இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்தது – மத்திய வங்கி ஆளுநர்

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை தொடர்ந்து, “டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை தொடர்ந்து, “தேவையான துறைகளுக்குச் சேவை செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது, முதலீட்டாளர்களின் உணர்வை மேம்படுத்தி, அதிக நிதி மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும்“ என தெரிவித்தார்.

இலங்கைக்கான கடனுக்கான முதல் தவணையான 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செவ்வாய்கிழமை வழங்கப்படவுள்ள நிலையில், கடனுக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அதனை முறையாக அங்கீகரிப்பதற்காக நாணயநிதிய சபை நாளை கூடுகிறது.

முதன்முறையாக, இந்த கடனில் அரசாங்கத்திற்கான பட்ஜெட் ஆதரவு அடங்கும், இது IMF கடனில் முற்றிலும் புதிய அங்கமாகும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்திற்குள் கடனுக்கான முதல் மறுஆய்வு நடைபெறும் போது முடிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் வங்கிகள் உள்நாட்டு மறுசீரமைப்பை எதிர்க்கின்றன மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளுக்கு வெளியில் உள்ள ஆலோசகர்களை நியமித்துள்ளன.

IMF வசதி நடைமுறைக்கு வந்ததும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவை பட்ஜெட் ஆதரவிற்காக வரும் புதிய நிதியில் $4.5 பில்லியன் கொள்கை அடிப்படையிலான கடன்கள் மூலம் தங்கள் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் என்று ஆளுநர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதார மீட்சி தொடங்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

ஐஎம்எஃப் இரவு 10.30 மணிக்கு ஒரு செய்தி மாநாட்டை திட்டமிட்டுள்ளது. நாளை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றி பேசுபவர்கள், இலங்கைக்கான மூத்த தூது தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் IMF இல் இலங்கைக்கான தூது தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பேசுவார்கள்.

விரைவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

வலுவான இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு மீளாய்வு செய்த அரசாங்கம் பல வருடங்களாக சிறையில் இருந்தவர்களையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

காணிப்பிரச்சினைகளுக்கு அதிகளவில் முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவு குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி 18 மாதங்களுக்கு விவசாயத்துறைக்கான உதவியை நீடித்தது

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஐ.எம்.எப் உடன்படிக்கை முன்வைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி இரவு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியதுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி ஆகியோர் இணைந்து அன்றைய தினம், இரவே இது குறித்து ஊடக சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

வலி கிழக்கு பிரதேச சபையினால் 3 சிமாட் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் நேரடியாக முகாமைசெய்யப்படும் மூன்று முன்பள்ளிகளும் சுமாட் முன்பள்ளிகளாக எதிர்வரும் வாரம் முதல் இயங்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முன்பள்ளிகளை வலுப்படுத்தும் எமது சபையின் செயற்றிட்டத்திற்கு அமைய சபை நிதிமூலம் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் மூன்று சுமாட் போட்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவை பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஆவரங்கால் அரிச்சுவடி முன்பள்ளி , இருபாலை சிகரம் முன்பள்ளி, அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தாயகத்தில் முன்பள்ளிக் கல்வியை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக உணர்கின்றோம். ஏற்கனவே எமது சபை இருபாலை சிகரம் முன்பள்ளியினை 10 மில்லியன்கள் வரையில் செலவுடன் புதிதாக அமைத்து திறந்து வைத்துள்ளது. மேலும் அரிச்சுவடி முன்பள்ளி அமைப்பிற்காக 6 மில்லியன்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. கஜமுகன் முன்பள்ளியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப் பள்ளிகள் மாகாண மட்டத்தில் பேட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிறப்புத்தேர்ச்சி மிக்க ஆசிரியர் குழாத்தின் ஊடாக இயக்கப்படுகின்றது. இம் முன்பள்ளிகளில் மில்லியன்களில் செலவிடப்பட்டு நவீன விளையாட்டு உபகரண தொகுதிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலாக குறித்த முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவுத்திட்டம், கல்விச் சுற்றுலா என்பவற்றினையும் சபை மேற்கொள்கின்றது. வருமான ரீதியாக பாதிக்கப்ட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளும் வசதி வாய்ப்புள்ள குடும்ப பிள்ளைகள் பெறும் வாய்ப்புக்களை பாரபட்சமின்றி பெறவேண்டும் என்ற நோக்கில் நாம் மேற்படி முன்பள்ளிகளில் கல்விக்கான முதலீடுகளை நிதிப்பற்றாக்குறை சவாலினையும் எதிர்கொண்டு பயன்படுத்துகின்றோம். இந் நிலைமையினை பிரதேச மக்கள் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலி கிழக்கிற்கு விசேட அனுமதியில் 4 புதிய உழவு இயந்திரங்கள் – தவிசாளர் நிரோஷ்

விசேட அனுமதியின் கீழ் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை சபை நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ள நான்கு உழவு இயங்திரங்களும் பெட்டிகளும் விரைவில் மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர், எமது சபை தொடர்ச்சியாக கழிவு அற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனப் பற்றாக்குறையினை எதிர்கொண்டு வந்தது. யாழ். மாவட்டத்தில் 74 ஆயிரம் மக்களையும் 104 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவினையும் உடைய மிகப்பெரிய சபையில் ஒப்பீட்டளவில் வாகனப்பற்றாக்குறை கருமங்களை மேற்கொள்வதில் கடும் சவாலாகக் காணப்பட்டது. ஏனைய பிரதேச சபைகளில் இருந்து இரவல் பெற்றும் வாடகைக்கு அமர்த்தியுமே வாகன பற்றாக்குறையினை சபை இதுவரை நிவர்த்தித்து வந்திருக்கின்றது. இந் நிலையில் புதிய உழவு இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு அவைத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும் சூழ்நிலை காரணமாக உடனடியாக கொள்வனவு செய்ய முடியவில்லை.

ஆரச கொள்கையில் வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ள போதும் திறைசேரியின் அனுமதி உழவு இயந்திரக் கொள்வனவுக்கான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை கேள்விக்கோரலையும் மேற்கொண்டு அக் கேள்விக்கோரலில் பெறுகைச்சட்ட நடைமுறையின் பிரகாரம் உழவு இயந்திரங்களை சபைக்கு விற்பனை செய்வதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.

ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாத்துக் கொண்டு மக்களின் மீது வரிச்சுமையினை ஏற்றி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது என்று கூறுவது கனவிலும் நடைபெறாதது ஒன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு (18.03.2023) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற உழகை;கும் மக்களின் அரசுக்கு எதிரான தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால் முதலில் இனவாதத்தினை துடைத்தெரிந்து மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந் நாட்டில் இனவாதம் இன்றும் அரச கொள்கையாக உள்ளது. ஊழல்கள் புரிந்த அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பாளிகள் வரிக்கொள்கை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சுரண்டப்படுகின்றனர். மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

நடைபெறவேண்டிய உள்ளுராட்சித் தேர்தல்களை அரசாங்கம் தனக்குச் சாதகமற்றது என்பதை உணர்ந்து தடைபோட்டுள்ளது. மக்களின் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாழ். புத்தூரில் உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தினை நடத்துகின்றனர்.

இப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்களான செந்தில்வேலர் மற்றும் கதிர்காமநாதன் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கே ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, இப் போராட்டம் என்பது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சார்ந்த போராட்டமாகும். இதில் சகல தரப்புக்களும் இணைய வேண்டும். இப் போராட்டங்களை அரசினால் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாடளாவிய ரீதியில் முற்போக்கு சிந்தனையுடன் போராடும் தரப்புக்கள் எமது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைபற்றி வெகுவாகச் சிந்தித்து இனவாதத்தினைத் துடைத் தெரிந்து ஒட்டுமொத்த விடுதலையினையும் வென்றெடுக்க கடமைப்பட்டுள்ளனர். அதிகரித்த உணவுப் பொருள் விலை உயர்வினால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் ஜனாதிபதி தனது இருப்புத் தொடர்பில் சிந்திப்பதை விடுத்து மக்களின் பிரச்சினை பற்றிச் செயற்படவேண்டும் என வலியுறுத்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.