இலங்கையின் மறுசீரமைப்புக்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கத்தயார் – அமெரிக்கா

முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் அனைவரும் இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

சீனாவினால் கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்து, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி தமது பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்கு இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்கள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையானது சுமார் 75 வருடகாலமாக அமெரிக்காவுடன் இராஜதந்திரத்தொடர்புகளைப் பேணிவரும் நிலையில், நாட்டில் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஆட்சிநிர்வாகம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான மறுசீரமைப்புக்கள் ஆகிவற்றை உறுதிசெய்வதை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்கத்தூதுவர் உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக  இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்டோ அதிகாரத்துடன் அதிகளவு பங்குகளை கொண்டுள்ளது யார்? 2020 இல் 3 டிரிலியன் டொலர்களிற்கு மேல் டொலர்களை அச்சடித்தது யார்? இலங்கை வங்குரோத்து நிலையை அடைத்ததும் உடனடியாக தனது நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தது யார் என்பதே இந்த கேள்விகள்

சீனாவிடமிருந்து அரிசி டீசல் மருந்து பாடசாலை சீருடைகளிற்கான துணி போன்றவற்றை இலங்கை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் இலங்கை மக்களிற்கு உதவுவது என்ற வாக்குறுதியிலிருந்து அமெரிக்கா எவ்வாறு பின்வாங்கியுள்ளது என்பது குறித்து பொதுமக்கள் அறிய விரும்புவார்கள்.

சீனா எந்த நிபந்தனையும் அற்ற அர்ப்பணிப்பு செயற்பாடுகளை பின்பற்றும் அதேவேளை அமெரிக்க உதவிக்கு ஏன் முன்நிபந்தனைகள் என கேள்வி கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள்.

சுயபரிசோதனையை மேற்கொள்வதற்கு பதில் பாழாக்கிய குற்றச்சாட்டுகளை எங்கள் அமெரிக்க சகா முன்வைப்பது கபடநாடகம் அல்லவா?

இலங்கை ஒரு நல்ல சூழ்நிலையில் இருப்பதற்கு அவசியமான தீர்க்ககரமான தீர்மானங்களை ஏன் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் எடுக்கவில்லை.

அல்லது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கசப்பை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள் அச்சிடும் மிகப்பெருமளவு டொலரிலிருந்து ஏன் அவர்கள் இலங்கைக்கு நிதியை வழங்கவில்லை.

வெளிநாட்டு விரிவுரையின்றி  எங்களை பாழ்படுத்துபவர்கள் யார் என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய புத்திசாலிகள் இலங்கை சீன மக்கள் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கடற்படை கப்பல் கையளிப்பு நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பங்கேற்பு

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அவர்களும் பங்கேற்றார்.

கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். ஜனாதிபதியும், அமெரிக்க தூதுவரும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டனர்.

இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ´Hamilton Class High Endurance Cutter´ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்​​நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.

P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.

கருவுடன் அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைவருக்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைதன்மையின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்ததாகஅவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில்அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள வேண்டுகோள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரஜைகளின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதற்கான தளத்தினை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை அமைதியாக பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.