மகாவலி ஜே வலயத்துக்குரிய தகவல்களை அரச அலுவலர்கள் வழங்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஜே வலயத்துக்கு கோப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக ஜே வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலாளர்களிடம் கோரப்பட்டிருந்தன. 37 கிராம அலுவலர் பிரிவுகள் இதனில் உள்ளடங்குகின்றன.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மகாவலி எல் வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வலயத்தில் முல்லைத்தீவில் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகாவலி ஜே வலயத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்குவதில்லையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடப்படும் என நேற்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இநாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 125 ஏக்கர் காடு அழிப்பு : அதிகாரிகள் மெத்தனபோக்கு

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரை இரகசியமாகத் திறந்து வைப்பு; வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் சிங்கள பெளத்தர்கள் வருகை

யாழ்ப்பாணம் – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று காலை 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இரகசியமாக விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

திருகோணமலை ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காணி விமானப்படை முகாமுக்கு வழங்க முயற்சி

திருகோணமலை மாவட்டம் குச்சிவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட பகுதியில் உள்ள 298 ஏக்கர் காணியில் உள்ள ஒலிபரப்புக் நிலையம் மூடப்பட்டு விமான படை முகாம் ஒன்றை நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் இந்த காணி கடந்த 75 வருடகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காணியில் பிரத்தியேக ஒலிபரப்புக் நிலையம் அமைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய பிராந்தியங்களை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர அலைகளை ஒளிப்பரப்புகிறது.

இவ்வாறான ஒலிபரப்பு நிலையம் ஓமானில் உள்ளதுடன் அது தற்போது முழு நேரமும் இயங்குவதில்லை.குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் இந்த அலைவரிசைகளை உலகின் பெரும்பாலான நாடுகள் மதம் மற்றும் ஏனைய பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. தற்போதைய வானொலியின் கீழ் சுமார் 75 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த பகுதி வலுவான அலைகள் இருக்கும் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு வருமானத்தை ஈட்டிக் கொள்ளாத, பயன்படுத்தாத அரச வளங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்த அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைய வானொலி கூட்டுத்தாபனம் முறையான,சிறந்த நடவடிக்கைளை பின்பற்றி கனடா நாட்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சூரிய சக்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கமைய இந்த காணியை இலவச மானியப் பத்திரம் மூலம் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்துக்கு மாற்றி உரிய செயற்திட்டத்துக்கு அமைய வருமானம் ஈட்டவும்,அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத்தை இடைநிறுத்தவும் அமைச்சரவை இரண்டாவது அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மேற்படி விதிவிலக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அனைத்துப் பரிந்துரைகளையும் பெற்றதன் பின்னர் இறுதி எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை காணி அமைச்சு 2023.04.11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்தது.இந்த ஆவணங்களை முறையாக ஆராயாமல்,சுற்றுச்சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தை மூடி விட்டு விமானபடை முகாம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய விமானப்படையின் அதிகாரிகளை நியமித்தார்.

இதனடிப்படையில் விமானப்படையின் குழு ஒன்று 2023.05.03 ஆம் திகதி விமானப்படையின் குழுவினர் திருகோணமலைக்கு சென்று நில அளவை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் படை முகாம்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த பகுதிக்கு மேலதிகமாக விமானப்படை முகாம் ஒன்று தேவையில்லை என சிவில் உரிமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றமை கவனத்துக்குரியது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக சிவில் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கில் 30 க்கும் அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளில் தமிழர் காணிகள் கபளீகரம்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் அங்கு எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுகின்றன எனத்தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விபரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதி காரசபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

 

கெளதாரி முனையில் தனியார் நிறுவனத்துக்காக நில அளவீடு : மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் பிரிவில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு 98 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இன்றைய தினம் (04-04-2023) நில அளவீடு செய்ய முற்பட்டபோது நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின்மை 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித் தேவைகள் உள்ள போதும் இருக்கின்ற போதும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளடங்களாக 98 ஏக்கர் காணியை தனியார் தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் குறித்த அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காணித்தேவைகள் உள்ள நிலையில் தமது பகுதியில் உள்ள காணிகளை வழங்க முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று காலை நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருநாட்டுக்கேணி தமிழர் பூர்வீக காணிகளில் சிங்களக் குடியேற்ற முயற்சி ; மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 03.04.2023 இன்று கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச்சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம், உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.