தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வளங்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு கொடுப்பதிலே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அரசு தற்போதைய பொருளாதார நிலைமை கருதி தேசிய வளங்களை விற்பதும் அல்லது வேறு விதமாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய இரகசியமாக தாங்கள் நினைத்தவாறு ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சரோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களோ முடிவு எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் நிலைமை அருதி அதற்குரிய துறை சார்ந்தவர்களிடம் அனுமதியுடன் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கும் 2009 க்கு பின்பு தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவீனமடைத்து ஒரு இக்ட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் ஒரு நிலையில், தற்போது இருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது நேற்றைய சந்திப்பை ஒழுங்குப்படுத்தி ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருந்தது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது. அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்படக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். ஆனால் நாங்கள் வாக்களித்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவர்களும், நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு, எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. அந்த வகையில் இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

தற்போது ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்பட்டு மூன்று வேட்பாளர்களும் வாக்குகளை எந்த வழியில் பெறலாம் என்று நினைக்கின்றார்கள் தவிர தமிழ் மக்களது புரையோடிப் போய் உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையை காட்டி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர இந்த பொருளாதாரச் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதன் என்ற அடிப்படைத் தன்மையை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தான் இந்த நாட்டின் கையிருப்பு இல்லாமல் போனது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று வேலை சாப்பாடு தருவேன் என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போலீஸ் அதிகாரங்கள் அற்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகின்றார். சஜித் பிரேமதாசாவும் ஒரு வெளிப்படுத்தல் தன்மையுடன் பகிரங்கமாக பேசுவதாக இல்லை.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை தற்போதைய நிலைமையில் தேவைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருந்தன.

இலங்கை தமிழரசு கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் கூடுதலான பெரும்பாலான தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பொது வேட்பாளர் கருத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்

சஜித் 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் – கோ. கருணாகரம் எம்பி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறிசபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 38 ஆவது அஞ்சலி நிகழ்வு அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான அன்னங்கை, கோண்டாவிலிலும் யாழ் ரெலோ அலுவலகத்திலும் இடம்பெற்றது.

தமிழர்கள் ஜனநாயக பலத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிரூபிப்பது அவசியம் – சபா.குகதாஸ் வலியுறுத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலத்தை நிரூபிப்பது அவசியம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப் படவில்லை. இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான்.

ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை.

ஆனால், யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஜனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும். ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.

தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரேபாயமாக ஜனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது.

உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம், பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.

எனவே, இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகவந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(23) இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். அதிபர் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள் அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடாகவே அந்த‌ விடயத்தை செய்யவேண்டும்.

நாளையதினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம் எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலைமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.

இதன்போது தென்னிலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது.

இந்த ஒற்றுமைக்குள் நாங்கள்கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது.

அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம், தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.

ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  11 ஆவது தேசிய மாநாட்டிற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாக தெரிவும் ஜனநாயக முறையில் 23-03-2023 இன்றைய தினம்‌ இடம்பெற்றது.

 

 

 

ரெலோ சுவிஸ் கிளையால் வுவுனியா தாஸ் நகர் முன்பள்ளிக்கு நிதியுதவி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
ரெலோ சுவீஸ்கிளையால்,வவுனியா பூந்தோட்ட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தாஸ் நகர் முன்பள்ளிக்கு
(10.03.2024) ஆசிரியைக்கானா மாதாந்த கொடுப்பனவுமாவட்ட பொறுப்பாளர் புருஸ் (விஜயகுமார்) ஊடாக வழங்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டத்தில் எமது கட்சியினரால் 1990 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட தாஸ் நகரத்தில் உருவாக்கப்பட்ட விபுலானந்தர் முன்பள்ளியின் நிர்வாகச் செலவு மற்றும் இரண்டாவது ஆசிரியைக்கான மாதாந்த கொடுப்பனவு போன்றவை 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சுவிஸ்கிளையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

விபுலானந்தர் முன்பள்ளி, தாஸ் நகரில் அமைந்துள்ளது . இப்பாடசாலையில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.
இந்த கிராமமானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியால் 1990 பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் சிறீ நகர், தங்கா நகர் ,குட்டி நகர், குகன் நகர், பாஸ்கரன் நகர் என ஆறுக்கு மேற்பட்ட குடியேற்ற கிராமங்கள் ரெலோ வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால் அக்காலத்தில் உருவாக்கப்பட்டது.