பொது வேட்பாளராக களமிறங்கும் ரணிலுக்கு சஜித்தும் ஆதரவளிக்கலாம் – ரவி கருணாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது, அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

அதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சார்பற்ற பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டினை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வல்லவரான அவருடைய அர்ப்பணிப்பையும், சேவையையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அவருக்கு பகிரங்கமான ஆதரவை வெளியிட வேண்டும் என்று கோருகின்றோம்.

விசேடமாக சஜித் பிரேமதாச கூட கட்சிசார்பற்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அவரை ஆதரிப்பதற்கு எவ்விதமான தடைகளையும் நாம் ஏற்படுத்தப்போவதில்லை.

தற்போதைய சூழலில் நாட்டின் வரிசையுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை விரைந்து பொருளாதார முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஆகவே அவருடைய அர்ப்பணிப்பான அரசியல்சேவை தொடர்வதன் ஊடாகவே நாட்டை மீண்டும் நிலைக்கு கொண்டு வரமுடியும் என்றார்.

புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என சஜித், பிரசன்ன சபையில் வாக்குவாதம்

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து, நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதமகொறடா தெரிவிக்கையில், புள்ளி போட்டுக்கொள்வதற்காக அவசியமற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவ்வாறு கேள்வி கேட்கவேண்டும் என்றால், பிரத்தியேகமாக கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதற்கு பதில் வழங்குவார் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், நான் மக்களுக்காகவே இந்த விடயத்தை முன்வைத்தேன். எனது தனிப்பட்ட எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் மக்களின் பணத்தில் நடு்க்கடலில் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் எமக்கும் கருத்து தெரிவிக்க முடியும். உங்கள் சகோதரி திருட்டு பணம் மாற்றியபோது, அந்த சம்பவத்தில் இருந்து அவரை பாதுகாத்தது, மஹிந்த ராஜபக்ஷ் என்பதை மறந்துலிட வேண்டாம்.அது பொருளாதாரத்துக்கு பாதிப்பான விடயம்.

அதேபோன்று உங்கள் தந்தைதான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இருந்தார். இதுபோன்று எங்களுக்கும் தெரிவிக்க முடியும் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், புலிகளுக்கு பணம் வழங்கியது யார் என்பது தொடர்பில் பொது மக்கள பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யார் பணம் வழங்கியது. யாருடைய பணத்தை வழங்கியது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடக் நானோ எனது குடும்பத்தில் வேறுயாரும் திருட்டுப்பணம் மாற்றியதில்லை. இவ்வாறு பொய் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம். அதனை நான் பொறுப்புடனே தெரிவிக்கிறேன், அதனால் துறைமுகத்துக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு விருந்துபசாரம் நடத்த முடியும் என்பது தொடர்பில் பதிவளிக்க வேண்டும் என்றார். என்றாலும் இதுதொடர்பில் பதிலளிக்கவில்லை.

மதிப்பீடுகளை மேற்கொள்ளாது அரசாங்கம் வற்வரியை அதிகரித்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வற்வரியை நூற்றுக்கு 18வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு முறையாக பதில் தெரிவிக்காமல் இருக்கிறது.

ஏனெனில் வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்த மதிப்பீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம் செய்திருக்கிறது.

வற்வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வற்வரி உயர்வால் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் வற்வரி அதிகரிக்கப்பட்டபோது பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.

லசந்தவைக் கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சஜித் கோரிக்கை

”ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”15 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம் என கடந்த தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பலர் வாக்குறுதியளித்திருந்த போதிலும் யாரும் அதனை நிறைவேற்றவில்லை.

லசந்த தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அஞ்சாதும் செயற்பட்டவர் ஆவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்ய நேரிட்டது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியவர் லசந்த விக்கிரமதுங்க. எனவே லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப் போவதில்லை – சஜித் பிரேமதாச

ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஒரு சில பொய் செய்திகளை பிரசாரப்படுத்திவரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடமிருந்து தரகுப்பணம் பெற்றுக்கொண்டு, ரணிலும் சஜித்தும் இணையப்போவதாக பிரசாரம் செய்து வருகின்றன.

இது உண்மைக்கு புறம்பான செய்தி. ரணலும் சஜிதும் ஒரு போதும் இணையப்போவதில்லை என்ற இந்த செய்தியை இந்த சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டின் வளங்களை மீள கொண்டு வரும் பொறிமுறை அவசியம் – சஜித் பிரேமதாச

நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்நாட்களில் தூக்கமில்லாமல் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும், வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தூக்கமில்லாமல் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம், கொரோனா கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற பிரச்சினையைக் கையாண்டது. இப்பிரச்சினையில் தலையிட்டால் சிங்கள பௌத்த வாக்குகள் பறிபோகும் என்று கூறி இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது. நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

இந்த பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட சரியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. தேசிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளுக்காக வீதிக்கிறங்கினோம். யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று எடுத்த தீர்மானம் முற்றாக இனவாத தீர்மானமாகும். தற்போது அதனை அனைவரும் உணர்ந்துள்ளனர். பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் மத தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டு பயணங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பில் தெரிவிக்கப்படடது. எத்தனை பேரை அழைத்துச்சென்றாலும் அவர்களுக்கு அரசாங்கம் செலவழிக்கிறது. அவ்வாறு செலவழிக்கப்பட்டதன் பெறுபேறு என்ன என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் தொடர்பில் முடியுமானால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் கண்டறிப்படும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார்.

அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ந்தும் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (30) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த சபையில் பல தடவைகள் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னர் எதுவும் இடம்பெறவில்லை.

தாக்குதல் தொடர்பில் ஆராய குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என சபாநாயகரான நீங்கள் தெரிவித்தீர்கள்.

அமெரிக்க பென்டகன் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கு ஒத்ததாக எதிர்க்கட்சியின் தலைமையில் விசாரணை குழு அமைப்பதே யோக்கியம் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ் அதிகாத்துக்கு வரும்போது இதன் சூத்திரதாரிகளை தேடுவதாகவே தெரிவித்தார்.

அதேபோன்று ஸ்கொட்யாடை பயன்படுத்திக்கொண்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று இதுதொடர்பாக நிச்சயமாக விசாரணை மேற்கொள்வதாக ஜேர்மன் ஊடகமொன்றுக்கும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக மறைக்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் பேராயர் கர்தினால், கத்தோலிக்க சபை சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே உயிர்த்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் மன்னிப்பு கிடையாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

அதேபோன்று பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடிரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கிய எவருக்கும் மன்னிப்பு இல்லை.

அதேபோன்று இந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தங்களின் கடமை பொறுப்பை புறக்கணித்த எவருக்கும் பாதுகாப்பும் இல்லை சந்தர்ப்பமும் வழங்கப்படாது.

ஏனெனில் இந்த தாக்குதல் காரணமாக பேராயர் கர்தினால் உட்பட கத்தோலிக்க மக்கள் பாரிய வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் ஊடாகவே எனக்கும் தந்தை இல்லாமல் போனது.

அதனால் இந்த பயங்கரவாதத்துக்கு எமது நாட்டில் இடமில்லை. பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு கடமை ரீதியாக தங்களின் பொறுப்பை புறக்கணித்து செயற்பட்ட எவருக்கும் நாங்கள் மனிப்பு வழங்குவதில்லை.

அவர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவோம். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள யாரையும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு துராேகம் இழைக்கப்போவதும் இல்லை.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்ற விடயத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

Posted in Uncategorized

அமைச்சரவையில் பாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோசடிகளை வெளிப்படுத்திய நபரை விளக்கிவிட்டு மோசடி குழுவினரை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் என்னுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

இதன் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சரை வரவழைத்து இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீடுகளுடன் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே நான் அவரை அழைத்தேன்

நான் கிரிக்கெட் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே செயற்பட்டேன்.

அவ்வாறு இல்லாமல் ரொசான் ரணசிங்கவை இணைத்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக நான் அவரை அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் என்னை சந்தித்ததன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களும் என்னை வந்து சந்திக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி எதிர்த்தரப்பினரை சாடுகிறார். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம். அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். ஜனாதிபதியின் தீர்மானங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்தது என்று குறிப்பிட முடியாது. நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறக்கூடாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. சபைக்கு பொருந்தாத, வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி ஆளும் தரப்பின் உறுப்பினர்களை சாடுகிறார், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்புவதை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.