விரைவில் இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் – அமைச்சர் சாந்த பண்டார

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று வருமானம் மற்றும் செலவுகளை முகாமைத்துவம் செய்வதில் உள்ள பிரச்சினையாகும். அமைச்சின் கீழுள்ள 16 நிறுவனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அவைகளில் பெரும்பாலானவை திறைசேரியையே நம்பியிருக்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் சுயாதீனமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறிப்பாக தேசிய ரூபவாஹினி மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக நிர்வாகத்துடன் கலந்துரையாடி சில முக்கிய முடிவுகளை எடுத்தோம். இதன் மூலம் சாதகமான அணுகுமுறைகளைப் பெற முடிந்தது. சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லேக்ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் நிறுவனம்)என்பன பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்த ஆண்டுக்குள் அந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.

மேலும், 2022ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானம் 9,268 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். ஆனால் 2023 ஆம் ஆண்டு 13,616 மில்லியன் ரூபா வரை வருமானத்தைப் பெற முடிந்தது.

பொதுமக்களுக்கு எந்தச் சுமையையும் ஏற்படுத்தாமல்,சேவைகளை அதிகரித்தும், நிர்வாகத் தரப்பில் உள்ள குறைபாடுகளைக் குறைத்தும், எம்மால் அதை முறைமைப்படுத்த முடிந்தது. தபால் துறையின் 2021 ஆம் ஆண்டில் 7,173 மில்லியன் நட்டம் 2022 இல் 6,832 மில்லியனாக குறைந்தது.

ஆனால் 2023 இல் நட்டத்தை 3,222 மில்லியனாக மேலும் குறைக்க முடிந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள், திறைசேரியை நம்பி இல்லாத இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்ற முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன், தனியார் மற்றும் அரச கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் பொருட்கள் பரிமாற்றத்தை மிக விரைவாக செய்ய முடியும். இந்த வருடம் மேல் மாகாணத்தில் 200 முச்சக்கர வண்டிகள் மற்றும் 50 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பொருட்களை பரிமாற்றிக்கொள்வதற்கான கூரியர் சேவையை ஆரம்பிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், 100 தபால் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் இலங்கை வங்கிக் கிளையினால் மேற்கொள்ளப்படும் அடிப்படை வங்கிச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்ட மூலம் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதி சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சியுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

தேசிய ஊடகக் கொள்கையொன்றை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடக செயற்பாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும்.

அபிவிருத்தி என்ற கவசத்துக்குள் இனத்தின் தனித்துவத்தை சிதைக்க சிலர் முயற்சி- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவமான பண்பாடு, கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும், இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதாக இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் தமிழர்களின் தனித்துவமான பண்பாடு கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும் இவற்றை பாதுகாக்க வேண்டிய இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளமை ஆரோக்கியமானதாக இல்லை.

யுத்தம் கோரமாக நடந்த இடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட மண்ணில் பொழுது போக்கு மையங்கள் என்ற போர்வையில் அந்நிய கலாசார அடையாளங்களையும் அதன் நடைமுறைகளையும் உட் புகுத்தி பல சமூகப் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடு மிக வேதனையாக உள்ளது.

அடுத்து, கல்வியில் ஏதோ மிக பின் தங்கிய இனமாக ஈழத் தமிழர்களை காட்டும் வகையில் இனி தாங்கள் தான் பல்கலைக் கழகங்களை நிறுவி கல்வியை ஊக்குவிப்பதாக கதை அளந்து கொண்டு பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் இனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் செயற்பாடு மிக கவலை அழிக்கிறது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் சரியான ஒரு மேய்ப்பன் இல்லை என்பதை காட்டும் சம நேரம், ஈழத் தமிழர்களை வைத்து எந்தப் பிழைப்பையும் நடத்தலாம் என்ற எண்ணமும் மேலோங்கி வருவதை காணமுடிகிறது.

சிங்கள ஆட்சியாளரும் சில வெளிச் சக்திகளும் விரும்பும் நிகழ்ச்சி நிரலில் புலம்பெயர் முதலீட்டாளர் என்ற வடிவத்தில் சிலர் கைக் கூலிகளாக மாறியுள்ளனர்.

இனத்தின் ஒற்றுமை மற்றும் தனித்துவ அடையாளங்கள் போன்றவற்றை மாற்றியமைக்கும் அல்லது கொச்சைப்படுத்தும் நோக்கில் தங்களது செயற்பாடுகளை முன்நகர்த்தி வருகின்றனர்.

தாயகத்தில் உள்ள சக்திகளை விமர்சித்து தங்களை புனிதர்கள் போல புதிய தலைமுறைக்கு காட்ட முயல்கின்றனர். ஒரு சில முதலீட்டாளர்கள்.

ஆனால், எமது வலிகள் வேதனைகள் துயரங்கள் எவற்றிலும் பங்கெடுக்காத இவற்றை எல்லாம் மூலதனமாக வைத்து பணம் சம்பாதித்த குழு மீண்டும் பிறிதொரு வடிவில் மீண்டும் பணம் சம்பாதிக்க களம் இறங்கியுள்ளது.

இப்படியான இனப்பற்று இல்லாத வியாபாரிகள் மிக ஆபத்தானவர்கள் என்பதற்கு அப்பால் இனத்தை எதிரியானவன் அழிப்பதற்கு மிகப் பலமாக எதிரிக்கு கைகொடுப்பார்கள் கல்வியில் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசித்த காரணத்தால் தான் பல்கலைக்கழக தரப்படுத்தல் சிங்களவர்களால் கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகள் தெரியாத விபச்சார வியாபாரிகள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை கல்வியில் உயர்த்தப் போகிறார்களாம். இது மிக வேடிக்கையான கதை.

மிகக் கொடிய யுத்தத்திலும் தமிழர்கள் பலமாக வைத்திருந்த துறை கல்வித்துறை தான் இத்தகைய வரலாறுகள் தெரியாது வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழர்களை மீண்டும் குழப்பி தங்களுடைய தேவைகளை குளிர்காய சிந்திக்கும் தரப்புடன் எதிர்வரும் காலத்தில் பயணிப்பதை புலம்பெயர் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் தமிழர்களின் தனித்துவத்தை சிதைக்கும் முதலீடுகள் வருவதை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

ஆகவே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் சமூக வளர்ச்சிக்குரிய முதலீடுகளை தமிழர்கள் இரு கரம் கூப்பி வரவேற்கின்றனர் அத்துடன் சிங்கள மற்றும் வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் வரும் புலம்பெயர் முதலீடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவுக்கும்  (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி  மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு   கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் நிகழ்நிலை  பாதுகாப்பு  சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு,

இருதரப்பினருக்கும் இடையில்  உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) தேசிய மக்கள்  சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்  விஜித ஹேரத்   ஆகியோர்  பங்கேற்றனர்.

தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தவில்லை. எனினும் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் நடாத்த வலியுறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தாலும் வலியுறுத்தாது இருந்து அதற்கு பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டிருந்தவர்கள் தற்போது அதனை வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனநாயக போராளிகள் கட்சியினரும் இலங்கை தமிழரசுக் கட்சியினருமே வாக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக கோரவில்லை. அவர்களும் வாக்கெடுப்பை கோரும் பட்சத்தில் அது முக்கியமான விடயமாக பார்க்கப்படும்.

தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களிலே ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் வேகம் தற்போது குறைவடைந்து செல்கின்றது.

இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்துவதற்கு அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து  செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னரேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரவு – பொதுஜன பெரமுன

பிரதமர் தலைமையிலான அரசியல் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்வரை நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

தற்போதைய தேர்தல் முறையின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்க கட்சியாலும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாட்டின் தலைவரான பிரதமர் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அவ்வாறான அரசாங்கம் தனக்குஆதரவளிக்கும் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆட்சிசெய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜனபெரமுன எப்போதும் கொண்டுள்ளதுஎன தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைகாரணமாக மாகாணசபைகள் முறைகள் போன்றவற்றினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையின் கீழ் அவைகள் ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க நிபந்தனையுடன் ஆதரவளிக்கத் தயார் – சஜித் பிரேமதாச

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கியமக்கள் சக்தி நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார் என தெரிவித்துள்ள அவர் தேர்தலின் பின்னரே இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகாரமுறையை நம்பினோம் ஆனால் சட்டத்தின் ஆட்சிக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச இதன் காரணமாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம் என சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை அல்லது வேறு எந்த தேர்தலையும் நடத்தாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்க்கின்றோம் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பறிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதியின் விசுவாசியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச அவர் சிவில் சமூக உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஏனையவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அரசமைப்பு சீர்திருத்தங்களிற்கு சரியான தருணம் இதுவென குறிப்பிட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பு பேரவை ஒருபோதும் ஜனாதிபதியின் அடிமையாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட அந்தஸ்து இல்லாத நிகழ் நிலைக் காப்புச் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் – ஜீ.எல். பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது, செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானதொரு செயற்பாடு.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகங்களினதும்,ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சட்டவிரோதமானது.இந்த சட்டத்தை சாதாண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமாயின் பெரும்பாலான ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும்,அவ்வாறு இல்லையெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மிக தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் ஐந்து முக்கிய திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கும்,சபாநாயகருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

இலங்கையிக் புகழ்பெற்ற நீதியரசரான மார்க் பெர்னான்டோ, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘சபாநாயகரால் சான்றுரைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு அமைவானதாக அமையாவிடின் அவ்வாறான சட்டங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காது’ என தெளிவாக வாதிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது,செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல ந்டவடிக்கைகளும் சட்டவிரோதமானது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படு;த்துவேன்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கையின் மனித உரிமைகளை சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு மத்தியில் சிறந்த மாற்றத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றார்.a

சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வார காலத்தில் பிறப்பிக்கப்படும் – இந்திய மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலைதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சிசிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசுதெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது இலங்கை அரசாங்கம் அனுப்பியஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Shell – RM Parks – CPSTL இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

உள்நாட்டு எரிபொருள் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டதன் பின்னர், இலங்கையில் முதலீடு செய்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட Shell – RM Parks நிறுவனத்திற்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கும் இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று இன்று (12) கொலன்னாவை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனூடாக, Shell – RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இது தொடர்பான முன் உடன்படிக்கையில் கைசாத்திட்டிருந்த நிலையில், உரிய எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.