வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து எதுவித தீர்மானமும் இல்லை – நீதியமைச்சர்

வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அப்பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயேஇவ்வாறானதொரு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.