இந்திய பிரதமர் வலியுறுத்திய 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் – ஜீவன்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக பராமரிக்க நடவடிக்கை – அலி சப்றி

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம்.

மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.

எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது” என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

யாழில் யானைகளைப் பயன்படுத்த அனுமதி பெறப்பட வேண்டும் – யாழ் மாவட்ட அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.

இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்துகளை விளைவிக்க கூடியதாகும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உற்சவங்களை நடாத்துவோரை கேட்டுக்கொள்வதாக அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகள் இருவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

1996 ஆம் ஆண்டு 91 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த, இலங்கை மத்திய வங்கி மீதான  குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் கடந்த 18 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் தனது 69 ஆவது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் விடுதலை செய்யப்பட்டுள்ள சண்முகரட்ணம் சண்முகராஜாவின் வயது 56 ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருட்களை கொண்டு சென்ற குற்றத்திற்காக இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலையில் இவர்களது நன்னடத்தையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய அதி நவீன யானை வைத்தியசாலை அமைப்பது தொடர்பில் தாய்லாந்து கவனம்

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய அதி நவீன யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார்.

யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இலங்கையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

குருந்தூர் மலையை பெளத்த தொல்லியல் பகுதியாக பிரகடனம் செய்யவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் தெரிவிப்பு

சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21.07.2023) இடம்பெற்ற சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர உரையாற்றியதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியில் பிரிவினைவாதம் மற்றும் அடிப்படையாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் தலைமைத்துவத்தில் கடந்த 14 ஆம் திகதி அங்கு பொங்கல் பொங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

குருந்தூர் மலை 1931 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘பௌத்த தொல்லியல் பிரதேசம் ‘என வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால் பிற்பட்ட காலங்களில் அப்பகுதில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் குருந்தூர் மலையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கும், இந்து வழிபாடுகள் இடம்பெற்றதற்கும் எவ்வித சான்றுகளும் கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறான பின்னணியில் குருந்தூர் மலை பகுதியில் தமிழ் அடிப்படைவாதிகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

இதன்போது பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதி என ஏன் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் ஜயந்த சமரவீர கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, “குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனைகளை பெற்று இவர் (ஜயந்த சமரவீர) முன்வைத்த யோசனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டை ரணிலிடம் உறுதியாக எடுத்துரைத்தார் இந்திய பிரதமர் மோடி

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம், இலங்கை அரசியலில் இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றிருக்கிறார்.

ஹைத்ராபாத் இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மோடி வரவேற்றதோடு, இரு நாட்டு தலைவர்களும் இன்று காலை முக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சந்திப்பின்போது, தமிழில் வணக்கம் எனவும் சிங்களத்தில் ஆயுபோவன் எனவும் கூறி தனது உரையை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்திய – இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடையொட்டி அவர்களின் மேம்பாட்டு உதவும் வகையிலான திட்டத்தையும் இதன்போது மோடி அறிவித்துள்ளார்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை இலங்கையில் உறுதி செய்ய வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்றும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதற்தடவை. இது எனக்கும், எனது அரசாங்கத்துக்கும் மிகவும் முக்கியமான சந்திப்பு என இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“அதிகாரப்பகிர்வின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வடக்குக், கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை இந்த வாரம் நான் முன்வைத்திருக்கிறேன்.

தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்திக்கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இது தொடர்பில் பொறுத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். இது குறித்து இந்திய பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறேன்.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளி ; தமிழினத்தை சீண்ட வேண்டாமென எச்சரிக்கின்றோம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் எமது மக்கள் கிளர்தெழுவார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு மனநோயாளி .அவர் கடற்படையில் சமையல்காரராகத்தான் இருந்துள்ளார்.

போர்க்காலத்தில் தொடர்ந்தும் அவரை சமையலறையில்  வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளி போல் தற்போது செயற்படுகின்றார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை  என்கிறார்

அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார்.

இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இருக்கு ஆதரவாக இருப்போர் யார்? இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தையும்,அரசியமைப்பையும்  எதிர்ப்பவையாகவே உள்ளன.

இப்போது பார்த்தால் கனடா உயர்ஸ்தானிகரை  நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை  மிக மோசமாக சாடுகின்றார்.

இந்தியாவையும் அவர் சாடுகின்றார். வெளிநாடுகளின் நிதியை பெற்று  சாப்பிட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர எங்களது நியாயமான உரிமைகள் நாங்கள் கோருகின்ற போது அதனை அவர்  எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார்?

அதனால்தான் அவர் ஒரு மனநோயாளி என நாங்கள் கூறுகின்றோம்.அவரின் கருத்துக்களை இங்கு யாரும் எதிர்க்கவில்லை.

சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். அவரின் கட்சித்தலைமை அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.  அத்துடன்   அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும்.

எமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள் குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள்.

தமிழினத்தை  சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம்.  உங்களின் தடிப்பு கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள்  தொடர்ந்தும் சரத் வீரசேகர இனவாதம் கக்கினால்  எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சரத் வீரசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

நாட்டில் இல்லாத இனப்பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் -சரத் வீரசேகர

அதிகார பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பலர் உயிர் தியாகம் செய்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துள்ளார்கள். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்துக்காக நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நெருக்கடிகளும் இல்லாத சூழலில் சர்வதேச பிணைமுறிகளிடமிருந்து 12.5 பில்லியன் டொலர் கடன் பெற்றது. பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் பல தீர்மானங்களை எடுத்தது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம்,அந்நிய செலாவணி உள்வருகை வீதம் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் பொருளாதார பாதிப்பு தீவிரடைந்தது.

கையிருப்பில் இருந்த டொலர் கொவிட் தடுப்பூசிக்காக பயன்படுத்தப்பட்டது. இதனால் நாடு பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்பட்டது. ஆகவே பொருளாதாரப் பாதிப்புக்கு நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் பொறுப்புக்கூற வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், அதிகார பகிர்வு கோரியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

வீடு பற்றி எரியும் போது சிகரெட் பற்ற வைப்பதற்கு அந்த வீட்டில் இருந்து தீ எடுப்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்தை ஒட்டுமொத்த தமிழர்களின் அவசியம் என்று குறிப்பிட முடியாது.கூட்டமைப்பினர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களாயின் ஏன் அவர்கள் 5 தேர்தல் நிர்வாக மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிடுகிறார்கள்.ஏனைய மாவட்டங்களில் ஏன் அவர்கள் போட்டியிடுவதில்லை.

காணி விவகாரத்தில் ஒரு மாகாணத்துக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. வழங்க வேண்டுமாயின் சகல மாகாணங்களுக்கும் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வரலாற்று காலத்தில் இருந்து பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.

30 வருட கால யுத்தில் 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்து,14 ஆயிரம் படையினர் தமது உடல் அங்கங்களை நாட்டுக்காக இழந்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தார்கள்.

இவ்வாறான அர்ப்பணிப்புக்களுடன் பாதுகாத்த ஒற்றையாட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கத்துக்காக பிளவுப்படுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அறிமுகப்படுத்தியது.இலங்கை – இந்திய ஒப்பந்தம் தற்போது வலுவற்றுள்ளது.

ஏனெனில் இந்தியா பல நிபந்தனைகளை அமுல்படுத்தவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலை புலிகள் அமைப்பின் மறைமுக சக்தி. விடுதலை புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள்.ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா ? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணம் முன்னேற்றமடைந்துள்ளது.வடக்கில் கல்வி,தொழில் நிலை உயர்வடைந்துள்ளது. மொத்த சனத்தொகையில் 52 சதவீதமான தமிழர்கள் சிங்களவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.இப்போது நாட்டில் என்ன இனப்பிரச்சினை உள்ளது என்பதை உயரிய சபை ஊடாக கேட்கிறேன்.

அதிகார பகிர்வுக்காக ஜனாதிபதி சந்தித்து இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதற்கு அச்சமடைந்ததில்லை,சிங்கள அரசியல்வாதிகள் உண்மையை கூறுவதற்கு அச்சமடைந்தார்கள்.இதுவே இன்றை பிரச்சினைக்கு மூல காரணியாக உள்ளது.ஆகவே தமிழ் அரசியல்வாதிகளின் பொய்யை சர்வதேசம் தமது பூகோள அரசியலுக்காக ஏற்றுக்கொண்டது.

இலங்கை ஒற்றையாட்சி நாடு ஆகவே இலங்கையில் சமஷ்டியாட்சி முறைமையிலான கட்டமைப்பை தோற்றுவிக்குமாறு தமிழ் தரப்பினர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. எக்காரணிகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஜனாதிபதி ரணிலுக்கும் அதானி குழுமத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது டுவிட்டர் பதில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது