இலங்கை திரும்ப இருந்த நிலையில் சாந்தன் மாரடைப்பால் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

இன்று இரவு இலங்கைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

தென்னக்கோனின் நியமனத்தை அரசியலமைப்பு சபை ஏற்கவில்லை – சஜித் பிரேமதாச

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை (CC) அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக நான்கு வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் இருந்தன மேலும் இருவர் வாக்களிக்கவில்லை. தீர்மானத்தை மேற்கொள்ள குறைந்தது 5 வாக்குகளாவது தேவை. வாக்குகள் சமனாக இருந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்கலாம். வாக்குகள் சமனாகவும் இல்லை.

எனவே அரசியலமைப்பு இரண்டாவது முறையாக அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் சூழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும். அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் இடமளிக்காது. சர்வசன வாக்கெடுப்பிற்கான அரசாங்கத்தின் சூழ்ச்சியை நாம் தோற்கடிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம். ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும்.

இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும்.

அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும். இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வசன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை சூனியமாகிவிட்டது.

எனவே இதனைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட கடற்படையினர் தடை

யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில் , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று திங்கட்கிழமை  (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது.

செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

நாணய நிதியத்தின் பரிந்துரைகளை செயற்படுத்த சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம் – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்த சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாட்டில் தனித்து செயற்பட வேண்டாம்,எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி கடந்த 14 ஆம் திகதி வெளியிட்ட ‘ தேசியத்துக்காக ஒன்றிணைவோம்’ என்ற கொள்கை பிரகடனத்தை வெளியிட்டது.பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இதற்கமைய ஐக்கிய குடியரசு முன்னணிக்கும்,ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக,பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,விசேட வைத்தியர் அஜித் அமரசிங்க,பொதுச்செயலாளர் பந்துல சந்திரசேகர, தேசிய அமைப்பாளர் சுமேத ரத்நாயக்க ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்த 14 ஆம் திகதி ‘தேசியத்துக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளுக்கு அமைய செயற்திட்ட பிரகடனத்தை வெளியிட்டோம்.எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்களை முன்வைத்தோம்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொது செயற்திட்டத்தில் பங்குப்பற்றுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் மனிதநேயத்துடன் கூட்டணியமைப்பது பிரதான நோக்கமாக உள்ளது.அதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெளிப்படைத்தன்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

கேள்வி –ஜனாதிபதியுடன் கடந்த வாரம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டீர்கள்.தற்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றீர்கள்.புதிய அரசியல் கூட்டணி வெற்றிப்பெறுமா ?

பதில் -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.எதிர்காலம் தொடர்பான எமது யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்துள்ளோம்.சிறந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

கேள்வி –புதிய அரசியல் கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றீர்களா ?

பதில் – நிச்சயமாக, தற்போதைய நிலையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அவசியமானது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வருகைத் தருவார்கள்.இதன்போது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.எவர் ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை எதிர்ப்புகளின்றி செயற்படுத்துவதற்குச் சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமானது.இதனை ஜனாதிபதியிடம் குறிப்பிட்டோம்.சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட செயற்திட்டத்தைத் தனித்து செயற்படுத்த வேண்டாம்.சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொள்ள வேண்டும். மின் கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.மின்சார சபை இலாபமடைந்துள்ளது. அதன் பயனை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளோம்.

கேள்வி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை ?

பதில் – அவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.பொருளாதார பாதிப்புக்கு பொதுஜன பெரமுன உட்பட ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசப்படுகிறது. பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் பரிந்துரையை முன்வைத்துள்ளோம்.அவ்வாறான நிலையில் பொருளாதார படுகொலையாளிகளுடன் எவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.ஆகவே ராஜபக்ஷர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது என்றார்.

மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – உதய கம்மன்பில

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பணியாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறாயின் அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.முறையற்ற வகையில் செயற்படும் மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவில் அதிகரிக்கப்படாத நிலையில் மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பளம் இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார்.

மத்திய வங்கியின் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியின் பணியாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பார்த்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை தமது இலாபத்தில் தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுகிறது.மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளை போல் போட்டித்தன்மையுடன் செயற்படும் நிறுவனமல்ல, கூட்டிணைந்த நிறுவனம்.நாணயம் அச்சிடல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மத்திய வங்கிக்கு உண்டு.ஆகவே தமது நிதியிலிருந்து தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது வளர்ச்சிக்காக மக்கள் மீதே வரி சுமத்தப்படுகிறது.ஆகவே மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.நாட்டு மக்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டு பிறிதொன்றை செயற்படுத்துதற்கு மத்திய வங்கி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனையே நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.அப்போது ஆளும் தரப்பும்,எதிர்தரப்பும் எம்மை விமர்சித்தார்கள். மத்திய வங்கி எவருக்கும் பொறுப்புக் கூற கடமைப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும் என்றார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) திங்கட்கிழமை கொழும்பில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி அவர்களும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் /பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு பேசப்பட்டன.

மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், நெருக்கடிகள் தொடர்பிலும் மத்திய வங்கி ஆளுநர் குழுவினர் விளக்கமளித்தனர்.

அத்தோடு, சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதிலளித்தார்.

இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரோடு, மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் உட்பட 8 பேர் கலந்துகொண்டனர்.