பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பேன் – ஜனாதிபதி

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் ,மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துவிட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப்படப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சகல தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

தான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்றும், ஆனால் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை என்றும், அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது எனவும், ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை எனவும், நாட்டை அராஜக பாதைக்கு செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க அவர்கள்,அராஜகத்தின் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

போலியோ தடுப்புப் பிரச்சாரம், சுனாமி மற்றும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு காலத்தில் முகங்கொடுக்க நேரிட்டது. இந்த நெருக்கடிகளின் போது ரொட்டரி கழகம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

மாநாட்டின் தலைவரும் ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான அனீஷா தர்மதாச, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய 3220 மாவட்டத்தின் ஆளுநர் புபுது செய்சா,மாவட்ட ஆலோசகரும் முன்னாள் தலைவருமான பிரதீப் அமிர்தநாயகம் ஆகியோர் இங்கு உரையாற்றினர்.

இந்நிகழ்வில் சர்வதேச ரொட்டரி தலைவர் திருமதி ஜெனிபர் ஜோன்ஸ் அவர்களின் பிரதிநிதியான திருமதி வலேரி வேஃபர், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இலங்கையின் ஆதரவை கோரியது ஜெர்மனி

ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்க வேணடும் என ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ரம்சோர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை கடந்த வருடம் தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்களின் ஒத்தழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  உப தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இ.பிரசன்னா மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம்,  மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லையென தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளன.

2000ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதோடு அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டுகொண்டே சென்றிருந்தது.

தமிழர் தாயகப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண நாம் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டுமென மீண்டும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை நல்லாட்சி காலத்தில் தாங்கள் பிரதமராக இருந்த காலப் பகுதியினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடொன்றை வழங்க முன்வந்து விசாரணை குழுவொன்றையும் அமைத்திருந்தீர்கள்.

குழுவும் விசாரணைகளை முன்னெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னராக அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என வாதிடப்பட்டிருந்தது.

எனினும், தற்போது தாங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைகளின் பிரகாரம், கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் மீள ஆரம்பமானதன் பின் அரச அச்சகத்திற்கு பாதுகாப்பு – பொலிஸ்

அரச அச்சகத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள போதிலும் , தற்போது வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மீண்டும் அப்பணிகள் ஆரம்பமானதன் பின்னர் உரிய நேரத்தில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரச அச்சகத்தினால் பொலிஸ் திணைக்களத்திடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு தேர்தலுக்கும் பொலிஸ் திணைக்களத்தினாலேயே பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கமையயே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் அரச அச்சகம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நிதி நெருக்கடிகள் காரணமாக வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பமானதன் பின்னர் நாம் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் போது நீண்ட காலத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியேற்படும். இதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பிரத்தியேகமாக நியமிக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.

இவ்வாறான அரச நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் , கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பொலிஸ் திணைக்களத்தினாலேயே தீர்மானிக்கப்படும். எனவே இந்தக் காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சீனாவின் மறுசீரமைப்பு உத்தரவாதமின்றி இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து நாணய நிதியம் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) Bloomberg News தெரிவித்துள்ளது.

அரிதாகப் பயன்படுத்தப்படும் நாணய நிதியத்தின் ஒரு சரத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை அங்கீகரிக்க முடியும், ஏனெனில் சீனாவின் முறையான உத்தரவாதம் மட்டுமே முன்நிபந்தனையைத் தடுக்கிறது என இது தொடர்பில் நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியளிப்பதற்கான உத்தரவாதங்களைத் தொடர்ந்து கோருகின்றனர், இதன் மூலம் IMF ஏற்பாட்டிற்கான அவர்களின் கோரிக்கையை நிதியத்தின் நிர்வாக வாரியம் பரிசீலிக்க முடியும்” என்று IMF செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பயன்படுத்தக்கூடிய துல்லியமான IMF கொள்கை முறைகளைப் பற்றி இலங்கையுடன் முன்கூட்டியே விவாதங்கள் நடந்து வருகிறது. IMF ஊழியர்கள் இலங்கை அதிகாரிகளுடன் வெளிப்படையான கொள்கை நடவடிக்கைகளை இறுதில் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், டொலர்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை காரணாமாக இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது கடனைத் திருப்பிச் செலுத்தாது IMF இடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் உதவியை வழங்குவது குறித்து IMF பரிசீலிக்கும் செய்தி, G20 நிதிக் கூட்டங்களுக்கு அடுத்த வாரம் அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனின் இந்தியா வருகைக்கு முன்னதாக வந்துள்ளது, அங்கு அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான கடன் மறுகட்டமைப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தப் போகிறது.

முன்னதாக பெப்ரவரியில், இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புப் பொதிக்கு நாடு இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடமிருந்து போதுமான உத்தரவாதங்களைப் பெற்று, மீதமுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று IMF கூறியது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மீதான முடக்கம் சிவில் சமூகங்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும்.

அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்யப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கான இடைவெளி சுருக்கமடைந்து வருகின்றமைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் குரலை அடக்கும் வகையில் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தற்போது அமைதிப்போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்குமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக இல்லாதொழிக்கவேண்டியது அவசியமாகும்.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவை பூர்த்திசெய்யப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக மாத்திரம் அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக் கப்பட்டிருப்பதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு அதிருப்தியளிக்கக்கூடியவகையில் தமது பணியை முன்னெடுத்த ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என்போர் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கவாதிகளும்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்துக்களை வெளியிடல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும், அதனுடன் நெருங்கிய கட்டமைப்புக்களும் அவதூறு பிரசாரங்கள், கடத்தல் பாணியிலான கைதுகள், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கைகள், பயணத்தடைகள், இடமாற்றங்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளன.

மேலும் இலங்கை ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘பாசிஸவாதிகள்’ என்றும் அழைத்ததன் மூலம் போராட்ட இயக்கங்களை மிகமோசமானதாகச் சித்தரிக்க முற்பட்டனர்.

அத்தோடு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்கள் மூவருக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பிரயோகித்தது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு உள்ளாவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பெரும் எண்ணிக்கையான தன்னிச்சையான தடுத்துவைப்புக்கள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிகோலியுள்ளது.

அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் பலமுறை வாக்குறுதியளித்துள்ள போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி ஒருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் – பிரான்ஸ்

கடன்களை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிக்குத் தாம் ஆதரவு வழங்கத்தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் இலங்கை – பிரான்ஸ் வர்த்தகக் கவுன்ஸிலுடனான சந்திப்பின்போதே பிரான்ஸ் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ள அவர், நீர்வழங்கல், சக்திவலு, நகர அபிவிருத்தி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு போன்ற துறைகளில் பிரான்ஸின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் கம்பனிகள் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்தும் அவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரான்ஸுக்கான இலங்கைத்தூதுவர் மனீஷா குணசேகர, பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் கம்பனிகளின் இலங்கைப் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் அந்த எழுத்துமூல ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் பின்லாந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைகள் விதிக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்கியமைக்காக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவை, போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஏனைய சர்வதேச நாடுகளும் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடியிருந்தது.

பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்