நீதித்துறை மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதி

இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பேன் என ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி  ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் இடம்பெறவேண்டிய இன நல்லிணக்க செயற்பாடுகள்,  சட்டக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அதில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளுக்காக தங்களின் அனுபவம் மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்த ஜப்பான் தூதுவர், நீதி அமைச்சர் என்றவகையில், அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் விசேட ஒத்துழைப்புகளுடன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், தேசத்தின் மற்றும் இந்த நாட்டின் தேவைகளை உணர்ந்து, அதுதொடர்பில் செயற்படுவது தொடர்பில் ஜப்பான் நாடு மகிழ்ச்சியடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நீண்டகாலமாக ஜப்பான் இலங்கையுடன் மேற்கொண்ட நற்புறவு  மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

ஜப்பான் அரசாங்கம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலை போன்ற மிகவும் பெறுமதிவாய்ந்த பல வேலைத்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கியமை தொடர்பில் விசேட நன்றியை தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர், நட்டஈட்டு வழங்கும் காரியாலயம், காணாமல் போனோர் தொடர்பில் முறையிடும் காரியாலயம் மற்றும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான காரியாலயம் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக இதன்போது அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.