கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்

விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.

அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும்.

அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அங்கே இசை நிகழ்ச்சிகளும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெசாக் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது? சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் திரண்ட மக்களை விட சிங்கள பௌத்த விழா ஒன்றில் பெருந்திரளான தமிழ்மக்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

அதைவிடப் பெருந்தொகையானவர்கள் ஒரு ஊரின் இந்திர விழாவில் பங்கு பற்றியிருக்கிறார்கள். அந்த ஊர் எதுவென்று பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிறந்த ஊரும், ஆயுதப் போராட்டத்தில் அதிக தொகை தியாகிகளைக் கொடுத்த ஊரும் ஆகும். இதுதான் யாழ்ப்பாணத்தின் ஆகப்பிந்திய மூன்று காட்சிகள்.

தையிட்டி விகாரைக்கு எதிராக குறைந்தளவு மக்களே திரண்டமைக்கு என்ன காரணம்? அந்த போராட்டத்திற்கான அழைப்பை தமிழ்த் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பு விடுத்திருந்தது.

அதை ஒரு பொதுக் கட்டமைப்பு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றது. அந்தப் பெயரை முன்னணி ஏற்கனவே பயன்படுத்தியுமிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து அந்த அமைப்பை வித்தியாசப்படுத்துவதற்காக பெயரில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் அங்கே திரண்டு வரவில்லை. அதற்கு யார் பொறுப்பு? அழைத்த கட்சி பொறுப்பா? அல்லது வராத மக்கள் பொறுப்பா?

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ஒரு கட்சி அழைத்த ஆர்ப்பாட்டங்களை விடவும், சிவில் சமூகங்களின் தலைமையில் பல கட்சிகள் அழைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு சனம் திரள்கிறது.

பொங்கு தமிழ், எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி என்று உதாரணங்களைக் கூறலாம்.

ஒரு கட்சி அழைக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தொகையான மக்கள் வருவது என்றால், அந்தக் கட்சிக்கு கிராம மட்டத்தில் பரவலான கட்டமைப்புகள் இருக்க வேண்டும். முன்னணியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை.

மிகக் குறுகிய கால அழைப்புக்குள் அவ்வளவு தொகை மக்களைத் திரட்ட முடியாது. அப்படித் திரட்டுவதென்றால் அந்தப் போராட்டத்திற்கான காரணம் மக்கள் மத்தியில் அதிகம் நொதிக்க வேண்டும். முன்னணி விவகாரத்தை பொலிஸாரோடு ஒரு மோதலாக மாற்றியது.

எனினும் மக்கள் மத்தியில் நொதிப்பு எதுவும் நிகழவில்லை. அதனால் மக்களும் அங்கே பெரியளவில் போகவில்லை. போராட்டத்தைத் தொடங்கிய அன்றிரவு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மற்றொருவருமாக குறைந்த தொகையினர்தான் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த நாளும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அங்கே காணப்பட்டார்கள்.

அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்களில் குறைந்தளவு மக்கள்தான் கலந்து கொள்கிறார்கள்.

இதில் வவுனியாவில் நடந்த ஊர்வலத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குபடுத்திய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியிலும் பெரிய அளவில் மக்கள் பங்களிக்கவில்லை.

அந்தப் பேரணியின் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பே காணப்பட்டது. அண்மை வாரங்களாக நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்ட சிறு திரள் போராட்டங்கள்தான். அல்லது ஒரு நாள் கடையடைப்புகள்தான்.

அரசாங்கத்துக்கு நோகக்கூடிய போராட்டங்கள் அவையல்ல. உலக சமூகத்தை தம்மை நோக்கி ஈர்க்கத்தக்க சக்தி அவற்றுக்கு குறைவு. தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை  வெளிக் கொண்டு வந்தது மட்டும்தான் அவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

தையிட்டியிலும் அதே நிலைமைதான். தையிட்டி விகாரை விவகாரமானது முன்னணி தலையிட்ட பின் சூடு பிடித்தது. ஆனாலும் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முன்னணியால் முடியவில்லை. அது ஏறக்குறைய ஒரு கட்சிப் போராட்டம்தான்.

போராட்டம் தொடங்கிய மறு நாள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கே காணப்பட்டார்கள். ஆனால் அது “பிரசன்ற் மார்க்” பண்ணும் வேலை தான். அது ஒரு முழுமையான பங்களிப்பு அல்ல. அதன் பின் நடந்த போராட்டங்களில் ஏனைய கட்சிகள் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை.

அவ்வாறு ஒத்துழைப்பு நல்கத்தக்க நல்லுறவை முன்னணி ஏனைய கட்சிகளோடு பேணவும் இல்லை. தன்னை ஒரு தூய தேசியவாத கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முன்னணி, ஏனைய கட்சிகளை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், வெளிநாடுகளின் கைக்கூலிகள், ஏஜென்ட்கள் போன்ற வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகிறது.

அதனால் ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் அக்கட்சிக்கு நடைமுறையில் வரையறைகள் உண்டு.

அதற்காக ஏனைய கட்சிகள் பரிசுத்தம் என்றில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்த கடையடைப்பில் ஏனைய ஏழு கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.

ஆனால் அந்தத் திரட்சி விசுவாசமானது அல்ல. ஏனென்றால் தமிழரசுக் கட்சி தனது முன்னாள் பங்காளிக் கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என்றும், போதைப்பொருள் வித்தவர்கள் என்றும், ராணுவச் சோதனைச் சாவடிகளில் முகமூடி அணிந்து தலையாட்டியவர்கள் என்றும்,கா ட்டிக் கொடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தது. எனினும் தேவை என்று வந்த பொழுது அந்தக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக திரண்டு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

ஆனால் முன்னணி அவ்வாறான உறவுகளுக்குத் தயாரில்லை. எனவே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அல்லது எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றால் ஏனைய கட்சிகளை நம்பி முன்னணி அதில் களமிறங்க முடியாது.

தமிழ் சிவில் சமூக மையத்தைத் தவிர ஏனைய, குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் முன்னணிக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக பொதுக் கட்டமைப்புகளைக் குறித்து அண்மையில் ஓர் ஊடகத்துக்கு கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டியில் அவர் பெரும்பாலான பொதுக் கட்டமைப்புகளை நிராகரித்திருந்தார்.

அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் இயக்குகிறார்கள், வெளிநாட்டு உளவு அமைப்புகள் இயக்குகின்றன என்ற பொருள் தரும் விதத்தில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது.

அதன்படி பொதுக்கட்டமைப்புகளையும் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னரும், அன்னை பூபதியின் நினைவிடத்திலும் பொதுக்கட்டமைப்போடு முன்னணி முரண்பட்டது. இந்த மோதல்கள் வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏற்கனவே ஒரு பொதுக் கட்டமைப்பு அந்த நினைவு கூர்தல் தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறு நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்புகளோடு முரண்படும் முன்னணியானது, எதிர்காலத்தில் பொதுக் கட்டமைப்புகளோடு இணைந்து மக்களை அணி திரட்டும் வாய்ப்புகளும் மங்கலாகவே தெரிகின்றன.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் திரட்ட முடியாமல் போனமை என்பது தனிய முன்னணியின் தோல்வி மட்டுமல்ல. அந்த விகாரை விடயத்தில் தொடக்கத்தில் இருந்தே மெத்தனமாக இருந்த, அல்லது வேறு உள்நோக்கங்களோடு அதை கண்டும்காணாமலும் விட்ட பிரதேச சபைத் தவிசாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.

அப்பொழுது கூட்டமைப்பு இப்பொழுது தமிழரசுக் கட்சி. இதில் தமிழரசு கட்சிக்கும் குற்றப் பொறுப்பு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விகாரை கட்டப்பட்டு வருவது எல்லாருக்குமே தெரியும். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரதேச சபை தவிசாளர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்பது மேலதிக தகவல்.

விகாரை படிப்படியாக கட்டப்பட்டு 100 அடிவரை உயர்ந்த பின்தான் எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தது என்பதே தமிழரசிகளின் கையலாகாத்தனம் தான்.

முன்னணி அதைத் தன் கையில் எடுத்து போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியாமல் போனதும் அக்கட்சியின் பலவீனம்தான். தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் மீதுந்தான் கட்டப்பட்டிருக்கிறது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெடுக்கு நாறி மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக சரத் வீரசேகர மிரட்டல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

நேற்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இன்று ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின் பொங்கலை வாங்கி உண்டனர்.

பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, இன்று அங்கு கடுமையான மழை பெய்வதால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்.மக்களை முன்னணியினர் இனியும் ஏமாற்ற முடியாது; கட்டி முடிக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக ஏமாற்று நாடகம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏமாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற்தடவையாக இங்கு நடாத்திக் காட்டி இருந்தோம்.

எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பு- நான் நேரடியாகவே கூறுகின்றேன்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த கர்த்தாலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நடாத்திய கர்த்தாலை எள்ளி நகையாடினார்கள்.

தமிழ் மக்களின் உணர்வினை எள்ளி நகையாடினார்கள். அதனுடைய விளைவு இன்று தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏன் இந்த கர்த்தாலை நடாத்தினோம் என்றால் அண்மையில் நாவற்குழி ஜம்புகோள பட்டினம், குருந்தூர் மலையில் விகாரைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அத்தோடு கலாச்சார சின்னங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் இருப்பு அழித்தொழிக்கப்படுவதற்கு எதிராக எமது கண்டனத்தினை தென்னிலங்கைக்கு பதிவு செய்வதற்குமாக சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்ப கட்டமாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பரிபூரண வெற்றியாக அமைந்திருந்தது.

அதனை எள்ளி நகையாடி அந்த கர்த்தாலுக்கு அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று தையிட்டியிலே கட்டி முடித்து கலசம் வைக்கப்பட்டிருக்கும் விகாரையினை அகற்றுவற்கு நாங்கள் போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.

அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தினை தையிட்டியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.

சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்.

மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

வருமுன் காக்கும் பொறிமுறைகளை தமிழ்த் தரப்பினர் ஒருமித்துக் கையாள வேண்டும்; ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க இதுவே வழி – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

தையிட்டி விகாரை கட்டி எழுப்பப்பட்டுள்ள விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மாகாண சபை முறைமை முடிவுக்கு வந்த பின்னர் இதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. தனியார் ஒரு சிலருக்கு சொந்தமான காணி நிலங்களிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. ஒரு சில உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதற்கு ஆர்வமாக முயற்சி செய்த பொழுதிலும் சரியான தரப்பினரிடம் அவர்கள் செல்லவில்லை. அதேபோன்று அரசியல் தரப்பிலும் வழக்கு தொடுப்பதற்கு முயற்சி செய்து சில காணி உரிமையாளர்களை சந்தித்த பொழுது அந்த காணி உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. வழக்கு தொடுப்பதற்கு அக்கறை கொண்ட தனியார் காணி உரிமையாளரும் அரசியல் தரப்பினரும் ஒருவரை ஒருவர் இறுதிவரை சந்திக்கவில்லை. அதனால் விகாரை கட்டப்படும் வரைக்கும் தனியாரால் நடவடிக்கை எடுக்க முடியாத அல்லது அரசியல் தரப்பை நாட முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பது துரதிஷ்டமே. இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு பொறிமுறை மிக அவசியமாகிறது.

மாகாண சபைக்கான காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி பலமான கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எமது கோரிக்கையின் பிரதான நோக்கம், அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் இப்படியான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும், அதை எம்மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறிமுறையாக கையாள வேண்டும் என்பதே. அதை ஒருபோதும் அரசியல் தீர்வாக நாம் கோரவில்லை.

அரசியல் முதிர்ச்சியற்ற, தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள அபாயத்தை உணராத சில தரப்புக்கள் அதை நாங்கள் அரசியல் தீர்வாக கோருகிறோம் என்று மக்களை தவறாக திசை திருப்பி தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இனியாவது நிலைமையை புரிந்து கொண்டு நமக்கான பொறிமுறைகளை வகுக்கவும், இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி அதைப் பொறிமுறையாகக் கையாளவும் தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும்.

ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்க உரைகளை வழங்குவதும் கட்சி நலன்கள் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களை தவறாக திசை திருப்பி வழிநடத்த முற்படுவதும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உரம் சேர்க்குமே தவிர தமிழ் மக்களை காப்பதற்கு உதவாது. இனியாவது தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம்மை காக்கும் பொறிமுறைகளை வகுத்துக் கொள்ளவும் இருப்பவற்றை சரியாகக் கையாயவும் முன் வர வேண்டும் என கோரி நிற்கிறோம். அதுவே நிலையான அரசியல் தீர்வு வரும் வரை எமது இனத்தின் இருப்பைத் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சுமந்திரன், சிறிதரன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழில் சொந்தமாக காணி வாங்கி விகாரை அமைக்க விண்ணப்பித்துள்ள பிக்கு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும், விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதனால், விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலய சிலைகள் மீள் பிரதிஷ்டை

வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதகுருமார்கள், அரசியற் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் மீள ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளர் ந.கருணாநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.