சாணக்கியமற்ற ஈழத் தமிழர் அரசியல் – யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ரெலோவின் 11வது தேசிய மகாநாடு இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான, செந்தில் தொண்டமானும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய தொண்டமான் குறிப்பிட்ட விடயமொன்று என்னை கவர்ந்தது. அதாவது, போராட்டங்கள் உச்சத்தில் இருக்கின்ற போது நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்பார்கள். அதற்கு எங்களின் ஜயா சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் – நாங்கள் தோசை சுடுகின்றோம். தோசைக்கல் எங்களுடையதுதான் – அடுப்பும் எங்களுடையதுதான், அடுப்பை எரிக்க பயன்படும் நெருப்பும் எங்களுடையதுதான் (எரிவாயு) வீடும் எங்களுடையதுதான். அதற்காக எங்களுடைய வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, ஆறுதலாக வந்து தோசையை பார்த்தால் தோசை இருக்குமா?
அப்படித்தான் போராட்டங்களும், போராட்டத்தில் உச்சத்தில் இருக்கின்ற போதே, சிலதை விட்டுக்கொடுத்து எடுக்கக் கூடியவற்றை, எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் நாம் விடயங்களை சாதிக்க முடியாமல் போகும். ஏனெனில் போராட்டத்தின் வேகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது. தங்கள் ஜயா தங்களுக்கு கற்றுத்தந்த சாணக்கியத்தினால்தான், நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம் என்று தொண்டமான் கூறுகின்ற போது, எங்களுடைய மூத்த தலைவர்கள் என்போர் எங்களுக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத் தந்திருக்கின்றனர் என்னும் கேள்வியே என்னுக்குள் எழுந்தது.

எங்கள் ஜயாக்களும், எங்கள் அண்ணன்களும் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத்தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்? வரலாறு முழுவதும் முன்னோடிகள் விட்டுச் செல்கின்ற வழித்தடங்களிலிருந்துதான், அடுத்த தலைமுறை தனக்கான எதிர்காலத்தை ஆக்கிக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் நிலையோ சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை தமிழர்களின் மூத்த தலைமுறை விட்டுச் செல்லவில்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ, பிச்சை வேண்டாம் ஜயா – நாயை பிடியுங்கள் என்னும் நிலைமையை வந்தடைந்திருக்கின்றது. இதற்காக, நாம் எவரையாவது, குற்றம்சாட்ட வேண்டும் என்றால், நமது மூத்த தலைமுறை முழுவதையும் குற்றவாளிக் கூண்டில், நிறுத்துவதை தவிர வேறுவழியிருக்காது. ராஜதந்திரம் பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் ஒரு கூற்றை கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது நினைவுண்டு. அதாவது, ராஜதந்திரம் என்பது தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்வதல்ல என்பாராம். ஆனால் இன்று தமிழரின் அரசியல் நிலையோ தொடங்கிய இடத்தில் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ராஜதந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட தமிழ் அரசியல் சமூகம், அறியவில்லை என்னும் முடிவுக்கல்லவா நாம் வரவேண்டியிருக்கின்றது.

நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட விடயத்தை இந்த இடத்தில் நினைவுகொள்வது பொருத்தமென்று எண்ணுகின்றேன். அதாவது, போராட்டங்கள் பிழையில்லை ஆனால் நாங்கள் ஆரம்பிக்கும் போராட்டங்களை எப்போது முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரிய வேண்டும் – அவ்வாறில்லாது, நாங்கள் ஆரம்பித்த போரட்டத்தை இன்னொருவர் முடிப்பாரானால், அப்போது எங்களுக்கு சர்வ நாசமே மிஞ்சும். இந்த பின்புலத்தில் நோக்கினால் நமது போராட்டத்தை திருப்பிப்பார்த்தால் நமது கையறு நிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான அனுபவங்களுக்கு பின்னர் கூட நாங்கள் அரசியல் யதார்த்தங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுதான் கவலையானது. நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் சுலோகங்கள் மூலம் மக்களை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சி;க்கின்றோம்? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாமலேயே, நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கப்பல்கள் வருகின்றன, வெளிநாடு செல்ல விரும்புவோர் அனைவரும் ஏறலாம் என்றால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. மக்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியாத அரசியல் தலைமைகள், வெறும் சுலோகங்களை உயர்த்துவதில் என்ன பொருளுண்டு?

ஓரு சிறிய இனத்தால் ஆயுத போராட்டத்தில் அதிக காலத்தை செலவிட முடியாதென்று, அன்றைய சூழலிலேயே அரசறியவில் அறிஞர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் கூறியிருக்கின்றனர். எனது தேடலில், உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டது. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்காக நாங்கள் கொடுத்த விலையோ கணக்கிலடங்காது. உண்மையில் அன்றே இந்த உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், நாங்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. இது ஒரு வராலாற்றுப் படிப்பினை.
அமெரிக்க தத்துவஞானியான, ஜோர்ஜ் சந்தயாணாவின் கூற்று ஒன்றுண்டு. அதாவது, வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர். இது க.வே.பாலகுமாரனின் மொழிபெயர்ப்பு. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக அறியப்பட்ட க.வே.பாலகுமாரன் தனது கட்டுரையொன்றில் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் இந்தக் கூற்றை சிங்களவர்களை நோக்கியே பயன்படுத்தியிருப்பார். சிங்களவர்கள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்னும் தனது பார்வையை நிறுவுவதற்காகவே, அவர் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தக் கூற்று இப்போது யாருக்குப் பொருத்தமானது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டதல்லவா!
இறுதி யுத்தத்தின் போதான நிலைமைகளை பாவத்தின் சம்பளம் என்று பாலகுமாரன் வர்ணித்த கதையுமுண்டு. ஒரு வேளை, அவர் உண்மைகளை உணர முற்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம், அனைத்தும் கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்தே, இந்தியாவை நோக்கிச் சென்றார். இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ராஜீவ்காந்தி படுகொலை ஆகியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்ததுடன், கடந்தகாலத்தை பின்னுக்குவைத்து, பெருந்தன்மையுடன் தலையீடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால் இன்றோ இவற்றிலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத ஒரு குழுவினரோ, தொடர்ந்தும் அரசியல் விடலைகளாகவே தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே விடலைகளாகவே இருக்கலாம் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்கள் அறியாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுமல்லவா, அனைத்துக்கும் பின்னால் இழுபட்டுச் செல்லுபவர்களாக இருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வும் அதன் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். நாங்கள் எந்தளவிற்கு வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத இனமாக இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த பதின்நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பேசப்பட்டது. சற்று அனைத்தையும் திருப்பிப் பாருங்கள். சர்வதேச அழுத்தங்கள் இலங்கையின் குரல்வளையை நெருக்கப் போகின்றது, இனி அவர்கள் தப்ப முடியாது என்றெல்லாம் பேசப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சென்று வந்த பின்னர். அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளது என்றவாறு கதைகள் புனையப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலும் ஏராளமாக பேசப்பட்டது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாருக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் சண்டைகள் இடம்பெற்றன. எதனை எவ்வாறு உள்ளடக்குவது என்று தங்களுக்குள் மோதிக் கொண்டன கட்சிகள். மக்களோ, அனைத்தையும் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஏதாவது நடந்ததா? ஆனால் பதின்நான்கு வருடங்கள் சென்றுவிட்டன.

2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கையின் மீதான பிரேரணை கொண்டுவரைப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியா என்றொரு பிராந்திய சக்தி இருப்பதையே சம்பந்தனும் அவரது தலைமையில் இயங்கிய கூட்டமைப்பும் மறந்திருந்தது. ஆனால் ரெலோவின் முயற்சியில் 2022இல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமந்திரன் அதற்கு எதிரான கருத்துக்களையே பொது வெளிகளில் முன்வைத்தார். அவருக்கு அந்த முயற்சியில் ஆர்வமில்லை என்றே தெரிந்தது. முயற்சியில் ஆர்வமில்லையா அல்லது இந்தியாவை நோக்கி மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லையா? ஒரு வேளை மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசியதால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஆறுகட்சிகளின் தலைவர்களது கையெழுத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. உண்மையில் பத்துவருட கால, மேற்குலகம் நோக்கிய தமிழர் அரசியல் நகர்வுகளின் தோல்விதான், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்னும் நிலைமையை உருவாக்கியது. 2006இல் பாலசிங்கம் எவ்வாறு வேறு வழிகள் எதுவுமின்றி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சரியாக சிந்தித்தாரோ, அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சிந்தித்தன. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தியா இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நகர்விலும் இதுவரையில் தமிழர்களால் ஒரு படி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இதுதான் நமது இதுவரையான அரசியல் வரலாறு சொல்லும் உண்மை. இந்த உண்மையை புறம்தள்ளிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கியே சென்றிருக்கின்றோம். இனியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் தொடர்ந்தும் இப்படியே ஆதங்கப்பட்டுக் கொண்டு, அவ்வப்போது, சில எதிர்ப்புக்களை காண்பித்துக் கொண்டு, எங்களின் நாட்களை செலவிட்டுக் கொள்வதாகவே எங்கள் அரசியல் மிஞ்சும். காலப்போக்கில் தமிழ் தேசிய அரசியல் என்பது, வெறுமனே, யாழ் குடாநாட்டு அரசியலாகவே சுருங்கிப் போகும்.

நன்றி – தினக்குரல் கட்டுரை