கடனை மறுசீரமைக்கவில்லையென்றால் மாட்டிக் கொள்வோம்!

கடனை மறுசீரமைக்காவிட்டால் வருடத்திற்கு 06 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமையை பல வருடங்களாக சுமக்க நேரிடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடன் செலுத்துவது கடினமாக இருப்பதால், கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மற்றும் கடனை மறுசீரமைக்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. செயல்பாட்டின் முதல் படி கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் முதன்மை சான்றிதழ் ஆகும். நமது கடனை நிலையானதாக மாற்றுவதற்கான இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தில் உள்ளன.

அந்த நிலையான நிலையை அடைய, ஒவ்வொரு நாடும் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன.

நாங்கள் மீண்டும் கடன் வாங்க மாட்டோம் அல்லது செலுத்த மாட்டோம் என்பதல்ல.

கடன் வாங்கும்போது, ​​அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இல்லையெனில், யாரும் மீண்டும் கடன் கொடுக்க மாட்டார்கள். இங்கு நடப்பது எங்களால் கடனை அடைக்க முடியாததால், செலுத்துவதில் தவறிழைக்காமல், சலுகை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்றார்.

எதிர்கட்சித் தலைவர்கள் தூதுவர்கள் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல்,அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பின்வருமாறு பெயர் குறிப்பிடப்படும் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1. H.E. (Ms.) Sarah Hulton,High Commissioner,High Commission of United Kingdom in Sri Lanka
2. H.E.Denis Chaibi,Ambassador, Delegation of the European Union in Sri Lanka
3. H.E.Michael Appleton,High Commissioner,New Zealand High Commission in Sri Lanka
4. H.E. (Ms.) Julie J Chung,Ambassador, Embassy of the United States of America in Sri Lanka
5. Mr.Anouk Baron,Deputy Ambassador, Embassy of the Kingdom of the Netherlands in Sri Lanka
6. Dr.Francesco Perale,Deputy Head of Mission,Embassy of Italy in Sri Lanka
7. Mr.Vinod Jacob,Deputy High Commissioner,High Commission of the Republic of India in Sri Lanka
8. Mr.Katsuki Kotaro,Minister/Deputy Head of Mission,Embassy of Japan in Sri Lanka
9. Ms.Lalita Kapur,Deputy High Commissioner,Australian High Commission in Sri Lanka
10. Mr.Aurélien MAILLET, Deputy Head of Mission, Embassy of France in Sri Lanka
11. Mr.Daniel Blood,Counsellor (Political), High Commission of Canada in Sri Lanka
12. Mr.Ozaki Takeshi,First Secretary, Embassy of Japan in Sri Lanka.

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இது வெறும் ஆரம்பம் தான். IMF ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஆனால் நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்

எனவே இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும்.

கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம், எமக்கு நான்கு வருட வேலைத்திட்டமும் உள்ளது. அதனால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

நான் அதை சட்டப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் இந்த உடன்படிக்கைக்கு வாக்களிப்பது எங்களை மேலும் பலப்படுத்துகிறது. இதற்கு மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்ட வேண்டும். எனவே முதலில், இது ஒரு கடன் மறுசீரமைப்பு, ஆனால் கடன் மறுசீரமைப்பு மட்டும் அல்ல, நாம் அதை நமது பொருளாதார மறுசீரமைப்பாக மாற்ற வேண்டும்.

முதலில், எங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை உள்ளது. இந்த செயல்முறை மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலமாக இருப்பதோடு, நாம் அரச செலவினங்களை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது அரச செலவினங்களின் தன்மையையும், நமக்குக் கிடைக்கும் வருமானத்தையும் விவரிக்கிறது. இது முதன்மை வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிகம் இருப்பதை உறுதி செய்வதோடு, வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இது எங்களுக்கு முதன்மை வரவுசெலவுத் திட்ட மேலதிகம் மற்றும் வருமான அதிகரிப்பை உறுதி செய்கிறது.

நாம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் மேலும் தாராளமயவாதத்தை (லிபரல்) தொடருவோம். தாராளமயம் என்பது நல்ல வார்த்தையல்ல என்றும், வெளிநாட்டு முதலீட்டுக்காக அதைத் திறந்து விடுகிறோம் என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

நாம் பல்வேறு முதலீட்டுத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறையில் கூடுதல் அன்னிய முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். அதன் மூலம் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும்.

10 வருடங்களில் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக மாறும் திட்டத்திற்கு. இந்தக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, முதல் பணியாக இந்த உடன்படிக்கையை அங்கீகரித்து அதன் பின்னர் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறையை அதன்போதே அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இரண்டாவதாக, விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் நவீனமயமாக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இலங்கையை பிராந்திய விநியோக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுலாத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை நிச்சயமாக மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

இன்னும் 25 வருடங்களில் அதாவது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம் ஆகும். ஒரே இடத்தில் தேக்க நிலையில் உள்ள பொருளாதாரத்துடன் எம்மால் முன்னேற முடியாது. நம் நாட்டில் நடந்த அனைத்து பிரச்சினைகளும் இந்த பிரச்சினையுடன் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1971இல் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினையைப் போன்று, 1983இல் மொழி மட்டுமன்றி, தமிழ் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பின்மையால் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுதான் 1989 இலும் நடந்தது. எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை இரத்தம் சிந்துவதற்கு வழிவகுத்தது. இப்போது புதிதாக தொடங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒரு வரலாற்று செயல்முறை. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்த சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறை பற்றி அறிந்து கொள்ள எந்த நேரத்திலும் அதிகாரிகளுடன் பேசுவதற்கு பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த உடன்படிக்கையை நாம் முன்னெடுப்பதா இல்லையா என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இல்லை என்றால் வருங்கால சந்ததி நம்மை சபிக்கும்.

எனவே, அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கும் வகையில் நமது பொருளாதாரத்தில் இந்த நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் முதல் பணியாக அங்கீகரித்து, கடனை மறுசீரமைக்கச் செல்கிறோம். அதன் பிறகே கடனை எப்படி செலுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எங்கள் நிகழ்ச்சிகள் முடிவடையவில்லை. ஏன் முடிக்கவில்லை? அது அரசியலாக மாறியது. இல்லையெனில், அது பொதுமக்களின் கருத்துக்கு உட்பட்டது. மக்கள் கருத்தை உருவாக்கியது ஊடகங்கள்தான். இம்முறை இத்திட்டம் வெற்றியடைய ஊடகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

மேலும், எம்.சி.சி மானியத்தை இலங்கை பெறப்போகும் போது, சில தரப்பினர் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம்சாட்டினர். IMF வந்ததும் மேற்குலகிடம் சரணடைவோம் என்று சொன்னார்கள். அதனால் இப்படியே தொடர்வது கடினம். எனவேதான் சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய இணையுமாறு ஊடகங்களைக் கோருகின்றோம்.

இந்த செயல்முறை மிகவும் கடினம். நாம் அனைவரும் அதை உணர்கிறோம். இது நான்கு வருட செயல்முறை. இது 2026இல் முடிவடையும். என்னுடன் வெகு தூரம் பயணித்தவர்கள், எனது கொள்கைகள் சரி என்று சொன்னவர்கள் இப்போது எனக்கு எதிராக பேசுகிறார்கள்.

அதனால் எதிர்த்தவர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது கடினமான இடத்தில் இருக்கிறோம். பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது. பழைய விளையாட்டுகளைத் தொடர்ந்தால் மீண்டும் விழ நேரிடம். எனவே, கடந்த காலத்தை மறந்து முன்நோக்கிச் செல்ல வேண்டும்.

நாங்கள் அனைவரும் தவறு செய்தோம். இதை இப்போது ஏற்றுக்கொண்டு எங்களை ஆதரிக்கவும். இந்தப் பணத்தில் சம்பளம் வழங்குகிறோம். இது திருட்டல்ல. திருட்டு என்ற கதைகளினால், இவைகளை இழந்தோம். இதுபோன்ற கதைகளைப் பரப்ப வேண்டாம். இப்படி கூறுபவர்கள் இதைவிட திருடுகின்றனர். இங்கிருப்பவர்களைவிட எனது சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் திருடர்களைப் பாதுகாக்க வந்ததாகக் குற்றம் சாட்டினார்கள். ஆனால், IMF உடன் ஆலோசித்து தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைக் கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும் இப்படி எதனையும் செய்யவில்லை. நீதியமைச்சர் இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இதனை பாராளுமன்றத்தில் முன்வைத்தோம். இதை யாரும் எதிர்க்க முடியாது. சில புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய சட்டங்கள் சிலவற்றையும் கொண்டுவரவுள்ளோம். பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை. ஊடகங்கள் என்னையே அதிகமாக விமர்சிக்கின்றன. எனக்கே ஊடகங்கள் இல்லாமல் போனது. ஊடகங்கள் மீதிருந்த குற்றவியல் சட்டத்தை நான் தான் நீக்கினேன். தகவல் அறியும் உரிமையையும் நான்தான் வழங்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்கள் மூன்று தடவைகள் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தேன். இப்படிக்கு இருக்கும் போது ஊடகங்களை ஒடுக்கியதாக எப்படி கூற முடியும்?

தேசியப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கிறார்கள். ஆனால் நான் அந்த விடயங்களை செய்து கொண்டிருக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து ஏனைய பிரச்சினைகளை களைய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என்று ஊடகங்களில் யாரும் கூறவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் செயற்படுகின்றோம் என முன்னரே கூறியிருந்தேன். எந்த ஊடகமும் அதை எதிர்க்கவில்லை. அதனை பாராளுமன்றத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் போர்வையில் இனவாதத்தை உருவாக்காதீர்கள். ஒரு ஊடக நிறுவனம் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. ஒரே விடயத்தை நான்கு நாட்கள் ஒளிபரப்பினார்கள். இதனைப் பார்த்துவிட்டு தமிழ் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் ஒளிபரப்பினால் பரவாயில்லை. அதற்கு இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும். ஆர்ப்பாட்டங்களைக் காட்ட வேண்டாம் என்றும் எனது நலவுகளை மாத்திரம் ஒளிபரப்புமாறும் நான் கேட்கவில்லை.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மட்டுமின்றி, இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களையும் மறுசீரமைக்க அரசு முடிவு செய்துள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜனாதிபதி கீழ்கண்டவாறு பதிலளித்தார்.

அரசாங்கம் ஏன் வியாபாரத்தில் ஈடுபடவேண்டும்? அது அரசாங்கத்தின் வேலையல்ல. டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்தில் அவ்வாறான வேலைகள் இல்லை. ஆனால் நாட்டில் பணம் இருந்தது. அப்போது, இங்கிலாந்துக்கு கடன் கொடுக்கவும், கல்ஓயா திட்டத்தை முன்னெடுக்கவும் பணம் இருந்தது.

இப்போது மொரகஹகந்த வேலைத்திட்டத்திற்கு நாம் சீனாவிடம் பணம் கேட்கிறோம். அரச நிறுவனங்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எந்த நாட்டில் சட்டம் உள்ளது? ஒரு நாடாக நாம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அரசு வியாபாரங்களை செய்ய வேண்டும் என்று நாம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவுமே அரசாங்கம் இருக்கிறது. இன்று நல்ல கல்வி முறை இருக்கிறதா? கடந்த ஆண்டு கல்வியை விட பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதிக பணம் கொடுத்துள்ளோம். கல்வியை விட மின்சார சபைக்கு அதிக பணம் வழங்கினோம். டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் இதுவொன்றும் இருக்கவில்லை. தனியார்துறையினர் வியாபாரம் செய்யும் போது அரசுக்கு வரி கிடைக்கும் இங்கிலாந்தில் டெலிகாம் யாருக்கு சொந்தம்? தனியார் துறைக்கு. பிரான்சிலும் அமெரிக்காவிலும் இதே நிலைதான். நாமும் அவ்வாறே அபிவிருத்தி செய்ய வேண்டும். அல்லது வடகொரியா போல் விழ வேண்டும். நீங்கள் விரும்பும் ஒன்றைச் சொல்லுங்கள்.

இங்கு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன,

2002 ஆம் ஆண்டு, தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்தபோது, அரச நிதி முகாமைத்துவ ஒழுக்கத்தை தயாரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி ஒழுங்குமுறை முகாமைத்துவச் சட்டத்தை முன்வைத்தார். இந்தச் சட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது. 2006ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆகக் குறைக்கவும், அதன்பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அதனை 5% மாக பராமரிக்கவும் இந்த சட்ட மூலத்தின் ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் நிலுவையில் உள்ள கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65% ஆகக் குறைத்து, அதிலிருந்து அதனை அதே நிலையில் பேணுவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூன்றாவது விடயமாக, அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீதம் மட்டுமே கடன்பெற முடியும் என்ற ஏற்பாடும் இருந்தது.

இந்த மூன்று விடயங்களை உள்ளடக்கி இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஆனால், துரதிஷ்டவசமாக 2004ஆம் ஆண்டு அந்த ஆட்சி சரியில்லை என்றும், அதற்குப் பதிலாக வேறு ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் முடிவு செய்தனர். அப்போது நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசகர்கள் மீண்டும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி அதனை மறுசீரமைத்தனர். அதனால், அந்த பொருளாதார இலக்குகளை எங்களால் எட்ட முடியவில்லை

அரசின் முடிவுகள் பிரபலமாக இருக்காது. கடினமான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நாடும் எதிர்காலமும் இருக்காது என ஜனாதிபதி எப்போதும் அமைச்சரவையில் கூறிவருகின்றார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் எதையும் மறைக்காமல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இதைத் தவிர வேறு வழிகள் இருந்தால் யாராவது பாராளுமன்றத்திற்கு முன்வையுங்கள். மேலும் அரசுக்கு நிறைய பணம் மிச்சமாகும். அப்படியானால், பிரான்சில் உள்ள லாசாட் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. கடனில் இருந்து மீள வேறு வழி சொல்லக்கூடியவர்கள் இருந்தால் அதை செயல்படுத்த முடியும். இது நாம் நினைப்பதை விட சிக்கலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் மக்கள் மயப்படுத்த உதவுங்கள்.

இங்கு உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

கடனை மறுசீரமைக்கவில்லை என்றால், வருடத்திற்கு 06 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமையாக இருந்தது. இதனைச் செலுத்த கடினமாக இருப்பதால், கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கடனை மறுசீரமைப்பதற்கு இந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது. தற்போதிருக்கும் முறையில் அதனை மீளச் செலுத்த முடியாது என்பதால் எமக்கு கடன் வழங்கிய வணிக நிறுவனங்களிடமும், தனியார் நிறுவனங்களிடமும், அதற்கான நிவாரணம் வழங்குமாறும் அந்தந்த அரசுகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இச்செயல்பாட்டின் முதல் படி கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் நிதி உத்தரவாரம். நமது கடனை நிலையானதாக மாற்றுவதற்கான இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தில் உள்ளன. அந்த நிலையான நிலையை அடைய, ஒவ்வொரு நாடும் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன.

அடுத்த கட்டமாக அந்த உத்தரவாதத்தின் பிரகாரம் பேச்சுவார்த்தை நடத்தி வருடத்திற்கு 06 பில்லியன் என்ற வீதத்தில் நாம் செலுத்த வேண்டிய கடனை இந்த நேரத்தில் செலுத்த முடியாது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.

மீண்டும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம் என்ற நிலை இல்லை. கடன் வாங்கும்போது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், யாரும் மீண்டும் கடன் கொடுக்க மாட்டார்கள். எங்களால் கடனை அடைக்க முடியாததால், மீளச் செலுத்தாமல் இருப்பதற்குப் பதிலாக நிவாரண அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கோருகிறோம்.

உதாரணமாக, தற்போது 10 ஆண்டுகளில் 50 பில்லியன் செலுத்த வேண்டும் என்றால், நாங்கள் 20 – 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுக்கலாம்.

ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%க்கு மேல் கடனை மீளச் செலுத்த முடியாது. அதன்படி, அந்த எண்ணிக்கையை குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலுவைத் தொகையை நீண்ட கால அடிப்படையில் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளையே நாம் தற்போது முன்னெடுத்து வருகிறோம்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி மகிந்த சிறிவர்தன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுச பெல்பிட்ட, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தினித் சித்தக கருணாரத்ன உள்ளிட்டோருடன் ஊடக நிறுவனப் பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ள போதே இவ்வாறு தீமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடன் வாங்கி இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி பெறப்பட்டமை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், 4 வருடங்களில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி பெறுவதாகவும், இதன் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

“கூடுதலாக, நாடு மற்ற தரப்புக்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் டொலர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறது. சிலர் நாணய நிதியத்தின் கடன் வசதியை மற்றொரு கடனாகக் கருதுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் நாட்டின் மொத்தக் கடனையும் பெற்ற தொகையைக் கொண்டு அடைக்க முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த அறிக்கைகள் அறியாமையை அல்லது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுகின்றன என்றார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் சரி செய்யப்படுகிறது. பணவீக்க விகிதத்தை 6-4 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடன் வாங்கி வருமானம் ஈட்ட வேண்டும்“ என்றார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனிமேல் நடைமுறையில் இருக்காது என அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு.

1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.
2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.
5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.
6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.
7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.
8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.
9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது.

இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் ” கடந்த மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மத்திய கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களில் இருந்தும் இளநிலைப் பட்டதாரி மற்றும் பட்ட பின் மாணவர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்படலாம். நான்கு இளநிலை மாணவர்களுக்கு ஒரு பட்டப்பின் படிப்பு மாணவர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெறும். இதற்கென இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கமைய பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம் பற்றிய இந்தியத் தூதுவரின் கடிதம் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் கே. சசிகேஷ் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது – ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை வாங்கிய அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும். இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த பாதையை பின்பற்றினால் 2048 இல் இலங்கையை உலகில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.

நான் பிரதமரானதும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. பட்ஜெட் விவாதத்தின் போது அவர்கள் ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியபோது ஆதரிக்கவில்லை.அந்த சமயங்களில் பல்வேறு காரணங்களை கூறி ஆதரிக்க மறுத்தனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, ராஜபக்சவை மீட்பதே எனது நோக்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் கடினமான காலத்தில் இருந்து இலங்கை அன்னை மீட்கப்பட்டதை சர்வதேச சமூகம் கூட தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் விதிகளை வகுத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுகிறோம்.

இப்போதும் கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.