சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுவர் இலங்கைக்கு விஜயம்

மலையக தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். டிசைரி கோர்மியர் ஸ்மித் தெற்காசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், கோர்மியர் ஸ்மித், மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில கல்விக்கான உதவித்தொகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கோர்மியர் ஸ்மித் பங்கேற்கவுள்ளார். இது ஒரு அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய திட்டமாகும், இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன்களின் அடித்தளத்தை வழங்குகிறது. இந்நிகழ்வில் மூன்று மாத பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு அவர் விருதுகளை வழங்குவார். இந்த முயற்சியானது மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த புதிய தொழிற்தகைமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.