அலரி மாளிகையில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விசேட நிகழ்வுகள்

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இன்று(02)அலரி மாளிகையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவின் ஒத்துழைப்பு

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் நேற்று புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துமாறும் , கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரிக்கு நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அதற்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். உயர்ஸ்தானிகர் அதனை ஏற்றுக்கொண்டதுடன், பல் மருத்துவப் கல்லூரியை மீண்டும் கண்காணித்து ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரசதுறை சீர்திருத்த வேலைத்திட்டங்களுக்கு நிபுணத்துவம் வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். நியூசிலாந்தின் முன்னாள் பொதுச் சேவை ஆணையாளர் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான காணி கட்டளைச் சட்டத்தை திருத்தவும் திட்டமிட்டுள்ளதோடு , பழங்குடியின மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கத்துடன் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காலாவதியான காணிச் சட்டத்தை திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தேர்தல் சட்ட திருத்தம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் வியாழக்கிழமை (22) பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இலங்கையில் விமான சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், வலுசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உரிய நேரத்தில் நிதி உத்தரவாதத்தை வழங்கியமைக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் அரச நிதியை வீணடிக்கின்றன – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும்.

யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.

சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொது மக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும் எனக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளை கண்காணிக்கும் குழு பிரதமர் இடையே சந்திப்பு

உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.

மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

வட,கிழக்கு மாகாணங்களை பெளத்த மயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் வியாழக்கிழமை (ஜன 26) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் புதன்கிழமை (11) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய ஸ்டீபன் ட்விக்ஸ், இலங்கைப் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்டீபன் ட்விக்ஸிடம் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.