கூட்டமைப்பின் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக்கொள்ளாமை தவறான சமிக்ஞைகளை அனுப்பும்:சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தர்மலிங்கம் சித்தாத்தனை 10வது உறுப்பினராக உறுதிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான கூடுதல் சுயாட்சியை IMF நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும்

இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை.

எந்தவிதமான அளவீட்டின்படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும்.

அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு என்றும் ஹரி ஆனந்த சங்கரி கூறியுள்ளர்.

எனவே, சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று ஹரி ஆனந்த சங்கரி கோரியுள்ளார்.

கச்சதீவில் அமைக்கப்பட்ட அரச மரத்துடன் கூடிய பாரிய பெளத்த விகாரை

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது . ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.

“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும், இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக நாடாளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.

25,000 இராணுவத்தினர் பணியிலிருந்து விலகினர் – பொன்சேகா

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக, நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கும் அரசின் நிவாரணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்

சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும் கட்டாயம் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்படும் எனும் உறுதிப்பாட்டினை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நலிவடைந்த பிரிவினரை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அதில் அரசியல் கலந்துள்ளதனால், தமக்கு அதில் நம்பிக்கையில்லாத பட்சத்திலேயே இதனைக் கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்

இந்திய மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது, மோடி எனும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி கருத்து வௌியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  நேற்று (23) முதல் அமுலாகும வகையில், அவரது மக்களவை உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதிக்கு சிறப்புத் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இந்திய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  சதி முயற்சிகளுக்கு எதிராக ராகுல் காந்தி செயற்படுவார் எனவும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் 10 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலாகும் வகையில்,  பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,
செத்தல் மிளகாய் ஒரு கிலோவின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1380 ரூபாவிற்கும்
வௌ்ளைப்பூண்டு ஒரு கிலோவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கும்
நெத்தலி ஒரு கிலோவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கும்
விற்கப்படுகின்றன.

இதேவேளை,
கடலை ஒரு கிலோவின் புதிய விலை 555 ரூபாவாகவும்
உள்நாட்டு சம்பாவின் புதிய விலை 199 ரூபாவாகவும்
425 கிராம் டின் மீனின் புதிய விலை 520 ரூபாவாகவும்
பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் புதிய விலை 119 ரூபாவாகவும்
உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோவின் புதிய விலை 270 ரூபாவாகவும்
வௌ்ளை சீனி ஒரு கிலோவின் புதிய விலை 210 ரூபாவாகவும்
கடலைப் பருப்பு ஒரு கிலோவின் புதிய விலை 298 ரூபாவாகவும்

அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.எவ் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.எம்.எஃப்.இன் நிபந்தனை மிகவும் கடினமானது குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15.3 வரை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என அவர் மேலும் கூறினார்.