அரசியல் கைதிகள் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை; நீதி அமைச்சருக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை . அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.
அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் காமினி வலேபொட தெரிவித்தார்.

கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்டுக்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறப்பு

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிக்கையில் ,

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளது.

இது தவிர ஏனைய இடங்களில் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக 50 புதிய அலுவலகங்கள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அதிகாரிகளிடம் கொடுத்து, தங்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து சார்ள்ஸ் விலக பஸிலே காரணம் : கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் விலகியதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவே காரணம் என்று சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களாக பொது அரசியலில் ஈடுபடாது இருந்து வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, கந்தானை எனும் இடத்தில் தங்கியிருந்து பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக எமது ஊடகம் அறிந்துள்ளது.

அதற்கமைவாக, கந்தானையில் இருந்தே பஸில் கொழும்பில் உள்ள பல முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி விலகியதன் பின்னணியில் பஸிலின் நிழல் வீழ்ந்துள்ளதாக சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இது வரை முக்கியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ரணில் ஏற்றுக்கொள்ளவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி கடந்த வாரம் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஜனவரி 25 ஆம் திகதி தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததுடன், அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மனித உரிமைகள் குறித்து 4 ஆவது முறை ஆராயவுள்ளது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு, நான்காவது முறையாக இலங் கையின் மனித உரிமைப் பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3 வரை இடம்பெறுகின்றது. இதில் இலங்கை மனித உரிமை நிலை தொடர்பாக ஆராயும் கூட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறுகின் றது. ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய் வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின் கீழ் 2008 மே, 2012 ஒக்ரோபர், மற்றும் 2017 நவம் பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந் துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர் பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன் படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக் கைகளில் உள்ள தகவல்கள்,தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜெனிவா வில் முற்பகல் 9மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதி கள் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கை யாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரை களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு இறுதிப்படுத்தவுள்ளது. அத் துடன் தமது கருத்துக்களையும் அது வெளியிடவுள்ளது.

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகிறார்

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின்  பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் தனது விஜயத்தின் போது அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 7 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை சந்தித்து பான் கீ மூன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தின் பாதுகாப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

“தரையிலும் கடலிலும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சியின் வெற்றியானது, 75 ஆண்டுகளாக வலுவான அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அத்துடன் “இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்காக இப்பங்காண்மையினை மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எட்டு நாட்களாக நேரடியாகவும் மற்றும் கடலிலும் நடைபெற்ற, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினரிடையே ஒத்துழைபை மேம்படுத்திய Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 பயிற்சியானது ஜனவரி 26ஆம் திகதி கொழும்பில் நிறைவடைந்தது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பிலும், திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை கடற்படை (SLN) தளங்களிலும், மற்றும் லட்சத்தீவு கடலிலும் ஜனவரி 19-26 வரை CARAT/MAREX Sri Lanka பயிற்சி நடைபெற்றது.

மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் (HADR) மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்கள் ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதில் இப்பயிற்சியானது கவனம் செலுத்தியது.

“எமது செழிப்பிற்காக கடலை நம்பியிருப்பதும், அனைத்து இறையாண்மை கொண்ட அரசுகளும் ஒன்றுக்கொன்று அமைதியான முறையில் தொடர்பு கொள்ளவும், விதிகள் அடிப்படையிலான ஒரு ஒழுங்கினைப் பின்பற்றவும் கூடிய ஒரு உலகத்தைப் பற்றிய எமது பொதுவான தொலைநோக்கும் எமது கடல்சார் வேர்களில் இருந்து வருகிறது” என அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் துணைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜொக்கின் ஜே. மார்டினெஸ் டி பினிலோஸ் கூறினார்.

“இந்தப் பயிற்சியும், அதை நிஜத்தில் மேற்கொள்வதற்கு உதவிய அனைவரின் முயற்சிகளும், எமக்குப் பொதுவான அந்தத் தொலைநோக்கினை அடைவதில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கான ஒரு சான்றாக விளங்குகின்றன.”

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பல்களான SLNS கஜபாஹு (P 626) மற்றும் SLNS விஜயபாஹு (P 627) என்பன 13ஆவது Marine Expeditionary Unit (MEU) உடன் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் இயங்கக்கூடிய போக்குவரத்து கலத்துறை மேடையான USS Anchorage (LPD 23) இனைக் கடலில் சந்தித்தன.

இவ்வருட பயிற்சியில் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இரண்டு USN தரையிறங்கும்கலன்கள் முள்ளிகுளத்தின் ஒரு கடற்கரைப் பகுதிக்கு துருப்புக்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை HADR பயிற்சிக்காக கரைக்கு இடம்மாற்றின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள், ஒரு உருவகப்படுத்தப்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்குமான பங்காளர்களின் திறனை பரீட்சித்து அதை மேம்படுத்தியது.

“இந்தப் பயிற்சியில் பங்குபற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு நான் நன்றி கூறுவதுடன், எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக இப்பயிற்சியை நடாத்துவதற்காக கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கடின உழைப்பு மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என இலங்கை கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

“எம்மனைவருக்கும் பொதுவான நலன்களை திறம்பட கையாளுவதற்காக நாம் பேணிவரும் வலுவான உறவுகளைப் பேணிக்காப்பதற்காக இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த நல்லுறவானது எதிர்காலத்தில் மென்மேலும் தொடரும் என நான் நம்புகிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.

கடலில் நடத்தப்பட்ட மேலதிக பயிற்சிகளுள் பிரிவு தந்திரோபாயங்கள், பார்வையிடல், ஏறுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS), கடலில் வைத்து மீள்நிரப்புதல் தொடர்பான அணுகுமுறைகள் மற்றும் உளவு மற்றும் துப்பாக்கிப் பயிற்சிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

VBSS பயிற்சிகள், இப்பயிற்சியின் கடலில் நடைபெற்ற பகுதியில் பங்கெடுத்த SLN கப்பல்களின் தளங்களில் துருப்புகள் மற்றும் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பயிற்சிகளை Anchorage மேலிருந்த உலங்குவானூர்திகள் வெற்றிகரமாக மேற்கொண்டன.


கரையில் நடைபெற்ற விடயங்களுள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அவர்களால் நடாத்தப்பட்ட இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்களின் உறுப்பினர்களுடனான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாடு, இரு நாட்டு கடற்படை வாத்தியக்குழுக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள், ஒரு விளையாட்டு தினம் மற்றும் ஒரு தொடர்ச்சியான சமூக சேவை நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கியிருந்தன.

“இந்த ஐந்தாவது CARAT/MAREX Sri Lanka பயிற்சியின்போது, எமது இரு நாடுகளுக்கும் செயன்முறைப் பிரயோகத்துடன் கூடிய அறிவுப் பரிமாற்றங்களை நடாத்த முடிந்தது,” என 13ஆவது MEU இன் படைப்புரிவுகளை தரையிறக்கும் அணி 2/4 இன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் ஜாரெட் ரெட்டிங்கர் கூறினார். “அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் எங்களது திறன்களைக் கூர்மைப்படுத்தினோம், இணைந்து செயற்படும் திறனை மேம்படுத்தினோம், மற்றும் ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்கிற்கான ஒரு பரஸ்பர தொலைநோக்கிற்காக இணைந்து பணியாற்றினோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரையில் நடைபெற்ற பயிற்சிகள் சுழியோடுதல் மற்றும் நீருக்கடியிலான கட்டுமானம், மருத்துவ உதவி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற விடயங்கள் தொடர்பான விடய நிபுணத்துவ பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. மேலதிகமாகப் பங்குபற்றிய அமெரிக்க அலுவலர்கள் மற்றும் கப்பல்களுள் U.S. 7ஆவது கப்பற்படையின் ஒரு P-8A Poseidon கப்பல் மற்றும் அதன் அதிகாரிகள், (CTF) 72, CTF 73, CTF 76/3, DESRON 7 படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் Amphibious Squadron 7 என்பன உள்ளடங்கியிருந்தன.

CARAT/MAREX Sri Lanka என்பது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களைப் பயிற்சி செய்தல், கடல்சார் புரிதல், பங்காண்மைகள் மற்றும் இணைந்து செயற்படும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருதரப்பு பயிற்சியாகும்.

CARAT தொடரானது அதன் 28ஆவது வருடத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் பங்காளர் படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டுப் பயிற்சிகளை கொண்டுள்ளது.

இந்தியா இல்லையேல் இலங்கை மோசமான விளைவுகளைச் சந்திருக்கும் – மிலிந்த மொராகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட கடந்த 22 மாதங்களில் மூன்நு தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை- அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றது எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்தின் உதவிகள் பாராட்டத்தக்கவை – நீதி அமைச்சர்

இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன். அத்துடன் இரண்டு நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட நிகழ்வு  நேற்று முன்தினம் மாலை  இந்தியன் ஹவ்ஸில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும்  இந்தியாவுக்கு இடையிலான அரசியல், மத, கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.  விசேடமாக தர்மசோக சக்கரவர்த்தி பாரத தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் மஹிந்த தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்த மதத்தை எடுத்துவந்தமை  இந்நாட்டு மக்களை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் திருப்புமுனையாக அமைந்தது.

அத்துடன் இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல், மத, கலாசாரம்,தொழிநுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளை மேலும் முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும். விசேடமாக கடந்த வருடங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன்.

குறிப்பாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இருக்கும்  கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்காக  அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

மேலும் 2017 இல் இலங்கையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நாட்டுக்கு வந்து வழங்கிய ஆதரவை நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நாடுகளுக்கிடையில்  இடம்பெறும் பொருளாதார மற்றும் தொழிற்நுட்ப ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார பிரதிபலன்களை மேலும் அபிவிருத்தி செய்துகொண்டு முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்நேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.