இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது

Posted in Uncategorized

சாந்தன் இலங்கைக்கு வர ஜனாதிபதி சம்மதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக அனுரகுமார தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு சஜித் பிரேமதாஸ விளக்கமளிப்பு

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.

நியாயமற்ற முறையில் அரசாங்கம் விதித்த பெறுமதி சேர் வரியினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர் சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.

அவ்வாறே,தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து விடயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசாங்கம் “நிகழ்நிலை காப்பு” என்ற சட்டத்தை நிறைவேற்றி,மக்களின் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை,தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்,சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இச்சட்டத்தினால் முடியும்.

தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க,எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய மத்திய அரசால் ஏன் தடுக்க முடியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா “கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் “கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ் இந்திய மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டது பற்றி வேதனையை பகிர்ந்துள்ள அவர் இது பற்றி கூறியிருப்பதாவது;

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது.

அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் தமிழக அரசு இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என அவர் தெரிவித்துள்ளார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் – அநுரகுமார இடையே புதுடெல்லியில் பேச்சுவார்த்தை

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய வெளிவிவகாரஅமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துதால் உருவாகக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்து இந்த சந்திப்பின்பொது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாகவும் சாகர் கொள்கை காரணமாகவும் இலங்கையின் நண்பனாகவும் நம்பகதன்மை மிக்க சகாவாகவும் விளங்கும் என இந்தியவெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் கட்சி ஆரம்பம்

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இல்லாத புலிகள் அமைப்புக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சி – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ‘

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.