போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

தேசிய பொங்கல் எனும் போர்வையில் ரணில் யாழில் காலடி வைக்க கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

தை பொங்கல் என கூறிவிக்கொண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ராணி ல்விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிபருமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்தா அதிபர் தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்கின்றார் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய அதிபர் தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு – யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு  பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய  தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,
 எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்பட்டோர் , அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் என அரசின்  திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில்  யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?
 ஜனாதிபதி பொங்கல் விழாவை  மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை  வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம் பெற இருக்கின்ற தருணத்தில் 1 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும்  இடத்திற்கு சென்று நிறைவவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல்  நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்தவீக போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு, அனைத்து சிவில்  அமைப்புக்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென்றும், காலை 10 மணிக்கு நினைவேந்தல் நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னராக அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் பிரதான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் கோப்பாய் தவிசாளருமான நிரோஷ், புளொட் அமைப்பை சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், ரெலோவின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.

அதில் முப்படைகளின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணி- மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிததுள்ளன.

கடந்த 2020 டிசம்பர் 30ஆம் திகதி மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.