பெரும்பான்மையின மக்களின் வாக்குகளுக்காக இனவாத வழியில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க – வினோ எம்.பி

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித் தேவையில்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கியுள்ளார் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

22 மில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் ஒரு அரசாங்கம் சீரான அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என்றால் அது மிகவும் பரிதாபத்துக்கு, அவ்வாறான நாட்டை கேவலத்துக்குரிய நாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது,

அருகிலுள்ள தமிழ்நாட்டை பாருங்கள் சுமார் 76 மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் அது முடியாது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் அவரின் தொனி எமக்கு பல விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்கள் மூலம் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.

இவ்வளவு காலமும் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்த நிலைமை இருந்தது.

ஆனால் ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் ஒட்டு மொத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, ஆட்சியை பிடிப்பதற்காக பொதுஜன பெரமுனவினர் எப்படி முயன்றார்களோ அதேபோன்று சிறுபான்மையினத்தை விடுத்து,சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை ,அவர்கள் தேவையில்லை என்ற நோக்கத்தில் தான் கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நேர்காணலை சிங்கள ஊடகங்கள் வரவேற்றுள்ளன,சிங்கள மக்கள் ஆதரிக்கின்றார்கள். வரவேற்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதிபாதியாக தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவைப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவருக்கு தேர்தல் வெற்றியே ஒரே குறிக்கோளாகவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்று சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர அவர் வழங்கியுள்ள இந்த நேர்காணல் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்பதனை வெளிப்படுத்த்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபை,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜபக்ஷர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான வழியில் தான் ஆட்சிக்கு வந்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட அவர் முயற்சிக்கின்றார்.

இலங்கையின் குரங்குகளை சீனா மட்டுமின்றி வேறு நாடுகளும் கோருவதாக விவசாய அமைச்சர் கூறியிருந்தார். ஆகையால் முதலில் இங்குள்ள மனிதக் குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்றார்.