புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை திறக்கப்பட்டது: புதிய வேகம் மணிக்கு 100 கி.மீ

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட ரயில் பாதையிலான  சோதனை ஓட்டம் இன்று (13)  உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

இந்த சோதனை ஓட்டத்துக்காக M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ரயில் சேவையை போக்குவரத்துத்துறை  அமைச்சர் பந்துல குணவர்தன அநுராதபுரத்தில் இன்று ஆரம்பித்து வைத்தார்.

யாழ்தேவி புகையிரதம் 100 kmph வேகத்தில் பரீட்சார்த்த பயணம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதைத்  தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி  80 kmph தொடக்கம் 100 kmph வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி , வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

இந்நிலையில் புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக   கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை மீள செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவைத் தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார்.

யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கடவை பராமரிப்பு பணிகளுக்காக கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது.

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடிப் புகையிரத சேவைகள் அநுராதபுரம் புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு புகையிரத மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு புகையிரதச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசனப் பதிவுகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காங்கேசன் துறை ரயில் சேவை அடுத்த மாதம் மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது – பந்துல

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது. புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த வேண்டாம் என்றால் சேவையை நிச்சயம் அதிகார சபையாக மாற்றிமைக்க வேண்டும். திணைக்களம் என்ற நிர்வாக கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு  முன்னேற்றமடைய முடியாது என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து சேவைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்த மானியம் போதாது. புகையிரத திணைக்களத்தின் வருமானம், செலவு முகாமைத்துவத்தில் நிலவும் பலவீனத்தன்மை திணைக்களம் நட்டமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது. சிறந்த நிர்வாக கட்டமைப்பு இல்லாமல் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது.

பொது போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை ஊடாக தீர்வு காண தயாராகவுள்ளேன். குறுகிய அரசியல் நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களின் பங்குதாரர்களாக புகையிரத தொழிற்சங்கங்கள் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

புகையிரத சேவையை திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் வைத்துக்கொண்டு ஒருபோதும் மேம்படுத்த முடியாது. திணைக்களம் எனும்போது வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. துறைமுக அதிகார சபை, டெலிகொம் நிறுவனம் ஆகியன அபிவிருத்தி அடைவதை போல் புகையிரத திணைக்களம் அபிவிருத்தியடைய வேண்டும்.

புகையிரத சேவையாளர்களின் தொழில் மற்றும் ஓய்வூதிய உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்றால் நிச்சயம் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு முன்னேற முடியாது என்றார்.

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான  ரயில் சேவை மீண்டும்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில் பாதை  திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே  இடம்பெறுகின்றன.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும்  ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர்  அசோக முனசிங்க தெரிவித்தார்.

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ரயில் மார்க்கங்களை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ரயில் மார்க்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயில் மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக பல இடங்களில் ரயில்களின் பயண வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அதிகளவான பாதிப்பிற்கு கரையோர மார்க்கம் முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான ரயில்களின் பயண வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர் வரை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024 ஜனவரியில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மஹவ முதல், அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கம் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கோட்டை முதல் காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேவையின் அடிப்படையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்குமென தாம் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி புகையிரத திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்தே அத்தியாவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணிக்கமர்த்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது

Posted in Uncategorized