13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்; உலக நாடுகள் வலியுறுத்து

13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது என்று ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடரில் முழுநிறை காலமுறை மீளாய்வு செயல்குழுவில் இலங்கை குறித்து நேற்று மீளாய்வு செய்யப்பட்டது. இதில், பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கவும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்க வும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும். அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சித்திரவதை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கொலம்பியா பரிந்துரைத்துள்ளது.

மேலும் அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு டென்மார்க் பரிந்துரைத்துள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை – பிரிட்டன் பிரதிநிதிகள் பேச்சு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னேற்றகரமான நகர்வு என்பன குறித்து இலங்கை மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர வெளியுறவுச் செயலாளர் பிலிப் பார்றனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட பூர்த்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் 2023இல் சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீட்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்பன குறித்து வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பிலிப் பார்றனுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்த பார்றன், இவ்விடயத்தில் இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தற்போது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரிட்டனுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ்தாபித்த அருணி விஜேவர்தன, அதன் மூலம் பிரிட்டன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர் குடிப்பெயர்வு ஆகியவற்றில் பிரிட்டனின் ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காலநிலை மாற்ற சவால்களுக்கான துலங்கல்கள், 2030ஆம் ஆண்டில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியை அடைதல் என்ற இலங்கையில் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்க வெளியீட்டை பெறல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இவ்வருடத்தின் முதற்காலாண்டில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.

Posted in Uncategorized

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையில் தமிழ் மக்களை கொன்றொழித்த போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்த பிரித்தானியா அரசாங்கம் செயற்படவேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைருமான சேர் கெயர் ஸ்ராமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தியில், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் சமூகத்துடன் இணைந்து இருப்போம். இந்த நாளில் தமது எண்ணங்கள் இலங்கையில் இன்னல்களை அனுவித்த மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க தொழிற்கட்சி மீண்டும் உறுதியளிக்கிறது.

பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் கொடுமைகளை செய்த முகங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும், ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் உயர்ஸ்தானிகராலயத்தின் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போர்ட் சிற்றிக்கு விஜயம்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் நிறுவன விவகாரங்களிற்கான இயக்குநர் விந்தியா வீரசேகர, போட் சிட்டி கொழும்பின் முகாமைத்துவ பணிப்பாளர் யாங் லு ஆகியோரை சந்தித்த டேவிட் கமரூன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் திட்டத்தின் தனியார் கூட்டான்மை மற்றும் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதயின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு- ஜஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டனை தளமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி ஜயராஜ் பலிகவர்த்தனவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜயராஜ் பலிகவர்த்தன ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜஸ்மின் சூக்கா தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பக்கச்சார்பானவர் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜயராஜ் பலிகவர்த்தன 47 தூதரகங்களிற்கு அதனை அனுப்பிவைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் 2018 தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு மனுவொன்றை தாக்கல் செய்த ஜஸ்மின் சூக்கா தனது தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இயல்பாகவே இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர் என்ற அடிப்படையில் எனது பணிகளிற்கு அவதூறு கற்பிக்கும் நோக்கத்தை கொண்டவை என ஜஸ்மின் சூக்கா நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் நடவடிக்கைளில் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையை சேர்ந்த சட்டத்தரணி தான் தனது அறிக்கையில் ஜஸ்மின் சூக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை நீக்க மறுத்ததுடன் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதியில் அவர் ஜஸ்மின் சூக்காவிற்கு குறிப்பிடத்தக்க இழப்பீட்டினை செலுத்த இணங்கியுள்ளதுடன் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதற்கும் இணங்கியுள்ளார்.

நீதிமன்றம் அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இணையத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றது – தாரிக் அஹமட்

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை இலங்கை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதன்போது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்துள்ளார். இவர் இலங்கை விவகாரத்தில் இந்தியா ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் கவனத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை மனிதாபிமான விவகாரங்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரித்தானிய தூதுவர் யாழ் மாநகர முதல்வர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று புதன்கிழமை (30) யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.