யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, ​​போரினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குவது குறித்தும் கேட்டறிந்ததாகவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய இராச்சியத்தில் ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கும் எனவும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய இராச்சியத்தில் மறைந்த தலைவர் சிறீசபாரத்தினத்தினம் நினைவஞ்சலி நிகழ்வு

1986 சித்திரை 29 – வைகாசி 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் 300 க்கும் அதிகமான வீரமறவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் (08.05.2024) நேற்றைய தினம் மாலை 6.00 மணிக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலியும் நினைவுப்பேருரைகளும் நடைபெற்றது.

 

பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு – சஜித்துக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து – பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றியளிக்குமா என பிரித்தானிய தூதுவர் சந்தேகம்

அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார்

டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலவேளைகளில் ஜெனீவா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என்ற கேள்வி தனக்கு எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கேள்வி ; சமீபகாலங்களில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஈடுபாட்டை அதிகரித்துள்ளதை காண்கின்றோம்-இரு நாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவின் புதிய திசை எது?

பதில் ; எனக்கு இரு தரப்பு உறவில் புதிய திசை குறித்து எதுவும் தெரியாது, எனினும் எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நீண்டகாலமாக வலுவான பிணைப்பு காணப்பட்டது இது 75வருட கால இராஜதந்திர உறவுகளை சமீபத்தில் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் கல்விகற்கும் இலங்கையர்கள் மத்தியில் பல தொடர்புகள் இருக்கலாம்,இது புரிய திசை தொடர்பானதல்ல மாறாக கொவிட்டும் பொருளாதார நெருக்கடிகளும் எங்கள் உறவுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணரச்செய்துள்ளன.

இந்த நெருக்கடிகளில் இருந்து இலங்கை மீள்வதற்கு பிரிட்டன் பெரும் பங்களிப்பை வழங்கியது.

இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் ஆகவே இது உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பானது தவிர புதிய திசை குறித்தது அல்ல.

கேள்வி ; இரு தரப்பு உறவுகள் குறித்து வரும் இலங்கையர்கள் ஜெனீவா செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசுகின்றனர் – ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று இலங்கை நல்லிணக்கத்திற்கான சொந்த முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை சர்வதேச தலையீடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வந்துள்ளது- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை எடுத்துள்ள சமீபத்தைய நடவடிக்கைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றதா?

பதில் ; நாங்கள் இணை அனுசரணை நாடுகளின் ஒரு பகுதி என்பது உண்மை, இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா கனடா மலாவி ஆகிய உட்படபல நாடுகள் தலைமை வகிக்கின்றன .

சிலவேளைகளில்இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என ?

மனித உரிமை நிபுணர்கள் செயற்பாட்டாளர்களிடம் நீங்கள் பேசினால் அவர்கள் சீர்திருத்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாராம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கான விடயங்களில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பங்களிப்பில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இலங்கை மீது தனது கருத்துக்களை திணிப்பது சர்வதேச சமூகம் இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் வெளியான அறிக்கையை வாசித்துபார்த்தால் அது அரசாங்கம் முன்னேற்றம் காண்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றது அதேவேளை இன்னமும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டி உள்ளதை வலியுறுத்துகின்றது.

நான் மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன் இருதரப்பு உறவுகளில் மனித உரிமைகள் மிகவும் முக்கியமான விடயம்.ஆனால் அது மாத்திரம் இருதரப்பு உறவுகளுக்கான விடயமல்ல. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பிரிட்டன் வழங்கிய பங்களிப்பு குறித்து நான் முன்னர் தெரிவித்தேன்.இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பிரிட்டன் இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது.

இருதரப்பு உறவுகளில் கருத்துவேறுபாடுகள் எழக்கூடும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் தீர்மானம் குறித்து கருத்துடன்பாடு ஏற்பட்டதும் நாங்கள் 2019க்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு திரும்பலாம் என நான் கருதுகின்றேன்.

கேள்வி ; உண்மை நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது- இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் ; இலங்கை எடுத்துள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்றுள்ளோம்.

நான் இலங்கைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன ஆகவே இது எனக்கு புதிய விடயம்.

இலங்கையில் பல வருடங்களாக மனித உரிமைகள் விடயங்களில் பணியாற்றிய மனித உரிமை நிபுணர்களுடன் நீங்கள் பேசினால் அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிய கடிதங்கள் என்பவற்றை வைத்து பார்த்தல் இந்த விடயம் குறித்து போதியளவு கலந்தாலோசனைகள் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது புலனாகின்றது.

இந்த விடயங்கள் குறித்து கடந்தகாலங்களில் ஆராய்ந்த குழுக்கள் உள்ளன என தெரிவிக்கும் அவர்கள் இந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியாகவில்லை பகிரங்கப்படுத்தப்படவி;லலை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் இந்த விடயத்திற்கு புதியவன் என்ற அடிப்படையில் நான்இதனை இவ்வாறோ உணர்ந்துகொள்கின்றேன்.

அரசாங்கத்தின் முயற்சிகளை நான் வரவேற்கும் அதேவேளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் நான் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது.

கேள்வி ; இலங்கைக்கு நீங்கள் வந்து ஆறுமாதங்களாகின்றது – நிலைமை எவ்வாறானதாக காணப்படுகின்றது?

பதில் ; இலங்;கையில் எனது குறுகியகாலத்தின் போது நான் கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களின் கருத்தினையே நான் வெளிப்படுத்துகின்றேன் இலங்கை அரசாங்கம்முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்பவர்கள் உள்ளனர் அதேவேளை பல விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது.

யுத்தத்தின் பாரம்பரியம் குறித்த விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம்குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன -நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து சர்வதேச சமூகம் பல கரிசனைகளை கொண்டுள்ளது.

கேள்வி ; அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளை உள்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது – சட்டமூலத்தின் புதிய வடிவம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் ; உயர் நீதிமன்றம் இந்த சட்டமூலம் குறித்து தனது மதிப்பீட்டினை தெரிவித்துள்ளதால் நான் இது குறித்து பின்னரே உங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டும்.

அதனை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களிற்கு கிடைக்கவில்லை.

கேள்வி ; ஜெனீவா தீர்மானத்தினை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்தினர் வரவேற்றுள்ளனர் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள் -எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது-இதற்கான பிரிட்டனின் பதில் என்ன?

பதில் ; அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பகிரங்கமாக விவாதித்துள்ளோம் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நான் முன்னர் சொன்னது போல தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவிவகித்தவேளை கருத்துடன்பாடு காணப்பட்டது.

அவ்வேளை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தீர்மானம் குறித்து இணைந்து செயற்பட்டன.என்னை பொறுத்தவரை அது சிறந்த நடைமுறை.

ஆனால் தற்போது அரசாங்கம் தான் அந்த நிலைக்குதிரும்பவிரும்பவில்லை என தொவிpக்கின்றது.

நாங்கள் இவற்றை (ஜெனீவா தீர்மானம்) மோதலிற்காக முன்னெடுக்கவில்லை மாறாக பிரிட்டன் ஏனைய பல நாடுகளுடன் உலகின் எந்த பகுதியையும் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

கேள்வி ; இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்படும் போது இரண்டு தீவிரபோக்குகள் காணப்படுவதை நாங்கள் காண்கின்றோம்-ஒரு தரப்பினர் நாட்டில் உள்ளனர் அவர்கள் குறைந்தளவு அதிகாரப்பரவலாக்கலை கூட ஏற்க தயாரில்லை-இன்னுமொரு தீவிரவாத போக்குடையவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அவர்கள் தனிநாட்டை கோருகின்றனர்.

இந்த இருதரப்பினர் மத்தியிலும் சமநிலையை காண்பதற்கு பிரிட்டன் உதவமுடியுமா?

பதில் ; இலங்கைமக்களிடம் பேசுவதே முதல் முக்கிய விடயம் என நான் தெரிவிப்பேன் -எவரும் தனிநாடு குறித்து பேசுவதை நான் காணவில்லை செவிமடுக்கவில்லை.

13 வது திருத்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன -அதிகாரப்பரவாலாக்கல் என்றால் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

எனினும் தனிநாடுகுறித்த கருத்துக்கள் விவாதங்கள் எவற்றையும் நான் இலங்கைக்குள் காணவில்லை.

13 வதுதிருத்தத்தின் மூலமான குறிப்பிட்ட அளவு அதிகாரப்பரவலுடன் கூடிய ஐக்கிய இலங்கை என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதே இந்தியா பிரிட்டன் அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்

தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தும் மாநாடு நேற்று (28) புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் சிறப்பாக இடம்பெற்றது.

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பின் உறுதுணையுடன், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் தொடக்க உரையை நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரும், சிறப்புரையினை தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சருமான மாண்புமிகு ஜோன் மக்டொனல் , ஆதரவு உரையை ஆளும் பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டீன் ரசெல் ஆற்றினார்கள்.

இம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையார் உரையாற்றுகையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்துலக குற்றமீறல்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் கடப்பாடு பிரித்தானிய அரசுக்கு இருப்பதை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கு இடையூறாக விளங்கும் ஆறாம் திருத்தம் நீக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதன்போது சிறப்புரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோன் மக்டொனல், ஆறாம் திருத்தம் நீக்கப்பட்டால் மட்டுமே தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழல் ஏற்பட்டுத் தமது தன்னாட்சி உரிமையைத் தமிழர்கள் நிலைநாட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை சிறிலங்கா அரசாங்கம் மறுப்பது உலக நியதிகளுக்கு விரோதமானது என்பதை சுட்டிக் காட்டிய மாண்புமிகு ஜோன் மக்டொனல், தமிழீழ தாயகத்தில் தமிழர்களின் வழிப்பாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை சிறிலங்கா படைகள் மேற்கொள்வதையும் வன்மையாகக் கண்டித்தார்.

இவ்விடத்தில் ஆளும் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் ரசெல் அவர்கள் உரையாற்றுகையில், தமிழர்களின் உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் நசுக்குவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

இம் மாநாட்டில் உரையாற்றிய பிரெஞ்சு விரிவுரையாளர் இனெஸ் ஹசன்-டக்லி, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வேற்றுமை காட்டும் சிறிலங்கா ஒரு இனநாயக நாடு என்று அழைக்கப்படும் தகுதியை மட்டும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்விடத்தில் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த மருத்துவபீட மாணவி செல்வி மூவாம்பிகை சதீஸ் அவர்கள் உரையாற்றுகையில், பிரித்தானியாவில் தான் அனுபவிக்கும் உரிமைகளையும், தாயகத்தில் எமது மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டதோடு, தமிழ் மக்களின் உரிமைகளை அமைதிவழியில் வென்றெடுப்பதற்குக் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளைப் பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய குர்திஷ் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஹொஷ்வான் சதீக், தமிழ் மக்களுக்கு என்றும் குர்திஷ் மக்கள் உறுதுணை நிற்பார்கள் என்று உறுதியளித்ததோடு, ஈராக்கில் சுயாட்சி கொண்ட மாநிலமாக விளங்கும் தென்குர்திஸ்தான் தமக்கென்று தனியானதொரு இராணுவத்தையும், வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருப்பது போன்று தமிழீழ மக்களுக்கு அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தமிழ் இராணுவத்தைக் கொண்ட சுயாட்சி மாநில அரசைப் பெறுவதன் மூலமே குறைந்த பட்சம் தனிநாட்டுக்கு அடுத்த படியாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய தென்சூடான் அரசியல் ஆய்வாளர் ஜஸ்ரின் மோராற், உறுதியோடு போராடியதன் விளைவாகவே தென்சூடான் விடுதலை பெற்றதாகவும், அது போன்று அரசியல் வழியில் ஒன்றுதிரண்டு போராடுவதன் மூலம் என்றோ ஒரு நாள் தமிழர்களும் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும் என்றும், இரவுக்கு முடிவாக நிச்சயம் விடியல் ஏற்படும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா உரையாற்றுகையில், அரசியல்-ஜனநாயக முறைகளைத் தழுவி அமைதிவழி நின்று தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதோடு, அரசியல் வழியில் தமது உரிமைகளைத் தமிழீழ மக்கள் வென்றெடுப்பதற்கான திண்ணியமான அரசியல் வேலைத்திட்டங்கள் அடுத்த கட்டமாகப் பிரித்தானியாவிலும், ஏனைய நாடுகளிலும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தென்சூடான், சூடான் ஆகிய தேசங்களைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களோடு, ஈரானில் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அரபு சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ஆங்கிலேய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களோடு இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாடபாவித சுலோச்சன என்ற சிங்கள சகோதரர் கருத்துக் கூறுகையில், உண்மை தெரியாததன் காரணமாகவே பெரும்பாலான சிங்களவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும், எனினும் தன் போன்ற உண்மை தெரிந்த சிங்களவர்கள் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பொதுமக்களோடு, பிரித்தானியாவின் ஆளும் கட்சிக்கு ஆதரவான தமிழ் அமைப்பு ஒன்றின் பிரமுகர் ஒருவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களும், தாயகத்தில் இயங்கும் அரசியல் கட்சியான ரெலோ இயக்கத்தின் பிரித்தானிய பொறுப்பாளரான சாம் சம்பந்தன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) திங்கட்கிழமை கொழும்பில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி அவர்களும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் /பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு பேசப்பட்டன.

மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பிரித்தானியா உன்னிப்பாகக் கவனிக்கும்

சர்வதேச இணைய வழங்குனர்கள் மற்றும் ஆர்வலர்களின் கவலைகள் எதிர்ப்புகளை மீறி,   ஜனவரி 24 அன்று நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதானவும், இலங்கை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய  இந்த சட்டத்தின் முன்னேற்றம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்  என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச இணைய வழங்குநர்கள் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்த போதிலும், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 24 அன்று அதை சட்டமாக நிறைவேற்றியுள்ளது என இராஜாங்க அமைச்சர் Anne-Marie Trevelyan (வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்) ) பிரித்தானிய   நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஒக்டோபரில் தான் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதும், தெற்காசியத்திற்கான இராஜாங்க அமைச்சர் லார்ட் அஹ்மட் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை ஜனவரி 25 ஆம் திகதி சந்தித்தபோதும் கூட , கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து பிரித்தானியா தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது ”என அவர் பிரித்தானியா  நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் இல்லத்தில் பொங்கல் விழா

பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயில் பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பாணையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார் .

மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்தனார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரது உரையை தொடர்ந்து மாணவிகளின் பாரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்வில் பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தைத்திருநாளில் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்

தைத்திருநாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.

“அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி, அறிவியல், வணிகம், பொதுச் சேவை ஆகியவற்றில் ஆற்றிவரும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானியத் தமிழர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்காகவும், குறிப்பாக எங்கள் NHS இல் சேவையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தியதற்காகவும் நான் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பொங்கல் திருநாளில் இங்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் மற்றும் செழிப்பும் பெருகட்டும்.” என்றார்.

 

தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார கட்டமைப்பிற்கு அவர்கள் ஆற்றிய பல பங்களிப்புகளையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கல்வி, மருத்துவம், வணிகம், கலை, இலக்கியம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்புகள் தமிழ் சமூகத்தையும் நாட்டையும் வலிமையாக்கியுள்ளதாகவும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள தமிழ் மாணவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணமும் இது என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் இலங்கை அரசாங்கம் இனியும் தாமதிக்காது என்பதை உறுதிசெய்ய தொழிற்கட்சி தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகிக்கும் என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.