முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
செஞ்சோலை வளாகம்
செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம்
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை
செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் /- வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுச்சுடர் ஏற்றி, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) மதியம் 12 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.