இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா விருப்பம்

நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ், இலங்கை தொழில்நுட்ப வளாகத்தில் முதுகலைப் படிப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை முதல் முனைவர் பட்ட படிப்பு வரை நூற்றுக்கணக்கான முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் கல்வியைத் தொடரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் தனித்தனியாக வழங்கப்படுவதாக கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.