தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் பொது அமைப்புகள் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்

குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை 11:10 மணியளவில் வவுனியாவில் ரயில் வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனின் அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையடல் இடம்பெற்றது.

இதில் உரையாடலை அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண. ஆயர் நொயல் இமானுவேல் வேலன் சுவாமிகள் உட்பட 48 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வணக்கத்திற்க்கு உரிய மத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பேணும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் – கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்து!

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும் அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும்.

அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.

இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம்.

கடந்த சில வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக இழந்து நிற்கிறார்கள்.

மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும்.

நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும் தூண்டப்படுகின்றனர்.

இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.

அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.

இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.

அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது. இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச – மைத்திரி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ முன்நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (1) தெரிவித்தார்.

ஓ.இ. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார் என தெரிவித்த திரு.மைத்திரிபால, தனக்குபதவியில் தமக்கு ஆசை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்ததாகவும், பதவிப் பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

யாழில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு

“அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது இன்று காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தலைமை உரை,விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான திருமதி செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,  தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா.குகதாஸ், கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பசில் கூறுவதற்கு ஏற்ப ஆட நான் பொம்மை கிடையாது – விஜயதாச காட்டம்

பசில் ராஜபக்‌ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை கிடையாது என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ​போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பசில் ராஜபக்‌ச பெரும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும் அவர் நினைப்பதைப் போன்று நான் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது. நான் விஜயதாச ராஜபக்‌ச, அதுவும் சட்டத்தை நன்றாக அறிந்த நீதி அமைச்சர்.

அதே ​போன்று பசில் ராஜபக்‌ச கூறுவதற்கு ஏற்ப ஆட நான் ஒன்றும் பொம்மையும் கிடையாது.

எனவே பசில் அவரால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதே ​போன்று சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடியே என்னைப் பதில் தலைவராக நியமித்துள்ளது.

அந்த விடயம் சட்டபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. அதனையும் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி நம்பிக்கை

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.

ஈரான் அதிபருக்கு முப்படையினரின் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.

இருநாட்டு ஜனாதிபதிகளும் இரு நாடுகளின் தூதுக்குழுவை அறிமுகப்படுத்திய பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி தலைமையிலான கு

தனது விஜயத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி ரைசி, ஜனாதிபதி அலுவலகத்தின் சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் பதிந்தார்.

தலைவர்களுக்கிடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. முறையான இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னெடுக்கப்பட்டன. முந்தைய பாரசீக காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமாக ஹோமூஸ் ஜலசந்தி வழியாக நடத்தப்பட்டன. ஈரான் தனது தூதரகத்தை 1975 இல் கொழும்பில் நிறுவியது.

இலங்கை தனது தூதரகத்தை தெஹ்ரானில் ஜனவரி 1990 இல் நிறுவியது. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவதுடன், பலதரப்பு உறவுகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு ஜனாதிபதிகளும் ஆராய்ந்தனர்.

அத்துடன், கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈரானிய ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஜனாதிபதி ரைசி தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டன.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகத்திற்கும் இலங்கையின் தேசிய நூலகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கையொப்பமிட்டதுடன், கலாசார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில்(Mohammad Mehdi Esmaeili),ஈரான் இஸ்லாமி குடியரசின் சார்பில் கைச்சாத்திட்டார்.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் ஊடகத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதோடு இலங்கையின் சார்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பில் ஈரான் எரிசக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்ரா (Ali Akbar Mehra Biyan) பியான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான கலாச்சார, விஞ்ஞான, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வெகுஜனஊடகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் ஈரானின், கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஈரான் கூட்டுறவுச் சபைக்கும் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் ஜி.வி. சரத் வீரசிரி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பாக ஈரான் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, நளின் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை – இந்தியா இடையே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்​ நாகப்பட்டினத்திலிருந்து செரியபாணி என்ற கப்பல் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

ஆனால் மழை மற்றும் போதியளவு பயணிகள் பயணிக்காமை உள்ளிட்ட காரணங்களால் ஒரே வாரத்தில் இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை – இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் இரண்டு தளங்கள் உள்ளதாகவும், அதன் கீழ் தளத்தில் பயணிக்க 5000 இந்திய ரூபாவும், மேல் தளத்தில் பயணிக்க 7000 இந்திய ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை – மைத்திரி

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும். கம்பஹா மாநகர சபை வளாகத்தில் மே தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு; கடும் அதிருப்தியில் அமெரிக்கா

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார

பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்

சண்டே டைம்சிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்ர்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது ஆனால் அது தங்களின் உரிமை என தமிழ் மக்கள் கருதுகின்றர் மாகாணசபைமுறை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கேள்வி-

அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து தேசிய மக்கள் சக்தியி;டமிருந்து எந்த கருத்தும் பதிலும் இல்லையே உங்களால் அதனை தெளிவுபடுத்த முடியுமா?

பதி;ல்- நாங்கள் பல தடவை 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்த எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம்.

2019ம் ஆண்டு வெளியான எங்களின் கொள்கை குறித்த ஆவணத்திலும் இது குறித்து தெரிவித்திருக்கின்றோம்.

எனினும் நான் மீண்டும் உங்களிற்கு இதனை தெளிவுபடுத்துகின்றேன்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபைமுறையே முழுமையான தீர்வு என நாங்கள் கருதவில்லை எனினும் மாகாணசபைகள் கடந்த மூன்று தசாப்தங்களிற்காக மேல் நாட்டில் காணப்பட்டுள்ளன எங்கள் கட்சியும் மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்குகிழக்கு மக்கள் மாகாணசபைகளை தங்களின் உரிமைகளில் ஒன்று என கருதுகின்றனர்.

பல வருடங்கள் வேண்டுகோள் விடுத்த பின்னர் தங்களிற்கு கிடைத்த வெற்றி மாகாணசபைகள் என வடக்குகிழக்கு மக்கள் கருதுகின்றனர்.

மாகாணசபை முறையை தொடரவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி- தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அணுகும்?

பதில்-

மாகாணசபைமுறை மாத்திரம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு போதுமானதல்ல என்பதை நான் ஏற்கனவே உங்களிற்கு தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் பல வருடங்களாக அரசியல் என்பது ஒரு சமூகத்தை மற்றைய சமூகத்துடன் மோத விடுவதாக காணப்படுகின்றது.

உதாரணத்திற்கு 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி என்பது முழுமையாக முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான கோசத்தினை அடிப்படையாக கொண்டிருந்தது.

எங்கள் நாட்டின் வரலாறு முழுவதும் அரசியல் வெற்றிக்காக சமூகத்தின் ஒரு பகுதியினரை மற்றைய தரப்பிற்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

அரசியல்கட்சிகள் அவை எந்த சமூகத்தை சேர்ந்தவையாகயிருந்தாலும் சரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்டியுள்ளன.

எங்கள் அரசியல் முற்றுமுழுதாக இதிலிருந்து வேறுபட்டது.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் தேசிய ஐக்கியம் இன ஐக்கியம் ஆகியவற்றிற்காக குரல்கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முதல் நடவடிக்கையாக சமூகங்களை பிரிப்பதற்கு பதில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் முறையை உருவாக்கவேண்டும்.

நாங்கள் அதனை செய்கின்றோம்.

கேள்வி- இதன் மூலம் பிரச்சினைகளிற்கு எவ்வாறு தீர்வை காணமுடியும்?

பதில்- தமிழர்களாக உள்ளதால் தமிழ் மக்கள் சில இனத்துவ நெருக்கடிகளை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும்.

அது மொழி கலாச்சாரம் மத சுதந்திரம் அரசியல் அதிகாரத்திற்கான போதியளவு சமவாய்ப்பின்மை போன்றவையை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.

இவற்றிற்கு தீர்வை காணவேண்டும்.

அரசமைப்பில் சில ஏற்பாடுகள் உள்ளபோதிலும் அவற்றை பின்பற்றவில்லை நடைமுறைப்படுத்தவில்லை.

பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்து 15வருடங்களாகின்றது ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு நேர்மையான தீர்வுகள் எவற்றையும் முன்வைக்கவில்லை.

நாங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை நம்புகின்றோம்.

முதலாவது அரசியல் விவகாரம் -பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்.

இரண்டாவதாக இலங்கையின் ஏனைய சமூகத்தினரை போல தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன இந்த பிரச்சினைகளிற்கு தீர்வுகள் காணப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இல்லையேல் ஒருவரை ஒருவர் தூண்டிவிடுகின்ற பிரிவினைவாத அரசியல் கலாச்சாரத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது.

எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம்.

கேள்வி – நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கபடவேண்டும் – இது குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.

நிறைவேற்று அதிகார முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அது பொருத்தமற்றது என நாங்கள் கருதிவந்துள்ளோம்.

46 வருடங்களிற்கு பின்னரும் இது இலங்கைக்கு பொருத்தமற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஆகவே இதனை நீக்கவேண்டும்.

கேள்வி- தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்- ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கம் எங்களிற்கு தேவையில்லை அனைத்து சமூகத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

நாங்கள் வடக்கை சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம், மலையகம் மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் நாங்கள் சிங்களவர்களிற்கான அரசாங்கத்தை மாத்திரம் உருவாக்கவேண்டியதில்லை.

வடக்கு மக்கள் அது சிங்கள அரசாங்கம் என கருதும் ஒன்று தேவையில்லை.

நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களின் பரந்துபட்ட ஆதரவு அவசியம் .அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும்.a