யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 77வது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நடராசா அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் வாசித்திருந்தார்.

இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயர் நீர்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத்தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் மதத்தலைவர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் கல்வியலாளர்கள. பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆதார் அட்டையை ஒத்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்தியாவின் நன்கொடையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எனும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தமைலையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற சுயதொழிலாளர்கள் அமைப்பின் 1,200 பேருக்கு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் நன்கொடையின் கீழ் எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

விசேட டிஜிட்டல் அடையாள அட்டை (Unique Digital Identity) தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக 450 மில்லியன் இந்திய ரூபா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பக்லே வழங்கி இருக்கிறார்.

இந்த வேலைத்திட்டத்துக்காக உலகில் உள்ள தகவல் தொழிநுட்பத்தின் பிரதான நிறுவனங்கள் பல எமது நாட்டுக்கு அதுதொடர்பான அறிவை இலவசமாக வழங்கி இருப்பதுடன், அதில் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் மன்றங்களும் உள்ளடங்குகின்றன.

இந்தியா தற்போது டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மாதிரி படிவத்துக்கமையவே எமது நாட்டு மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்க இருக்கிறது.

ஒரு நபரின் உயிரியல் தகவல் (இரத்த வகை முதலிய தகவல்கள்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவருக்கான தனி இணையத்தள கணக்கில் சேமிக்கப்படும். குறி்த்த நபரின் அனுமதியுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது பிற நிறுவனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பும் வசதியும் இந்த புதிய அடையாள அட்டையுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

நபரொருவர் இந்த வழியில், தனது கடமை தேவையை மேற்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு செல்லாமல் இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியுமான வசதி கிடைக்கிறது.

முழு நாட்டையும் ஈ வலயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைய இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் எதிர்வரும் வருடம் இறுதியாகும்போது முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்தமொராகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக்கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சேனுகா நியுயோர்க்கி;ல் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.

மேலும் ஐக்கிய இராச்சியம் தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கான தூதுவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அதிகபட்ச ஆதரவு – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கடந்த 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, இலங்கை தரப்பில் இருந்து தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், பிரதி உயர்ஸ்தானிகரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா தவறிவிட்டது – டி. ஆர் பாலு

இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?

160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது.

எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வு கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது எனவும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மீள இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் உள்ள அனலைதீவு, நைனாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை அரசினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை அழுத்தங்கள் மூலம் இந்தியா கைப்பற்றியுள்ளது.

12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டங்கள் 2021 ஆம் ஆண்டு சீனாவின் செனோசர் எச்வின் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை இலங்கை அரசுக்கு தெரிவித்ததால் அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா அந்த திட்டத்தை இடை நிறுத்தியிருந்தார்.

சீனா தனது திட்டத்தை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக சீனாவின் திட்டத்தை நிறுத்திய இலங்கை தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே, மன்னார், பூநகரி மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் போன்ற பிரதேசங்களிலும் எரிசக்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை கூட்டுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் வேண்டுகோள்

இலங்கை – இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை வியாழக்கிழமை (03) பாராளுமன்றத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது சபாநாயருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

இலங்கை, இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்தியாவினால் 450 மில்லியன் இந்திய ரூபாய்கள் அன்பளிப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின்படி, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.

உரிய கால வரையறைக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும்,  இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.