இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை – ஜெய்சங்கர்

இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை என  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

இந்தியா இலங்கை முழுவதற்கும் உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் சிங்களவர்கள் ஏனைய சமூகத்தினர் அடங்கிய இலங்கை முழுவதற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள அயல்நாட்டிற்கு உதவிவழங்கும் விடயத்தில் நாங்கள் இனரீதியிலான அணுகுமுறையை பின்பற்றவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அயல்நாடு நெருக்கடியான நிலையில் உள்ள தருணத்தில் நாங்கள் உதவ முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியவர்களாக மாறிவிடுவோம் -நாங்கள் சரியான தருணத்தில் உதவினோம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது நீண்டகால நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்தது என தெரிவித்துள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த நிலைப்பாட்டை முந்தைய இந்திய அரசாங்களும் பின்பற்றியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கு இதுவே மிகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறை தொடர்ந்தும் இதுவே எங்கள் அணுகுமுறையாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டத்தின் 26 ஆவது உறுப்புரைக்கமைய வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை இம்மாதத்தின் இறுதி வாரத்தில் அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டுக்கான முதலாவது, இரண்டாவது குறைநிரப்பு பட்டியல்களுக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தின் தேருநர்களின் எண்ணிக்கையும் , அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் 8 ஆவது உப பிரிவிற்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 19 , கம்பஹாவில் 18, குருணாகலில் 15, கண்டியில் 12, இரத்தினபுரியில் களுத்துறையில் 10, காலி, அநுராதபுரம், கேகாலை மற்றும் பதுளை ஆகிய தொகுதிகளில் தலா 9, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 8 என தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று மாத்தறை, அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் மற்றும் திகாமடுல்லை ஆகிய தொகுதிகளில் தலா 7 உறுப்பினர்களையும் , வன்னி மற்றும் மொனராகலையில் தலா 6 உறுப்பினர்களையும் , மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய தொகுதிகளுக்கு தலா 5 உறுப்பினர்களையும் தெரிவு செய்ய முடியும். மேலும் திருகோணமலை தொகுதியில் 4 உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தான் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதுவே நாட்டின் பொருளாதார உண்மை நிலை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது புதிய விடயமல்ல. பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர நடைமுறையில் எந்த திட்டங்களும்  இதுவரை செயற்படுத்தப்படவில்லை. உண்மை காரணிகளை மறைத்ததால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறந்து விட கூடாது.

எரிபொருள்,எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை இல்லை. அத்தியாவசிய பொருள் இறக்குமதி தடையில்லாமல் இடம்பெறுகிறது ஆகவே பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொண்டோம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது,நாங்கள் வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம் என அரசாங்கம் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி அறிவித்தது. செலுத்தாத கடன் தொகையை கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் அரசமுறை கடன்களை செலுத்திய நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது,ஆனால் தற்போது வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிவாயு,எரிபொருள் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் இன்றைய பொருளாதார உண்மை நிலை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிட வேண்டாம்.

பொருளாதார பாதிப்பு மூடி மறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரி அதிகரிப்பினால் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காகிதமில்லா மின்கட்டண பட்டியல், பற்றுச்சீட்டு – காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் பிரதேச பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பொது முகாமையாளர்களுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர், தனது டுவிட்டரில் இன்று (07) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கான புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தெருவிளக்குகள் பொருத்துதல், தெருவிளக்குகளை இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சபையால் செய்ய முடியாத வெளிச் சேவைகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இ​.தொ.கா ஏற்பாட்டில் ’மலையகம் 200’ நிகழ்வுகள்

மலையகத் தமிழர்கள்  இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகபோகிறது. இதனையொட்டி பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தோட்ட மட்டத்தில் கலாசார,  விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளும் , தோட்ட வாரியாக நடத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். எமது வரலாறு தொடர்பான தேடலுக்காக கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் .

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று நடத்தினாலும் அனைத்து தரப்பினரும் இதில் இணைந்து கொண்டு தமது ஒத்துழைப்புகளை வழங்கலாம் எனவும் ​தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள் – சம்பிக்க

இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 ஆக  வகைப்படுத்தி நிறுவனமயமாக்க இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையின்முறையற்ற செயற்பாடுகளினாலும்,மின்சார சபை சங்கங்களின் தொழிற்சங்க போராட்டங்களினாலும் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என சமூகத்தின்மத்தியில் காணப்படும் நிலைப்பாடு உண்மையானதே, மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள்.

இலங்கை மின்சார சபையை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் 4 நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 நிறுவனங்களாக வகைப்படுத்த இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் சேவை கட்டமைப்பு 6ஆக வகைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு இலங்கை மின்சார சபையை முழுமையாக் கலைப்பதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின்மின்னுற்பத்தி பொறுப்பபை லக்ஷபான மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர்மின் வளாகத்திற்கும் சமனலவாவி மின்நிலையத்திற்கும் புத்தளம்மின்நிலையத்திற்கும் களனி திஸ்ஸ. சபுகஸ்கந்த ஆகிய மின் நிலையங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உரிமத்தை திறைசேரிக்கு தற்காலிகமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தியை நிறுவனமயமாக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். லக்ஷபான நீர் மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர் மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நீர்மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் மயப்படுத்தினால் மின்னுற்பத்திக்கு மாத்திமல்ல,குடிநீர் விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு குழுவினர்சமர்ப்பித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில்மக்களின் அபிப்ராயம் கோரப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும் – ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே பொருத்தமாகும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சிறந்த காலமாகும்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற  தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்து முடியுமாக இருந்தால் நல்லது. இதன் மூலம் வீண் விரயங்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

அத்துடன் எந்த தேர்தலுக்கும் முகம்காெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் நிலையிலேயே இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, தொகுதி அமைப்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. அதிகமான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் 2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அதன் மூலம் நாட்டின் தலைவராக யாரை தெரிவு செய்துகொள்வது என்பதை மக்களுக்கு தீர்மானித்துக்கொள்ளலாம். மக்கள் தேர்தல் ஒன்றை கோருவதாகவே எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது.

அதனால் அடுத்த வருடம் தேர்தலுக்கு நாங்கள் செல்வோம். ஆனால் நாட்டில் இடம்பெறும் பிரதான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறே நான் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன்.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நிலைமையில் சிறந்த தீமானம் என்றே நினைக்கின்றேன். ஏனெனில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகினார். அதனால் மீண்டும் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அடுத்த வருடம் நடுப்பகுதி அதற்கான சிறந்த காலமாகும் என்றார்.

உள்நாட்டில் பேசினால்தான் தமிழர்கள் தீர்வை பெறலாம்! பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.