அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் – இலங்கை முதலீட்டுச் சபை இடையேயான ஒப்பந்தம் இரத்து

ஏற்றுமதி சந்தைக்காக மாத்திரம் நாளொன்றுக்க 420,000 பரல்கள் கொள்ளவுடன் கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2019.09.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் 1,200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தேச கருத்திட்ட மூலம் குறித்த காணி குத்தகை அடிப்படையில் பெறப்படாமையால், இதுவரை கருத்திட்ட அமுல்படுத்தப்படவில்லை.

கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி கருத்திட்ட முன்மொழிவாளருக்கு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருப்பினும், அதற்குப் பதிலளிக்கவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட முன்மொழிவாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால், குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சனல் ஐ அலைவரிசையை லைக்கா நிறுவனத்துக்கு வழங்குவதை நிராகரித்தது அமைச்சரவை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அமைச்சரவை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சபையில் சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் ஐ தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதற்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை முன்மொழிந்திருந்தது. அதன்படி, இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு பெப்ரவரி 03, 2023 அன்று வெளியிடப்பட்டது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. உரிய திகதியில், நாட்டிலுள்ள 2 நன்கு அறியப்பட்ட தகவல் தொடர்பு முகவர் நிறுவனங்கள் மட்டுமே அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

ஆனால், ஊடகத்துறை அமைச்சரால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அண்மையில் ‘சனல் ஐ’ சனலை இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்காமல் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

Posted in Uncategorized

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கை ரூபாயே செல்லுபடியாகும் – இலங்கை மத்திய வங்கி

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளரிடம் கையளிக்க முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நிர்வாக விவகாரங்களை முதலீட்டாளரிடம் எவ்வாறு ஒப்படைப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை, இந்திய பொருளாதார பரிவர்த்தனைக்கு ரூபாயை பயன்படுத்த ஆலோசனை

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளதாவது.

“இந்தியாவும், இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பேங்க் ஆப் சிலோன், எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள் இதுதொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க உதவும் முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதன் மூலம் குறைவான பரிமாற்ற செலவு, விரைவான சேவை, வர்த்தக கடன்கள் எளிமையாக பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இலங்கை மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் கணிசமான அளவில் ஆதாயம் ஏற்படும் என்பதுடன் நட்புறவு மேலும் நெருக்கமாகும்.” என் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் தனது முதலீடுகள் தொடர்பில் கௌதம் அதானி ஆராய்வு

இலங்கையில் தனது முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்து கௌதம் அதானி ஆராய்ந்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட குஜராத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

அஹமதாபாத் சாந்திகிராமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தூதுவரை சந்தித்த அதானி அதன் பின்னர் இலங்கையில் தனது முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் துறைமுக துறையில் அவரது குழுமம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

வர்த்தகர்களை பாதுகாக்க கடன்களை ஒத்திவைக்கும் சாத்தியகூறுகள் ஆராயப்படும் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தொழில் முயற்சியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) பிற்பகல் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும்  அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கை- தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) கொழும்பில் நடைபெறவுள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.

தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன.

தாய்லாந்துக்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்துக்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமின்றி மற்ற ஆசியான் சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கறுப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.