அரச காணிகளை முகாமைத்துவம் செய்ய புதிய சட்டமும், திணைக்களமும் உருவாக்கப்படும் – ஜனாதிபதி

நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது எமக்கு தெரியாது. ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனை நிறுத்தி புதிய சட்ட மூலமொன்றை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக உருவாக்கப்படும் திணைக்களத்தின் ஊடாக காணி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘2048 இளைஞர் குழு’ என்ற குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023 வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் இதனை விட சிறந்ததும், பலம்மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதையே நான் எதிர்பார்க்கின்றேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2023 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென உருவான ஒன்றல்ல. கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே இவ்வாறானதொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பது தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு காரணியாகும்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பில் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற போதிலும், பொருளாதாரம் இவ்வாறு முழுமையாக வீழ்ச்சியடையும் என்று எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மத்திய வங்கியினால் கூட இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கவில்லை.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாருக்கு காணிகள் வழங்கப்படுகின்றன என்பது எமக்கு தெரியாது. இதனால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்களை முதலில் தடுக்க வேண்டும்.

அரச காணி திணைக்களத்தின் ஊடாகவே 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணி வழங்கும் விவகாரங்கள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. அபிவிருத்திகளுக்காகவே காணிகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே மகாவலி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக காணி வழங்கப்பட்டது. எனினும் அன்று காணிகள் வழங்கப்பட்டதையப் போன்று இன்று வழங்கப்படுவதில்லை.

அரசாங்கத்திற்கு அதற்கு சொந்தமான காணியின் அளவினை துள்ளியமாகக் கூற முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. அதே போன்று அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. எந்தவொரு அரச அதிகாரிக்கும் இதனைக் கூற முடியாது. பிரதேச செயலகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்க முடியாது.

தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவின் ஆலோசனைக்கு அமையவே காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதுவும் தற்காலிக நடவடிக்கையே ஆகும். எனவே நாம் இது தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய சட்டத்தின் ஊடாக இதற்கான திணைக்களமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பெளத்தத்தின் பெயரில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை உறுதிப்படுத்திய கடற்றொழில் அமைச்சர்

பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற, சுகாதார அமைச்சு மற்றும் பௌத்த சாசன, கலாசார மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உiராயற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஒரு காலத்தில் தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் கையாண்டனர்.

அதேபோல் தொடர்ச்சியான இனக் கலவரங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஒரு காலத்தில் நாம் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எமது அந்த போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் ஏற்பட்ட குணாம்ச ரீதியான மாற்றங்கள் காரணமாக, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு அவை முன்வந்திருந்தன. எனினும் அதற்கு இடம்கொடுக்காமல் – உரிமைப் போராட்டத்தின் விளைவாக கிடைத்ததை மழுங்கடிக்கக்கூடிய வகையில், ஓரு வன்முறை போராட்டம் தொடர்ந்து, யுத்;தமாக மாற்றமடைந்து, அந்த யுத்தம் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் பலரைக் காவு கொண்டது.

இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு அந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்கைளுக்கு ஊடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. எனினும் துரதிஸ்டவசமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல், தங்களுடைய சுயலாப அரசியலுக்காக அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த விடயத்;தில் நான் தமிழ் தரப்பினரை மட்டும் சொல்லவில்லை, சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றனர். ஆக இரண்டு தரப்பிலும் இருக்கின்ற இனவாதிகள் இநதப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்;த சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன்.

அடுத்ததாக, யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் நினைவு கூரமுடியும். அதில் பிரச்சினையே இல்லை. எனினும் அவ்வாறான நினைவுகூரல்களை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்துவதுதான் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது என்பதை சம்மந்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜை என்ற வகையிலும் நான் பலரை இழந்திருக்கின்றேன். எனவே, உறவுகளை இழந்தவர்களின் வலி எந்தளவிற்கு கொடுமையானது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் இந்தப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளை மூலமே தீர்த்துக் கொள்வற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன்.

என்னைக்கூட கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 15 வருடங்களுக்கு முன்னர், இன்றைய நாளில்கூட என்னைக் கொலை செய்யும் முயற்சியில் ஒரு தற்கொலை குண்டுதாரி உயிரிழந்திருந்தார். அவ்வாறு உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன் – அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், இன்றைய விவாதத்துடன் சம்மந்தப்பட்ட அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், வவுனியா வெடுக்கநாரி விவகாரம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் போன்ற சில விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. இதுதொடர்;பாக துறைசார் அமைச்சர் விதுர விக்கிரநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். நீண்டகால நண்பரான கௌரவ அமைச்சர் அவர்கள், நியாயமாகவும் யாதார்த்தமாகவும் பிரச்சினைகளை கையாண்டு வருகின்றார். நாம் இருவரும் திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்து கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்; என்று நம்புகின்றேன்.

அதேபோன்று வெடுக்குநாரி மற்றும் குருந்தூர் விவகாரங்கள் நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்டிருப்பதனால், குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக சென்று ஆராய்வதுடன் நீதிமன்றத்தின் ஊடக அந்த விடயங்களை தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்து சமயத்தவர்களோ தமிழ் மக்களோ என்றைக்குமே பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களும் பௌத்த மதத்தினை பின்பற்றி இந்த நாட்டிலே வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால், பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதையும் அல்லது பலாத்கார குடியேற்றங்களையுமே தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதனை கௌரவ துறைசார் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று எமது ஜனாதிபதி அவர்களும் குறித்த விடயங்களில் நல்ல புரிதலுடன் செயற்பட்டு வருவதுடன், பதவியேற்று குறுகிய காலத்திலேயே பல்வேறு விடயங்களை தீர்ப்பது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். எனவே அவருடைய முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்’ என்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று(16) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக எவரும் சமூகமத்திருக்கவில்லை ஆனால் இன்று(16) இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.a

கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கில் முப்படையினருக்கு காணி சுவீகரிப்பது தொடர்பில் பிரதேச செயலர்களுடன் ஆளுநர் தனது அலுவலகத்தில் கூட்டம் நடாத்தவிருந்த போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டது.

Posted in Uncategorized

காணிக்காகப் போராடத் தமிழர்கள் போல் முஸ்லிம்களும் உடன் இணையவேண்டும்

முஸ்லிம்களாகிய நாங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாகப் போராடி நிறைய விடங்களைச் சாதித்திருக்கின்றார்கள்.

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றும்கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்குக் காரணமானவர்களை ஒன்றுகூடி அவர்கள் விரட்டியடிக்கின்றார்கள். ஆனால் அம் மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில் இல்லை. எமது ஊர்கள் யாவும் தற்போது தனியான தீவுகளாக மாற்றப்பட்டு உள்ளன. இவ்வாறான பிரதேச வாதங்களால் தான் வெளியூர் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலைச் செய்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் பிரதேச வாதமாகும். எனவே தான் ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் – வலி வடக்கு போராட்ட குழு

எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என ஐனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் காணி அபகரிப்பு போராட்டத்திற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ரதை தொடர்ந்து ஐனாதிபதிக்கான மகஜர் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் வழங்கப்பட்டது குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை தீவின் பூர்வீக இனமான தமிழினம், வரலாற்று ரீதியாக தம்மை தாமே ஆளும் தனி இராசதானியாகவே வாழ்ந்து வந்தனர்.

ஆனால் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பின் போது இத்தீவில் இருந்த தமிழ் மற்றும் சிங்கள இராசதானிகளை முழுமையாக கைப்பற்றியவர்கள் தமது நிர்வாக ஒழுங்குக்காக வேறு வேறாக இருந்த தமிழ் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் ஒருங்கிணைத்து “சிலோன்” எனும் ஒரு நிர்வாக மையத்தை நிறுவினார்.

இத்தீவை விட்டு வெளியேறும் போது ஆங்கிலேயர்கள் தாம் ஏற்படுத்திய புதிய நிர்வாக ஒழுங்கையும், தமிழராகிய எமது இறைமையையும் சேர்த்து சிங்கள தேசத்திடம் கையளித்து விட்டு வெளியேறிவிட்டனர்.

இவ்வாறு தமிழினத்தின் இறைமையை குறுக்கு வழியில் கையகப்படுத்திக் கொண்ட சிங்கள பேரினவாத தேசம், அன்று முதல் தமிழினத்தின் இருப்பை அழிப்பதையே தனது முழுமுதற் கொள்கையாக கொண்டு இயங்கி வருகின்றது.

ஏறத்தாழ 450 வருடங்களாக தொடராக நிகழ்த்த ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புகளின் போதும் கூட தமிழினமாகிய நாம் எமது தொடர்ச்சியான நிலப்பரப்பினையும் ஆட்புலத்தினையும் பாதுகாத்தே வந்தோம்.

ஆனால் சிங்கள பேரினவாதம், தமிழர்களில் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள பெளத்த மயமாக்குவதை தொடர் நடவடிக்கையாகவே மேற்கொண்டு வருகின்றது.

ஆங்கிலேயர்கள் வெளியேறும் முன்பே 1930 ஆண்டளவில் சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆக்கிரமிப்பானது 1949 ம் ஆண்டு ஆரம்பமான கல்லோயா குடியேற்றத்தின் மூலம் பாரியளவில் திட்டமிட்ட குடியேற்றங்களாக மாறத் தொடங்கின. பின் மகாவலி திட்டத்தின் ஊடக தமிழினத்தின் நில பரம்பல் பாரியளவில் மாற்றப்பட்டு எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாகும் வகையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.

தமிழர் தாயகம் எங்கும் முளைக்கத் தொடங்கிய சிங்கள பெளத்த மயமாக்களை தடுக்க நாம் மேற்கொண்ட அகிம்சை போராட்டங்கள் பலனளிக்காது போகவேயே ஆயுத போராட்டம் ஆரம்பமானது. இப்போராட்டம் வலுப்பெறத் தொடங்கிய பின்னர்தாம் எமது நிலங்களை ஓரளவாவது பாதுகாக்க முடிந்தது. ஆனாலும் எமது உரிமை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு உலக நாடுகளின் துணையுடன் மெளனிக்கப்பட்ட பின்னர் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புகள் மிக வேகமாக தமிழர் தாயகத்தை மீண்டும் விழுங்கத் தொடங்கிவிட்டது.

சிங்கள பெளத்த மக்கள் எவருமே வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து பெளத்த விகாரைகளை அமைத்து, அதனூடாக சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல்பாடுகள் மிகவேகமாக நடைபெற்று வருகின்றது.

இன்று தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நேரடி நெறிப்படுத்தலில் நில அபகரிப்பை பல்வேறு வடிவங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கு மேலதிகமாக சிறிலங்காவின் சிங்கள ஆயுதப்படையினரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நிலையாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

தனி தமிழ் பிரதேசமாக இருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று சிங்கள ஆக்கிரமிப்பினால் இன்று எமது பெரும்பான்மையை இழந்து நிற்கின்றோம்.

அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் தமிழினம் ஓரம் கட்டப்பட்டு எமது நிலங்களையும் இழந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் மயிலைத்தானை-மாதவனை தமிழரின் மேய்ச்சல் தரை நிலங்கள் உட்பட பல பகுதிகளை ஆக்கிரமிக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் தமிழரின் நிலங்களை விழுங்கிய சிங்கள பேரினவாத பூதம், வடமாகாணத்தில் எமது நிலங்களை விழுங்குவதில் இன்று தீவிரமாக உள்ளது. வவுனியாவில் எல்லைப்புற கிராமங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும், கரையோர கிராமங்களும் தொடராக ஆக்கிரமிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் கோவில், கன்னியா வெந்நீர் ஊற்று உட்பட்ட சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு தளங்களை வடக்கு-கிழக்கு எங்கிலும் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. தற்போது வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலத்தை சிங்கள தேசத்தின் சட்டத்தினூடாக அபகரிப்பதற்கு முனைந்து வருகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையிலும் தமிழினத்தின் தொடர்ச்சியான புவியியல் ரீதியான இனப்பரம்பலை மாற்றியமைப்பதினூடாக ஐ.நாவின் சுயநிர்ணய சாசனத்தில் வரையறுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்திற்குரிய தகைமையை தமிழினம் இழக்கச் செய்வதில் சிங்கள பெளத்த பேரினவாதம் மும்முரமாக உள்ளது.

தமிழினம் தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதில் சிங்கள தெளிவாக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றது. எமது நிலங்களை நாம் பாதுகாக்க தவறுவோமேயானால் தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

வடக்கு கிழக்கு எங்கும் பரந்து வாழும் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகள், பொதுமக்களாக கூடியுள்ள நாம், இன்று முன்வைக்கும் கோரிக்கையாவன

1. வலிகாமம் வடக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் அபகரிக்கப்பட்ட, அபகரிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து காணிகளும் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.

2. தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ஆயுத படைகள் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.

3. தமிழினத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது. தமிழ் மக்களுக்கான நிரந்திர அரசியல் தீர்வு தொடர்பான தீர்மானங்களை சிங்கள அரசோ, ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கூட தீர்மானிக்க முடியாது. ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களே தீர்மானிப்பதற்கான வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நாம் எமது பாதுகாப்பு அரண்களை இழந்து சிங்கள பெளத்த அரச பேரினவாதத்தின் ஆயுதமுனையின் முன் நிராயுதபாணிகளாக நிற்கின்றோம்.

எமது இந்த நிலைக்கு எமது அயல் நாடான இந்தியாவும் சர்வதேசமும் பொறுப்பு கூறவேண்டிய நிலையிலேயே உள்ளார்கள். இந்த பொறுப்பு நிலையில் இருந்து இவர்கள் உரிய தீர்வினை இவர்கள் பெற்றுதராது, இந்நிலை தொடர் கதையாகி, நாம் தொடர்ந்தும் ஏமாற்றபட்டு, எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றுள்ளது.