ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம்.
அடுத்த வாரம் இடம்பெறும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஹொரண பிளாண்டேஷனில் இடம்பெற்றுவந்த பல்வேறு தவறுகள் இடம்பெற்று வந்தன, அதனை நாங்கள் முன்சென்று பேசியும் நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றாேம்.
இதுதொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றது. பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம். இந்த தோட்டத்தில் பிரச்சினைக்கு பிரதான காரணம், அந்த பிரதேசத்தில் 25குடும்பங்கள் இருக்கின்றன.
அந்த குடும்பங்கள் அங்குள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்துவந்தனர். இவர்களில் 5குடும்பம் தோட்டத்தொழிலாளர்கள். ஏனையவர்கள் இவர்களின் பிள்ளைகள். இவ்வாறான நிலையில் அந்த பிரதேசத்தில் வெளியாளர்கள் விவசாயம் செய்வதாக தோட்ட முகாமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு வெளியாட்கள் யாரும் இல்லை. தோட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர்களே அங்கு இருக்கின்றனர். பல்வேறு தோட்டங்களில் இவ்வாறு தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்களை வெளியாட்கள் என ஒதுக்கி, அவர்களை மிருகங்களைவிட மோசமான முறையில் நடத்திவருகின்றன.
இந்த மக்கள் விவசாயம் செய்த இடங்கள் பவவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடி அதனை மீள பெற்றுக்கொடுத்தோம்.
அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக துரைமார்களுடன் கலந்துரையாட முற்பட்டபோதும் அவர்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனால் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தாவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று, தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிலர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் யார் என விசாரித்தபோது குற்றப்புலனாய்வு விசேட பிரிவு என தெரிவித்துள்ளனர்.
இன்று பாடசாலைகளில் ஐஸ் பாேதைப்பொருளை தடுப்பதற்கு முடியாத இவர்கள், தொழிற்சங்க போராட்டத்தை தடுப்பதற்கு அங்குவந்து, தொழிலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும்.
அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் ஹெலீஸ் நிறுவனத்துக்கு கீழ் இருப்பதாகும். இதன் உரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவாகும். நாட்டை பாதுகாப்பதாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்.தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்க முடியாத இவர் எப்படி நாட்டை பாதுகாப்பார்? அத்துடன் இவர் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதேநேரம் ஹொரண பிளாண்டேஷனில் அவர்களின் தொழில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
எனவே தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கி்ன்றனர். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம்.
அத்துடன் ஹொரண பிளாண்டேஷனில் தொழில் புரிந்துவரும் சிவகுமார் என்பவர் மின்சாரம் தாக்கி, கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு பதிலளிக்க யாரும் இல்லை. துரைமார் அவரது மனைவியை இரகசியமாக அழைத்து, சிறியதொரு தொகையை தெரிவித்து, இந்த விடயத்தை கைவிடுமாறு தெரிவித்திருக்கின்றார்கள். தோட்டத்தொழிலாளி என்றால் அவ்வளவு கேவலமா என நாங்கள் கேட்கின்றோம். இந்த விடயத்தை நாங்கள் விடப்போவதில்லை என்றார்.