சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இலங்கையில் 200 Shell எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார்.

வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய புதிய வழிமுறைகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை விரைவில் புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டமூலத்தை வரைய திட்டமிட்டுள்ளதால், அதற்காக வியட்நாமின் நிபுணத்துவ அறிவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலாநிதி புய் வான் கிம், இலங்கையை வியட்நாம் ஒரு சிறப்பான நட்பு நாடாகக் கருதுவதாகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வியட்நாமின் அரிசி மையமாக அறியப்படும் அரிசி மற்றும் பிற விவசாயப் பொருட்களுக்கு பெயர் பெற்ற வின் லாங் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனக்கு மாகாண மட்டத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும், இதனால் இலங்கையின் மாகாணங்கள் பரஸ்பர நன்மைகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

வர்த்தகம், சுற்றுலா, கைத்தொழில், விவசாயம், கலாசாரம், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலா வர்த்தகம் உள்ளிட்ட வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வியட்நாம் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

தூதுக்குழுவின் தலைவரான கலாநிதி புய் வான் கிம், வியட்நாம் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி  உயர்பீடத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.

இந்த உயர்மட்ட தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் மத்திய வெளியுறவு ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வியட்நாமிய அரச அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையின் தீவுகளில் சுற்றுலா முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் பல அழகிய தீவுகள் மீன் பிடி நடடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில தீவுகளில் பருவ காலங்களில் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவ்வாறான தீவுகள் ஊடாக வருமானத்தை பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விற்காமல் குத்தகைக்கு வழங்கல் போன்றவற்றுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாரியளவு செலவின்றி அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடிய தீவுகள் தெரிவு செய்யப்படும் என்றார்.

“சனல் – ஐ” குத்தகை அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது – பந்துல

”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நஸ்டத்தில் இயங்கிவரும் “சனல்-ஐ” யினை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விபத்திர அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவாஹினிகூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல்ஐயை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் குத்ததைகக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இயக்குநர் சபை எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் சனல்- ஐ யினை குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும் சனல்ஐ நஸ்டத்தில் இயங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால்அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதாக பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு லைக்கா நிறுவனத்திற்கு 25மில்லியனிற்கு அதன் ஒளிபரப்பு நேரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் – இலங்கை முதலீட்டுச் சபை இடையேயான ஒப்பந்தம் இரத்து

ஏற்றுமதி சந்தைக்காக மாத்திரம் நாளொன்றுக்க 420,000 பரல்கள் கொள்ளவுடன் கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2019.09.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் 1,200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தேச கருத்திட்ட மூலம் குறித்த காணி குத்தகை அடிப்படையில் பெறப்படாமையால், இதுவரை கருத்திட்ட அமுல்படுத்தப்படவில்லை.

கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி கருத்திட்ட முன்மொழிவாளருக்கு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருப்பினும், அதற்குப் பதிலளிக்கவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட முன்மொழிவாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால், குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சனல் ஐ அலைவரிசையை லைக்கா நிறுவனத்துக்கு வழங்குவதை நிராகரித்தது அமைச்சரவை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அமைச்சரவை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சபையில் சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் ஐ தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதற்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை முன்மொழிந்திருந்தது. அதன்படி, இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு பெப்ரவரி 03, 2023 அன்று வெளியிடப்பட்டது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. உரிய திகதியில், நாட்டிலுள்ள 2 நன்கு அறியப்பட்ட தகவல் தொடர்பு முகவர் நிறுவனங்கள் மட்டுமே அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

ஆனால், ஊடகத்துறை அமைச்சரால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அண்மையில் ‘சனல் ஐ’ சனலை இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்காமல் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கை ரூபாயே செல்லுபடியாகும் – இலங்கை மத்திய வங்கி

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized