இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.

சீனாவுடனான உறவு குறித்து இந்தியா கவலைப்படவேண்டியதில்லை – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இலங்கை இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக கருதுவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூர்ய 2048ம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் உள்ள இலங்கை இந்தியாவின் முன்மாதிரியை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்படவிரும்புகின்றது என ஏன்ஐக்கு தெரிவித்துள்ள அவர் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நாங்கள் உதவிகளை எதிர்பார்க்கவில்லை இணைந்த செயற்பாடுகளையே எதிர்பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு சகாவாக பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக பார்க்கின்றோம் அதன் வெற்றிகதையை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு அபிவிருத்தியடைந்த நாடு என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்தியா அதனை எவ்வாறு சாதித்தது என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் தாரகபாலசூர்ய தெரிவித்துள்ளார்.

நாங்கள.2048 ம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாகமாற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அதிகளவான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு உட்படுகின்றதா என்ற கேள்விக்கு நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடதயார் ,ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாங்கள் விசேட உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்

இந்தியாவுடன் எங்களுக்குள்ளது நாகரீக தொடர்பு ஆகவே இந்தியா சீனாவுடனான எங்களின் உறவுகள் குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை எனவும் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் மாத்திரமல்ல நாங்கள் மேற்குலகத்துடனும் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு நாங்கள் ரஸ்யாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் மத்திய கிழக்குடன் நாங்கள் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு எங்களிற்கு பாரிய அரசியல் அபிலாசைகள் இல்லை நாங்கள் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கப்போவதில்லை இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதையும் இலங்கை மக்களினது வாழ்க்கை தரம் உயர்வதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னர் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தாரகபாலசூர்ய நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் அரகலய தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவித்தீர்கள் நீங்கள் மிகப்பெரும் வரிசையில் மக்களை பார்த்திருப்பீர்கள் – நாலுகிலோமீற்றர்தூரத்திற்கு எரிபொருள் மருந்து உணவிற்காக மக்கள் வரிசையில் காத்து நின்றனர் இந்த நிலையை நாங்கள் வேகமாக மாற்றிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எங்கள் நண்பர்களின் உதவியுடன் இதனை மாற்றினோம் குறிப்பாக பிரதமர் மோடியின் அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அந்த நெருக்கடியான தருணத்தில் உதவியமைக்காக இந்திய மக்களிற்கும் பிரதமர் மோடிக்கும் மிகவும் நன்றி உடையவர்களாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னர், சாந்தனின் வேண்டுகோளை அடுத்தும், உயா் சிகிச்சைக்காகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது

எட்கா உடன்படிக்கை நிறைவேறின் இந்தியர்கள் நிரந்தமாக குடியேறுவர் – விமல் வீரவன்ச

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து அண்மையில் இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து இந்தியாவில் ஆற்றிய உரையை ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது ‘எதனையும் குறிப்பிட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 14வது குற்றவாளியாக லிங்கம் என அழைக்கப்படும் ஆதிலிங்கம் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதி செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக விநியோகிக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட சட்டவிரோதப் பணத்தை வசூலிக்கும் முகவராகவும் அவர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆதிலிங்கம் என்பவர் தமிழ்த் திரைத் துறையில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் தமிழ் எம்.பி. க்கள், புத்திஜீவிகள், அரச உயரதிகாரிகளை சந்தித்த இந்தியத் தூதுவர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று இரவு 7:30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ந.ஸ்ரீகாந்தா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் காங்கேசன்துறைக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

மடு தேவாலயம் சென்று வழிபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (15) மன்னாரில் உள்ள மடு தேவாலயத்துக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்தியா – இலங்கை நிர்வாக, அரச அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்த உத்தியோகபூர்வ பேச்சு

இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் இலங்கை பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் தலைமையில் நிர்வாக மற்றும் அரச அதிகாரிகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இரு தரப்பு பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை இன்று (15) புது டில்லியில் நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவில் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக (SLIDA) பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவே ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

இதேவேளை, இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் மூத்த அதிகாரிகள், என்.பி.எஸ். ராஜ்புத், புனித் யாதவ் மற்றும் ஜெயா துபே ஆகியோரும் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மூலம் நடத்தும் நோக்குடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் NCGG இடையில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிமுறைகள் குறித்து இச்சந்திப்புகளின்போது இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் (SLIDA) பணிப்பாளர், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை அதிகாரிகளுக்கான திறன் விருத்தி செயற்றிட்டம் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, பல்வேறு உயர்மட்டங்களில் 1000 அதிகாரிகளுக்கு கலப்பு முறையில் பயிற்சிகளை நடாத்துவதற்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தார்.

இதேவேளை இந்த பேச்சுகளில் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் நிர்வாக மறுசீரமைப்பில் தமது முக்கிய வகிபாகங்கள் மற்றும் பொது நிர்வாகத்துக்கான பிரதமர் விருது திட்டத்தில் தகுதி அடிப்படையில் அங்கீகரித்தல், CPGRAMSஇல் AI/MLஐப் பயன்படுத்துவதன் மூலம் பொதுக் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் பொது குறைகளைக் கையாள்தல் மற்றும் ஒன்றிணைந்த சேவை தளங்கள், அவசியமான இ-சேவை மற்றும் இலத்திரனியல் கட்டமைப்பினதும் அவற்றின் பெறுபேறுகளினதும் வலுவாக்கல் போன்ற முன்னெடுப்புகள் மூலமாக சேவை வழங்கலை மேம்படுத்தல் குறித்த தகவல்களை வழங்கியிருந்தனர்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த கவலையுமில்லை – அனுரகுமார

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தான் அழைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவாகயிருக்கலாம் என்பதை தெரிவித்துள்ள ஜேவிபி தலைவர் தேசியபாதுகாப்பு பொறுப்புணர்வுமிக்க பூகோள அரசியல் ஆகியவற்றிற்கான ஜேவிபியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தனது கட்சியை அழைத்தமைக்கான காரணம் என்னவாகயிருக்கலாம் என்பது குறித்து கருத்துதெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையின் தற்போது காணப்படும் நிலைமை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியை இந்தியா அழைத்ததை பாரம்பரிய செயற்பாடுகளில் இருந்து ஒரு மாற்றம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் புவிசார்அரசியல் நலன்களிற்கு எதிராக இலங்கை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைஅரசியலை உன்னிப்பாக அவதானிக்கின்றது என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி துருவமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் தேவைகளிற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை எந்த தேசத்துடனும்இணைந்துசெயற்படுவதற் ஜேவிபி தயாராகவுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும்; வரலாற்றுரீதியாகமுரண்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் நாடுகளும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் குறிப்பிடத்தக்க மாற்றமடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகஇலங்கையின் தேசிய பாதுகாப்பே இந்தியாவின் கரிசனைக்குரிய விடயம் எனவும்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த அச்சமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்