வட,கிழக்கு மாகாணங்களை பெளத்த மயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் வியாழக்கிழமை (ஜன 26) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் புதன்கிழமை (11) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய ஸ்டீபன் ட்விக்ஸ், இலங்கைப் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்டீபன் ட்விக்ஸிடம் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா உதவிச் செயலாளர் நாயகம் – பிரதமர் இடையே கலந்துரையாடல்

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன , ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (03) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார். இதன் போது கன்னி விக்னராஜா சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ‘இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம்,’ என்று தெரிவித்த அவர், தமது  தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார்.

இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அவர் பிரதமரை சந்தித்தார்.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கியதுடன், நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் விளக்கினார். பெரும்பாலான கைதிகள் விடுவிக்கப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாய மற்றும் கடற்றொழில் வாழ்வாதாரங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, நாட்டின் முன்னுரிமைகள் பற்றிய சிறந்த விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதும் இலங்கைக்கு உதவுவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராய்வதும் குறிப்பாக சமூக பொருளாதார மீட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த பின்தொடரலில் கவனம் செலுத்துவதுமே தனது நோக்கம் என குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் நிதி கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர்

மக்கள் நலன் கருதி எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். அதற்கமைய நிதி தொடர்பான கட்டுப்பாடுகளில் ஜனவரி முதல் தளர்வுகள் ஏற்படும் என நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்புடன் தொடர்புடைய வசதிகளை குறைக்காமல் பராமரிப்பதற்கு வரவு – செலவு திட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பொதுவான அம்சமாகக் காணப்பட்டது வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறைவடைந்தமையாகும்.

தொழில்கள் இழக்கப்பட்டமை, முதலீட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தவற்றை செயற்படுத்த இயலாமை , அதில் ஆர்வமின்மை , கட்டுமானத்துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன இதில் தாக்கம் செலுத்தின.

கடந்த சில மாதங்களில் நாம் எதிர்கொண்ட நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக , உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமின்றி , முழு நாட்டையும் பொதுவான முடிவிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.

அதற்கமை நிதி முதலீடுகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் நிறுவனங்கள் வருமானம் பெறும் வழிகள் வீழ்ச்சியடைந்தன. இவை அரசாங்கத்திற்கு உரித்தான திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தின.

ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலைமையை ஓரளவுக்கு தளர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. உள்ளுராட்சி நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ள தடைகளை நீக்க முடியும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் பேசினால்தான் தமிழர்கள் தீர்வை பெறலாம்! பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்க ரெலோ தலைவர் கோரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் மூலம் நேற்று (31.10.2022) பிரதமரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த விடயம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்குறிப்பிட்ட விடயத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சாதகமான முடிவு அனைவராலும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியதாகும்.

இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் இந்த தீர்வை நான் சரியானதாகவே பார்க்கிறேன்.

இந்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.