ஜப்பான் இலங்கைக்கு மேலும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது.

இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

மேலும் இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவு பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

“இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு மேலதிக மனிதநேய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஜப்பான் அரசாங்கத்தால் WFP மூலம் உணவு உதவியானது மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.”என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின்மை இன்னும் அதிக அளவில் இருப்பதாக WFP இன் அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் ஏழு பேர், புரதம் மற்றும் பால் போன்ற சத்தான உணவைக் குறைப்பது அல்லது உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அது தெரிவிக்கின்றது.

“பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளுமே எங்களின் மிகப் பெரிய கவலையாகும்” என WFP இலங்கையின் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி கூறினார்.

“பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் எங்கள் முயற்சிகளை அளவிடுவதற்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ரூஙரழவ் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாடானது இலங்கை அரசாங்கத்திற்கும் றுகுPக்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீண்டகாலமாக நன்கொடை அளித்து வருகிறது, அவசரநிலைகளில் முக்கியமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

ஜப்பானின் சமீபத்திய நிதியுதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மக்களுக்கு அதன் ஆதரவின் விரிவாக்கமாகும்.

WFPஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது அவசரச் செயல்பாட்டைத் தொடங்கியதில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையும் இலக்கை நெருங்கி வருகிறது.

ஜப்பானிய தூதரக அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு , அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் , மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான்

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வரவேற்றுள்ளார்.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஜப்பானிடம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின்  இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கியுடனான சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்காக ஜப்பான் அளித்த ஆதரவிற்காக நன்றி உடையவராக விளங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியானதும் இரண்டாவது முனைய பணிகள் ஆரம்பமாகும் என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் அவதானம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நீதித்துறை மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதி

இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பேன் என ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி  ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் இடம்பெறவேண்டிய இன நல்லிணக்க செயற்பாடுகள்,  சட்டக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அதில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளுக்காக தங்களின் அனுபவம் மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்த ஜப்பான் தூதுவர், நீதி அமைச்சர் என்றவகையில், அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் விசேட ஒத்துழைப்புகளுடன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், தேசத்தின் மற்றும் இந்த நாட்டின் தேவைகளை உணர்ந்து, அதுதொடர்பில் செயற்படுவது தொடர்பில் ஜப்பான் நாடு மகிழ்ச்சியடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நீண்டகாலமாக ஜப்பான் இலங்கையுடன் மேற்கொண்ட நற்புறவு  மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

ஜப்பான் அரசாங்கம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலை போன்ற மிகவும் பெறுமதிவாய்ந்த பல வேலைத்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கியமை தொடர்பில் விசேட நன்றியை தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர், நட்டஈட்டு வழங்கும் காரியாலயம், காணாமல் போனோர் தொடர்பில் முறையிடும் காரியாலயம் மற்றும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான காரியாலயம் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக இதன்போது அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலகு ரயில் திட்டத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஜப்பான் விருப்பம்

ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்க தயாராக உள்ள நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடெனகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ருவான் விஜயவர்தனவுக்கும் ஜப்பானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜப்பானிய அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் ருவான் விஜயவர்தன ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஜப்பான் விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அங்கு ஜப்பானிய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

இலகு ரக ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் 597.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் ஜப்பானுக்கு – ரணில்

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க முன்வந்துள்ளோம்.

இதேவேளை ஜப்பான் மறுப்பு தெரிவித்தால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 648,148 டொலர்கள் ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized