வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.