சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே நடத்தப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் சேவை யாழ்ப்பாணத்திற்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காகத் துறைமுகத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காரைக்கால் இந்தியாவின் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

பயணிகள் கப்பல் சேவை முதலில் காரைக்காலில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோதும், அந்தத் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுவதால், அது பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது. கரித்தூசு அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்தோடு காரைக்காலில் இருந்து சென்னையை அல்லது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை அணுகுவதற்கான போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவானவை என்ற காரணத்தாலும் அந்தத் துறைமுகத்தைத் தடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாகப்பட்டினம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் பயணிகளைக் கையாள்வதற்கு ஏற்றது என்பதுடன் அங்கிருந்து சென்னைக்கு நாளாந்தம் இரு நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன என்றும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைஅடைவதற்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவையை நடத்துவது என்று தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான டெர்மினல் அமைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்துமாறும் இந்திய மத்திய அரசு தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கோரியது. ஆனால், இந்த ஆண்டுக்கான தமது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனி அடுத்த ஆண்டே இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு கைவிரித்துவிட்டது. இதையடுத்து இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கென 9 கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. பயணிகள் டெர்னிமல் பகுதி தயாரானதும் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம்- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி ஏப்ரல் 29 இல் காரைக்கால் படகுச்சேவை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.

திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.

காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி – KKS க்கான படகு சேவையை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவுத் துறையினருக்கான வசதிகளும் மார்ச் மாத இறுதிக்குள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பயணிகளை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும், புறப்படுவதற்குமான சேவையை வழங்குவதற்கு படகுகள் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் பல இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகள் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கப்பல் சேவை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் – யாழ் வணிகர் கழக தலைவர்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமாக வர்த்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுவிக்கிறார்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்

காரைக்கால் – யாழ்ப்பாணம் படகு சேவை தொடங்குவதில் தாமதம்

புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு சேவை அடுத்தமாதம் தொடங்காது. சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் இரு மாதங்களாகும். மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு 5 ஆயிரம் இந்திய ரூபா கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயணியர் படகு சேவை அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது.

வரும் ஜனவரியில் படகு போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதா என்று துறைமுகத் துறை செயலர் ஜவகரிடம் கேட்டதற்கு, “படகு போக்கு வரத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தந்துள்ளது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐந்து நிறுவனங்கள் படகு போக்குவரத்தை நடத்த விண்ணப்பித்தனர். அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து ஒப்புதலை மத்திய அரசு அளிக்கும். படகு சேவைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகள் சோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

படகு சேவையை ஜனவரியில் தொடங்குவது கடினம். தற்போதைய பணிகள் நிறைவடைய இரு மாதங்களாகும். அதன்பிறகு படகு போக்குவரத்து தேதி இறுதி செய்யப்படும். வர்த்தகம் மட்டுமில்லாமல் சுற்றுலாவுக்கும் உகந்ததாக இச்சேவை இருக்கும். குறிப்பாக காரைக்கால் திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவும் நன்கு வளர்ச்சி அடையும்” என்று குறிப்பிட்டார்.

படகு போக்குவரத்து தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது,”காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்தை மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் சென்றடையலாம். பயணக் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர். படகு சேவையில் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். அத்துடன் ஒரு பயணி 100 கிலோ வரை உடமைகளை எடுத்து செல்லலாம்” என்று தெரிவிக்கின்றனர்.