வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது; பொலிஸார் அராஜகம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை (8) மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயநிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிசாரால் தடங்கல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்தின் நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

அதனை செவ்வாய்க்கிழமை (5) விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலயநிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வியாழக்கிழமை (7) மாலை உழவியந்திரத்தில்   சென்றுகொண்டிருந்த பூசாரி உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் செவ்வாய்க்கிழமை (5) வழிமறிக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை  வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை (5) நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. இந் நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிசார் குறித்த இருவரை கைதுசெய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

தென்னக்கோனின் நியமனத்தை அரசியலமைப்பு சபை ஏற்கவில்லை – சஜித் பிரேமதாச

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை (CC) அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக நான்கு வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் இருந்தன மேலும் இருவர் வாக்களிக்கவில்லை. தீர்மானத்தை மேற்கொள்ள குறைந்தது 5 வாக்குகளாவது தேவை. வாக்குகள் சமனாக இருந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்கலாம். வாக்குகள் சமனாகவும் இல்லை.

எனவே அரசியலமைப்பு இரண்டாவது முறையாக அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறும் துமிந்த சில்வா

2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிறைச்சாலை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றம் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியர் திணைக்களத்தின் கோரிக்கையை மீறி, அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிபாரிசு செய்திருந்தார்.

துமிந்த சில்வாவின் வைத்தியர்களின் சிபாரிசுகளுக்கு அப்பால் செல்வதற்கு விசேட வைத்தியர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து, துமிந்த சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண சிறைச்சாலை முன் மாதிரியான சிறைச்சாலையாக உள்ளது – நீதியமைச்சர் விஜயதாஸ

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியால் தமிழ் அரசியல் கைதிகள் மன்னிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதன்சேகர் மார்ச் 29, 2023 அன்று அவசரகால (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிருபாகரன் குற்றவாளி என கண்டறியப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

“லொகான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தார்” – தமிழ்க் கைதி ஒப்புதல் வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதோடு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் என்பவரே இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும்,” சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து, எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னை முழங்காலில் இருத்தியதோடு உண்மையை சொல்லுமாறு துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் ” என அவநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு – ஆட்கொலை என நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக நேற்று (2) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும் இரண்டாவது சாட்சி, ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், மேலதிக சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் பொலிசார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமாஅதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Posted in Uncategorized

குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என பதில் பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதோடு நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து ஒழிக்க அவ்வாறு செய்ய முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்கிறோம். பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்ய எவரும் செல்ல முடியாது.

பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் அதனை தடுப்பதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம புறங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் பலரே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை கைது செய்ய முடியாது என பொலிஸார் கூறுகின்றனர்.

அவர்கள் சமூகத்தில் பெரிய பொறுப்புகளிலும், சமூக செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை என கூறுகின்றனர்.

பொலிஸாருக்கு முடியவில்லை எனில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கூறுங்கள். அது முடியாமல் போனால் என்னுடைய வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறையிடுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1091 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என்றார்.

பொலிஸார் கிராமசேவகரின் வேலைகளை பார்க்கக்கூடாது – மனோ கணேசன்

பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள். தகவல் திரட்டுகின்றீர்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள்.பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது.

விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்.தீபாவளி,நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா ? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது.பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா ?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு.நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை.

ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள்.99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள்.தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.

தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும்.தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன.ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார்.