ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

உலகை உலுக்கிய  அனர்த்தங்களில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் பேசப்படுகிறது. சுனாமி பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களும் ஏனைய உயிர்களும் இன்று வரை நினைவுகூரப்பட்டு வருகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழப்புகள் மட்டுமன்றி, பல்வேறு பிரதேசங்கள் மற்றும் உடைமைகளும் அழிந்துபோன தடயங்களை தற்போதும் காண முடிகிறது.

பல இலட்சம் பேரை கடலலை காவு கொண்ட அந்த சோக நாளினையும், அதில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூரும் தினமானது இன்று திங்கட்கிழமை (டிச. 26) நாட்டின் பல பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகம்

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்று திங்கட்கிழமை (டிச 26) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி   ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி உடுத்துறை

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004 டிசம்பர் 26 அன்று சுனாமி அனர்த்தத்தால் காணாமல்போய், பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தைக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

இதனால் அபிலாஷ் அன்றிலிருந்து ‘சுனாமி பேபி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

மட்டக்களப்பு 

பின்னர், மரபணு பரிசோதனை மூலம் அந்த குழந்தை மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராசா தம்பதியின் மகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அபிலாஷுக்கு 18 வயது. அவரது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அபிலாஷ் இன்று தனது பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் நடந்தேறின.

இதில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட செயலகம்

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம்   தேசிய பாதுகாப்பு தினமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்  நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரீ.ஏ.சூரியராஜா, மதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும், முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும், புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு பாடசாலையிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறியழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி) பேரனர்த்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3352 பேர் காவு கொள்ளப்பட்டது. மேலும், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதுடன் உடைமைகள், வாழ்விடங்கள் என்பனவும் அழிந்தன.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த ஒரு தொகுதி உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று (டிச. 26) காலை நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களது உறவினர்கள் கதறியழுது மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிண்ணியா 

கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுனாமி நினைவுதினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த 2004 ‍டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும், பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வாழைச்சேனை 

சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18ஆவது நினைவஞ்சலியும், ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மௌன இறைவணக்கம், நினைவுச் சுடர் ஏற்றல், மத வழிபாடுகள்,  அன்னதானம் ஆகியன இடம்பெற்றதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.