தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – சபா.குகதாஸ் வேண்டுகோள்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானது என சுட்டிக் காட்டியுள்ள உயர்நீதிமன்றம், ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றுக்கொள்வதுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.” என் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-

• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.

• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.

• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.

• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவேண்டாம் என கோரிக்கை!

கச்சதீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார் – எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எட்கா உடன்படிக்கை நிறைவேறின் இந்தியர்கள் நிரந்தமாக குடியேறுவர் – விமல் வீரவன்ச

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து அண்மையில் இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து இந்தியாவில் ஆற்றிய உரையை ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது ‘எதனையும் குறிப்பிட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் அதிகாரிகள் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது, தலையிடவும் முடியாது. ஒப்பந்தத்துக்கு அமைய மூன்று வருடத்துக்கு ஒருமுறை சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ‘நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் .நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளத்தை மாத்திரம் இலட்சக்கணத்தில் அதிகரித்துள்ளமை நியாயமானதா’ என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது.ஒப்பந்தத்துக்கு அமைய மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களின் சம்பளம் மூன்று வருடத்துக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. ஆகவே இந்த சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மத்திய வங்கியின் பரிபாலன சபையே எடுக்கும்.

மத்திய வங்கியில் பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளில் உள்ளதால் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. கூட்டு நிதியத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மத்திய வங்கியின் கணக்குகள் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.

யாழில் தயாரிக்கப்பட்ட சூரிய சக்தி சொகுசு படகு வெள்ளோட்டம்

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது.

80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளது.

அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது.

தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது.

உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என மஹாசென் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து தெரிவித்தார்.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமனம்

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

நாட்டை பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது – மேர்வின் சில்வா

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. ஏனென்றால் சமையல் பொருட்கள், விவசாய உற்பத்திகள், ஆடைகள் என அனைத்தும் இன்று அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது தேசிய மக்கள் சக்தி ஒரு சந்தர்ப்பத்தில் விபச்சாரத்தை சட்டமாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இன்று விபச்சாரம் மாத்திரமே மிக குறைந்த விலையில் கிடைப்பதாக தெரிகிறது.

இவ்வாறு நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் இன்று நாட்டில் மீண்டும் ஆட்சி செய்ய திட்டமிடுகின்றனர்.

நாட்டை பிளவுபடுத்த எண்ணும் ஜே.வி.பியினர் நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே ஆட்சிக்குவர எண்ணுகின்றனர்.

இதற்காகவா இந்தியாவுக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்,

இங்கு இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.