தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தக் கோரி ரெலோ, புளொட் தலைவர்கள் சம்பந்தன், மாவைக்கு கூட்டாக கடிதம்.

தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் தமிழரசு கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஆகியோருக்கு ரெலோ மற்றும் புளொட் தலைவர்கள் கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொடூரமான யுத்தத்துக்கு முகம் கொடுத்து 13 வருடங்கள் கடந்த பின்னரும் ஒரு பலவீனமான அரசியல் சூழ்நிலையை எமது இனம் முகம் கொடுத்து நிற்கிறது. மிகப் பலமான கட்டமைப்பாக திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு காரணங்களால் சிதைவடைந்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் நிலையை எட்டியுள்ளதை நாங்கள் கவலையுடன் அவதானிக்கிறோம்.

தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் ரீதியாக செயலாற்றும் தரப்பினருடன் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு ஒரு பலமான அரசியல் சக்தியாக திகழ வேண்டும் என்ற நோக்கோடு கடந்த காலங்களில் நாம் எடுத்து வந்த முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் ஊட்டி உள்ளன.

உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவைக்கு நாங்கள் அனுப்பி வைத்த கடிதங்கள், பிராந்திய வல்லரசான இந்தியாவை நோக்கி நாம் எழுதிய கடிதம், அதற்குப் பின்னரும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்காக ஒருமித்த நிலையில் நாம் செயலாற்றி வந்தமை, ஜனாதிபதித் தேர்தலிலே ஒருமித்த கோரிக்கையை அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைத்தமை, அண்மையில் சர்வ கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று கூடி பல விடயங்களை ஆராய்ந்து ஒருமித்த குரலில் அரச தரப்பிடம் கோரிக்கைகளை முன் வைத்தமை எனப் பலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியானது மீண்டும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்து தரப்பினரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கி அது ஒரு பலமான கட்டமைப்பாக தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அரசியல் விடயங்களைக் கையாளும் அரசியல் இயக்கமாக மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடமும் தமிழ் மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது.
இருப்பினும் அண்மையில் வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளும் அதேபோன்று கிளிநொச்சியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள விளம்பரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ஒற்றுமையை குழப்புவதான சந்தேகத்தை எமது கட்சிகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் மாறுபட்ட அறிக்கைகள் மேலும் அவற்றை உறுதி செய்திருக்கின்றன. தேர்தல் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினரையும் உள்வாங்கி ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்கிறோம். அதுவே எம்மக்களது பாரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் என்பதையும் நாங்கள் தெளிவாக அறிந்துள்ளோம். இந்தக் கட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதற்கும் வலுவான பலமான இயக்கமாக தொடர்வதற்கும், நன்கு ஆய்வு செய்து, நாங்கள் பின்வரும் ஆலோசனைகளை, நாம் ஒன்றிணைந்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தங்கள் முன் வைக்கிறோம்.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் ரீதியாக செயல்படும் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும்
2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவாக நிர்வாக மற்றும் ஸ்தாபன ரீதியாக வரையறுக்கப்பட்டு கட்டியமைக்கப் படல் வேண்டும்
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கெனும் பொதுச் சின்னத்துடன் உத்தியோகபூர்வமாகப் பதியப்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில், அங்கத்துவக் கட்சிகளின் தனித்துவம் பேணப் படுவதோடு தனி ஒரு கட்சியின் ஆதிக்கப் போக்குகளும் நெருக்கடிகளும் தவிர்க்கப்பட்டு சுயாதீனமான நிரந்தரமான ஒரு அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும். இந்த விடயம் இன்று நேற்று அல்லாமல் நீண்டகாலக் கோரிக்கையாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவராலும் மக்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது.

இக் கோரிக்கையை எதிர்கால எமது இன நலன் கருதி நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை.
ஆகவே காலத்தின் அவசியத்தைக் கருதி தேர்தல் நலன்கள் கட்சி நலன்களைத் தாண்டி எமது மேற்கூறிய கோரிக்கைகளை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்த தங்களுடைய ஆக்கபூர்வமான பதிலை, அதிக காலம் தாழ்த்தாது, ஒரு வார காலத்துக்குள் வழங்குமாறு அன்புடன் கோரி நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமாவிடம் இலங்கைக்கு விஜயம் செய்ய பெளத்த மத தலைவர்கள் கோரிக்கை

பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ராமாண்ய மகா சங்கத்தின் பிரதம மதகுரு மாஹூல்வேவே விமல தேரர் உட்பட்டவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர். தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு சென்றமை காரணமாக அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்கின்றனர்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வரவேண்டும். அவர் இலங்கைக்கு பயணம் செய்தால், அவரை பின்பற்றி பலர் இலங்கைக்கு பயணம் செய்வர். இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து நாடு பொருளாதாரத்தில் சிறக்கும் என்று விமல தேரர் உட்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு தலாய் லாமாவின் இலங்கை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டபோதும், சீனாவின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. ஒரே சீனக் கொள்கைக்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது. தற்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கு சீனாவின் உதவி அவசியமான நிலையில், இலங்கை அரசாங்கம், இதற்கு இணங்குமா? என்பது கேள்விக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.

 

2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங்

2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றும் தமது பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இம்மாதம் கிடைக்காது – ஹர்ஷ டி சில்வா

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022ஆம் ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளை பதிவு செய்துள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் ஒருசில கடுமையான தீர்மான்களை எடுத்தது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத காலத்தில் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

சமூக பாதுகாப்பு வரி மீள்பரிசீலனை செய்யப்படும் – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன.

வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான பெறுபேற்றை அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை உடன் இம்மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் இருந்திருந்தால் நாட்டில் கடந்த வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது பன்மடங்கு அதிகரித்து பாரிய விளைவை நாடு எதிர்கொண்டிருக்கும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளார்கள்.இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.

பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி இன்னும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மின் கட்டணம் அதிகரிக்கப்படின் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கும் – உதய கம்மன்பில

மின்கட்டண அதிகரிப்பு,மின் விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹரக பகுதியில் ஜனவரி முதலாம் திகதி (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை இவ்வார காலத்திற்குள் ஸ்தாபிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது, அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேர்தலை நடத்த வரவு செலவு திட்டத்தில் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் காணப்படுகிறது.சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை வரி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பை தவிர்த்து வேறு திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும்,மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும் என்றார்.

இலங்கைக்கு ரணிலை விட சிறந்த தலைவர் கிடைக்காது – ருவன் விஜேவர்த்தன

இலங்கை எனும் கப்பலை இலக்கிற்கு வழிநடத்த ஒரு சிறந்த கேப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புதுவருட பிறப்பை முன்னிட்டு கம்பஹா பிரதேசத்தில் மத வழிபாடுகளில் ஈடுட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்ல அனைவரும் பின்வாங்கிய நிலையில், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை மீட்டது, ஜனாதிபதி பதவியின் கடினமான பொறுப்பை தயக்கமின்றி தோல்மீது சுமந்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவாகும்.

அத்துடன் ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்ட ஜனாதிபதி, செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாகவே கப்பல் மீண்டும் புதிப்பித்து உயிரூட்டப்பட்டிருக்கின்றது.

அதனால் கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட பாரிய அனுபவங்களுடனே புது வருடத்துக்கு கால் எடுத்து வைக்கின்றோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – விஜயதாஸ ராஜபக்‌ஷ

தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு செலவு செய்யும் நிதி தொகையை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் காலத்தில் அதிக நிதியை செலவு செய்வதை மட்டுப்படுத்துவதல் மற்றும் தேர்தல் காலத்தில் அவர் வர்த்தகர்களுடன் முன்னெடுக்கும் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யும் நிதி தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களை ஆணைக்குழுவிற்கு அழைத்து தேர்தல் தொடர்பான செலவுகளையும்,நிதி கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் ஊடாக அரச சொத்து, அரச நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேட்பாளருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் இடம்பெற்று மூன்று வார காலத்திற்குள் உரிய வேட்பாளர் தேர்தலுக்கு தான் செலவு செய்த நிதி, அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சத்திய கடதாசி ஊடாக அறிவிக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் வகிக்கும் அரசியல் உறுப்பாண்மை பதவிகளை இரத்து செய்யவும் புதிய விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது – தம்மரத்ன தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமஹா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியளலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,தேர்தலை நடத்திய உடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா,சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குமாறு.தேர்தலை நடத்தினால் ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

பிரதேச சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து அரச கட்டமைப்பு ஊழல் மோடியால் துறைபோயுள்ளது.

அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகளாக உள்ளார்கள். எவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் வாழ்வதற்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது.

பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நிதியை மோசடி செய்ய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அடி மட்டத்தில் இருந்து ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை உள்ளுராட்சி மன்ற சபைகள் தோற்கடிக்கின்றன.உள்ளூராட்சி மன்றங்கள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகின்றன.உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழல் மோசடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்றார்.

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை அனைவருக்கும் உண்டு – வே.இராதாகிருஸ்ணன்

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை இந்த நாட்டில் அனைவருக்கும் உண்டு என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் 1994ஆம் ஆண்டு தனி ஒருவராக அரசாங்கத்தை உருவாக்கினார். வட, கிழக்கு மக்களுடன் நல்லுரவை பேணினார். மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர அபிவிருத்தியை தோட்டங்களுக்கு கொண்டு வந்தார். எனவே அவரை நினைவு கூர வேண்டியது அணைவருடைய பொறுப்பாகும். அந்த செயல்பாடை மலையக மக்கள் முன்னணி கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் முன்னணியின் உண்மையான விசுவாசிகளே இங்கு இருக்கின்றார்கள்.

அவருடைய இறுதி சடங்கின் போது அவருடைய கொள்கையை கடடிக் காப்போம் என சத்தியம் செய்தவர்கள் கொள்கையை காட்டிக் கொடுத்து மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்படுகின்றார்கள். இது தான் அமரர். பெ.சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக் கடனா என வே.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தினம், ஞாயிற்றுக்கிழமை (டிச.1 )அன்று மதியம் 2 மணிக்கு, அட்டனில் மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜேசந்திரன், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், நிதி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பிரதி தலைவர் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் கே.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியை முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் செலுத்தினார். இதனையடுத்து முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட பொது மக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஷ்ணன்,

அமரர்.சந்திரசேகரன் இந்த நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியிருப்பார். இன்று அரசாங்கம் மக்களின் நன்மையை கருத்தில் கொள்ளாது தன்னியச்சையான முடிவுகளை மேற்கொண்டு மக்களுக்கு சுமையாக மாறியிருக்கின்றது.

தொடர்ந்தும் மின்சார கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது. அப்படி அதிகரிக்கப்பட்டால் மலையக மக்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும். மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. மலையக மக்களின் வருமானம் குறைவடைந்துள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே எதிர்காலம் மிகவும் மோசமானதாக அமையும்.

சுகாதார அமைச்சர் தன்னிச்சயைான முடிவுகளை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மருந்து பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்று அனேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருந்தகங்களிலும் மருந்துகள் இல்லை. இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை.

இன்று முதல் புதிய வரி அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையில் இருக்கின்ற அரச, தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.