்களுக்கும் மீனவர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவை விட்டு நாங்கள் வேறு நாட்டின் பக்கம் நிற்கின்ற வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது.

ஏனென்றால் எங்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியா தான் முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த விடயத்திலே சீனா தூதுவரின் வருகை வடக்கிலே எங்களுடைய மீனவ பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பது என்னுடைய கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை முன்வைப்பு

சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னர் போல இலங்கையை சேர்ந்த சகா இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது.

எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க அழுத்தம் கொடுக்குமாறு சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்த சிவில் சமூக பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்காக சீனத்தூதுவர் இன்று(06)  மாலை தனியார் விடுதியில் யாழ்மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட சீன தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அதையடுத்து  சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்குப்  பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத்தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என 2 மணித்தியாலங்கள் தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்

சீன‌கடலுணவுகள் வடக்கிற்கு இறக்குமதி செய்யப்படாது – சீன‌ தூதுவர்‌உறுதி

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது.சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கைகடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் – என்றார்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு சீன தூதுவர் குழு விஜயம்

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.