தற்போதுள்ள தமிழ் தலைவர்களால் பிரச்சினைகளிற்கு தீர்வை தர முடியாது: வினோ எம்.பி

தற்போதுள்ள தமிழ் தலைவர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாது. தற்போதுள்ள சிங்களத் தலைவர்களினாலும் அது முடியாது. ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான பேச்சையே நடத்த விரும்புகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவத்துள்ளார்.

நேற்று வவுனியாவில் சமத்துவ கட்சியின் வன்னி பிராந்திய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

சமத்துவ கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு போட்டியாக உள்ள ஒரேயொரு கட்சி சமத்துவக்கட்சிதான். தமிழ் மக்கள் மத்தியில் பல கட்சிகள் இருந்தாலும், அனைவரதும் இறுதி இலக்கு தமிழ் மக்களின் விடுதலையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் மத்தியில் கட்சிகள் அதிகரித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பலர் பல கட்சிகளை தொடங்கியுள்ளனர். தற்போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட நடக்கும் முயற்சிகளிற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் கட்சிகள் நிச்சயமாக ஒன்றிணையாது. அதனால்தான் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஊடாக தீர்வை பெற முடியாது. தமிழ் மக்களிற்கு தீர்வு கிடைக்கக்கூடாதென்பதில் சிங்கள கட்சிகள் ஓரணியாக செயற்படுகின்றன. ஆனால், தீர்வை பெறுவதில் தமிழ் தரப்பிடம் ஒற்றுமையில்லை.

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவே நான் விமர்சனங்களை வைக்கிறேன். விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமென நினைக்கும் சிலர் கூட்டமைப்பிற்குள் உள்ளனர் என்றார்.