தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வளங்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு கொடுப்பதிலே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அரசு தற்போதைய பொருளாதார நிலைமை கருதி தேசிய வளங்களை விற்பதும் அல்லது வேறு விதமாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய இரகசியமாக தாங்கள் நினைத்தவாறு ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சரோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களோ முடிவு எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் நிலைமை அருதி அதற்குரிய துறை சார்ந்தவர்களிடம் அனுமதியுடன் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கும் 2009 க்கு பின்பு தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவீனமடைத்து ஒரு இக்ட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் ஒரு நிலையில், தற்போது இருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது நேற்றைய சந்திப்பை ஒழுங்குப்படுத்தி ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருந்தது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது. அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்படக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். ஆனால் நாங்கள் வாக்களித்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவர்களும், நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு, எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. அந்த வகையில் இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

தற்போது ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்பட்டு மூன்று வேட்பாளர்களும் வாக்குகளை எந்த வழியில் பெறலாம் என்று நினைக்கின்றார்கள் தவிர தமிழ் மக்களது புரையோடிப் போய் உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையை காட்டி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர இந்த பொருளாதாரச் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதன் என்ற அடிப்படைத் தன்மையை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தான் இந்த நாட்டின் கையிருப்பு இல்லாமல் போனது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று வேலை சாப்பாடு தருவேன் என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போலீஸ் அதிகாரங்கள் அற்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகின்றார். சஜித் பிரேமதாசாவும் ஒரு வெளிப்படுத்தல் தன்மையுடன் பகிரங்கமாக பேசுவதாக இல்லை.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை தற்போதைய நிலைமையில் தேவைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருந்தன.

இலங்கை தமிழரசு கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் கூடுதலான பெரும்பாலான தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பொது வேட்பாளர் கருத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பேணும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் – கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்து!

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும் அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும்.

அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.

இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம்.

கடந்த சில வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக இழந்து நிற்கிறார்கள்.

மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும்.

நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும் தூண்டப்படுகின்றனர்.

இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.

அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.

இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.

அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது. இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு

“அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது இன்று காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தலைமை உரை,விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான திருமதி செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,  தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா.குகதாஸ், கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – சிறீதரன் எம்.பி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட கைவிசேஷ நிகழ்வைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.

வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்பையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாள சொல்ல முடியும் என தெரிவித்தார்.

கச்சத்தீவு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.

வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர். தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புல் கொடி உறவுகள் பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற(09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கவுள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.

இவர்கள் யாரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசக்கூடியவர்கள் இல்லை. அதைத்தொடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. போர் முடிவடைந்து 14ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். இதனை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களச் சமூகத்துக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வெளிக்கொணரும் முகமாக நாங்கள் ஒரு பொது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிக ளும் இணைந்து பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற பேச்சுகள் கடந்த 6 மாத காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த 7ஆம் திகதி வவுனியாவில் நடந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் அதற்கான முன் முயற்சிகளில் அனைத்தையும் நாங்கள் கூட்டாக எடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

ஒரு பொது வேட்பாளருடைய தேவையை இந்த ஐந்து கட்சிகளும் வலியுறுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை யார் பொது வேட்பாளர் என்பது பிரேரிக்கப்பட வில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரே போட்டியிடுவார். மலையகம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அவர்களுடனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கியமான தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே இதற்கு எதிராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ந. நல்லநாதர் மறைவின் பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை வவுனியா கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இதன்போதே கூட்டணியின் செயலாளர் பதவிக்கான தெரிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரு வருடங்களுக்கு புளொட் அமைப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், மறைந்த மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அண்மையில் காலமானதால், தற்போது அவரது பதவிக்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  11 ஆவது தேசிய மாநாட்டிற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாக தெரிவும் ஜனநாயக முறையில் 23-03-2023 இன்றைய தினம்‌ இடம்பெற்றது.

 

 

 

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்- சபா.குகதாஸ் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் , மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை IMF பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது, சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரயோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பக்தர்களின் சமய வழிபாடுகளுக்கு பொலிசார் இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்த சமய செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மீதும் வன்முறையை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவமானது கண்டனத்திற்குரியது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த கருத்தினை இன்றைய தினம் (9) செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமானது காலங்காலமான சைவ சமய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் (8)சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த பக்தர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன மத நல்லினக்கத்திற்கு பாதகமாக அமையும்

எனவே பொலிசார் எதற்nடுத்தாலும் பொது மக்களிடம் அத்துமீறும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான பூமியில் அவர்களுடைய பாரம்பரிய சமய கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவித்த இந்த செயற்பாட்டை நான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிசார் செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுக்கிறேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்தார்