13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – மொஹமட் முஸம்மில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். உண்மையான நாட்டு பற்றாளர்கள் அதிகார பகிர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு உறுதியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுவது ஆச்சியரியமாக உள்ளது.

1987 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட்டிருந்தால் 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். நாட்டில் இனக்கவலரம் என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்த வண்ணம் உள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை.

போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி துப்பாக்கி அதிகாரத்துக்கு பதிலாக மாற்று அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் தந்திர செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

13ஆவது திருத்த விவகாரத்தில் போலியான தேசப்பற்றாளர்கள் அனைவரும் மௌனித்துள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அனைவரும் 13 ஆவது திருத்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

ஆலய சூழலில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலய வீதியை சுற்றி சிவப்பு வெள்ளை கொடிகள் ஆலயத்தினரால் கட்டப்பட்டு வருகின்றன. கொடிகள் கட்டப்பட்டு எல்லைப்படுத்தப்படும் ஆலய சூழலில் வியாபார நடவடிக்கைகள், யாசகம் பெறல், விளம்பர நடவடிக்கைகள் என்பவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு வருவோர் அப்பிரதேசத்திற்குள் காலணிகளுடன் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னாரை வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடம் மடுமாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு 2024ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூரும் நிகழ்வுகளை வருடம் முழுவதும் நடத்த ஆலய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி பிரையன் உடைக்வே ஆண்டகை Rev. Dr.Brian Udaigwe) தெரிவித்தார்.

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது. அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் ஆயர் கலாநிதி அதி வண. இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் செவ்வாய்க்கிழமை (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்” என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சு வார்த்தை  என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயக பூமி. இப் பூமியை அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு சிங்கள பௌத்த இனவாதிகளால் வடகிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு; தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள்,விகாரைகள் அமைப்பதும்  தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தினமும் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேவின் சில்வாவின் இப் பகிரங்க பயங்கரவாத வார்த்தை மதவாத வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய நினைப்பது பௌத்தத்திக்கும் நாட்டிற்கும் கேட்டையே விளைவிக்கும்.

அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாடு விழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி அவர்களை வீதிக்கு இறக்கி இழிவான அரசியலை தேர்ந்தெடுக்க முயல்கின்றார். இவரது கடந்த கால வாழ்வில் நாட்டின் சட்டத்தையோ கௌரவத்தையோ மதித்தவர் கிடையாது.

இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களும் இனவாத மதவாதத்தை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். வடகிழக்கிற்கு எதிராக மக்களை தூண்டி விடுவதிலேயே அரசு அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் வாங்குவது நிலையை இது எடுத்துக்காட்டுகின்றது.

இவர்களை மன நோயாளிகள் என்றும் குறிப்பிட வேண்டும். விசர் நாய்களுக்கு தண்ணீரை காண்பது போல இவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளும், மரபுரிமைகளும் தெரிகின்றன. இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் சுதந்திரமாக திரிய கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனலாம்.

தற்போது சூழ் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான  தெற்கின் அரசியல் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை வலுவாக கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசியல் தீர்வு என 13 வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக ஒன்று பாடல் வேண்டும்.

அரசியல் தீர்வு என பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் எலும்பு துண்டாக 13 காட்டிக் கொண்டிருப்பதும் அரசியல் லாபங்கள் சலுகைகளுக்காக அவற்றின் பின்னால் ஓடுவதும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையப் போவதில்லை.

தற்போது மேவின் சில்வா அவர்களின் கூற்றினை தனி மனித கூற்றாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கூற்றாகவோ மற்றும் எடுத்து அசமந்த நிலையில் இருந்து விடாது.

இதுவே நாட்டை எப்போதும் ஆட்சி செய்யும் பேரினவாதிகளின் நிலை என உணர்ந்து அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும்  வெளியிலும் மக்கள் சக்தியை பலப்படுத்தி கூட்டாக எழுந்து நிற்கவும்  தமிழ் அரசியல் தலைமைகள் முன் வரல் வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க வலுவான சக்தியாக தம்மை வடிவமைத்துக் கொள்ளலும் வேண்டும் என்றார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை பாராட்டுகிறோம்: பாப்பரசரின் பிரதிநிதி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகலே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருப்பதிக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கிறது.

அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ் கண்ட அவருடைய வார்த்தைகளை இங்கே தருகின்றேன். மரியன்னை என்றும் உங்களோடு இருக்கிறார். அவர் ஒவ்வொரு வீட்டினுடைய அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களினதும் அன்னை.

ஒரு அமைதியான இருப்பை நோக்கி திரும்புவதற்கு நாடுகின்ற அனைவரினதும் அன்னை பிரகாசிக்கின்ற இந்த இலங்கைத்தீவில் உள்ள தன் பிள்ளைகளை அவர் ஒருபோதும் மறக்க வில்லை. எவ்வாறு மரியா சிலுவையில் தொங்கிய தனது பிள்ளையை விட்டு விலகாது நின்றாறோ அவ்வாறே துன்புறும் தனது இலங்கை நாட்டு பிள்ளைகளை அவர் விட்டு விலகுவது இல்லை.

நம்முடைய பரிசுத்த தாயான மரியா தன்னுடைய இத்தீவின் பிள்ளைகளை மறப்பதில்லை. அவரின் பரிந்துரை ஊடாக நீதி, நல்லிணக்கம், அமைதி எங்களுக்கு கிடைப்பதாக.

உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது. பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன். எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ். மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும், அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெறுவதாக.

வெறுப்பும், விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலை அன்று. இது நல்லிணக்கத்திற்கான நேரம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ, உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும், சகோதரத்துவத்தையும், நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும். எந்த ஒரு சமையத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகள் போன்றவற்றை பயண்படுத்தி மற்றைய சமையங்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 77வது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நடராசா அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் வாசித்திருந்தார்.

இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயர் நீர்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத்தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் மதத்தலைவர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் கல்வியலாளர்கள. பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனல் ஐ அலைவரிசையை லைக்கா நிறுவனத்துக்கு வழங்குவதை நிராகரித்தது அமைச்சரவை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அமைச்சரவை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சபையில் சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் ஐ தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் தனியார் முதலீட்டாளருக்கு மாற்றுவதற்கு முன்னாள் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை முன்மொழிந்திருந்தது. அதன்படி, இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு பெப்ரவரி 03, 2023 அன்று வெளியிடப்பட்டது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. உரிய திகதியில், நாட்டிலுள்ள 2 நன்கு அறியப்பட்ட தகவல் தொடர்பு முகவர் நிறுவனங்கள் மட்டுமே அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

ஆனால், ஊடகத்துறை அமைச்சரால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அண்மையில் ‘சனல் ஐ’ சனலை இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்காமல் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

வீதிப் பெயர்ப்பலகையில் தவறான சிங்கள மொழி அர்த்தம்; பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோருகிறார் நிரோஷ்

தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையினால் அப் பிழையான அர்த்தத்தினால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புக்களுக்கு தான முன்வந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் உரிய திருத்தத்தினை மேற்கொள்ளவும் பிரதேச சபை செயலாளரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எம்மால் புனரமைக்கப்பட்ட கோப்பாய் பகவான் பாதைக்கான வீதியின் பெயர்ப்பலகையில் காணப்பட்ட சிங்கள மொழியில் தவறு காரணமாக அது பிழையான அர்த்தத்தினை சிங்கள மொழியில் வெளிப்படுத்தியது. இது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பலரும் முகப்புத்தகத்தில் கவலை தெரிவித்திருந்தனர். இதனை சமூக செயற்பாட் விஸ்வநாதன் ஆதித்தன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து தான் சிங்கள மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக விமர்சனத்தில் உண்மையுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன். எனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதேச சபை செயலாளர் இராமலிங்கம் பகிரதனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் பிரதேச சபை நடவடிக்கையினை எடுப்பதற்கு வசதியாக முதற்கட்ட கருமமாக அங்கு காணப்பட்ட தவறான அர்த்தத்தில் காணப்பட்ட சிங்கள பதத்தினை மறைத்துள்ளதுடன் இயன்ற விரைவில் குறித்த பெயர்ப்பலகை பிரதேச சபையால் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இவ் பெயர்ப்பலகை எனது பதவிக்காலத்தில் இடப்பட்டதன் அடிப்படையில் இதனால் பாதிக்கப்பட்ட சகோதர மொழி மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன். நாம் தமிழராக இந் நாட்டில்; வரலாற்று ரீதியில் எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டது என்பதையும் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் நான் நன்கு அறிவேன். இன்றும் நாட்டில் தமிழ் மொழி எந்தளவு தூரம் அரச கரும மொழிச் சட்டங்களுக்கு அமைய பரிபாலிக்கப்படவில்லை என்பதையும் எமது மொழி பல இடங்களில் துசணமாகக் கூட அர்த்தப்படுத்தல் இடம்பெற்றுள்ளதை கண்டு அவற்றுக்கு எதிராக நான் செயற்பட்டும் இருக்கின்றேன்.

இந் நிலையில் விமர்சனங்களை முன்வைப்போரின் ஆதங்கத்தினை மதிக்கின்றேன்.  எமது பதவிக் காலத்தில் இடப்பட்ட பகவான் பாதைக்காக பெயர்ப்பலகையில் காணப்பட்ட பதமும் தவறான சிங்கள அர்த்தப்படுத்தலுக்கே உரியது என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.  கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மோலாக பகிரங்க வெளியிலும் இப் பெயர்ப்பலகை காணப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.

இதுபற்றிய தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அரச உத்தியோகத்தார்கள் செயற்பட்டுள்ளார்கள். எமது மொழி பயன்பாட்டுத் தவறு காரணமாக இவ் விடயத்தில் பாதிக்கப்படும் ஒவ்வொரு சிங்கள சகோதரர்களிடத்திலும் நான் மன்னிப்புக்கோருகின்றேன். இதேவேளை வடக்குக் கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழி அழுலாக்கம் மற்றும் தவறான அர்த்தப்படுத்தல்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை அவசியம் என்பதையும் அதற்கெதிராக போராடுவதற்கும் முற்போக்காளர்களை  வலியுறுத்துகின்றேன்.

மேர்வின் சில்வா மனநோயாளியா?சட்டவாட்சி இல்லையா? ஐனாதிபதியின் நடவடிக்கை என்ன? – கேள்வியெழுப்பிய சபா குகதாஸ்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு நீண்டநாள் மனநோயாளியா? அல்லது தன்னை சிங்கள மக்கள் பெருமையாக நினைப்பார்கள் என நினைத்து எல்லை மீறிய நாகரிகமற்ற வார்த்தைகளால் உளறி வருகிறாரா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கைவைப்போரின் தலையை எடுப்பேன் என அண்மையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா  எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அவரது உரைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மேர்வின் சில்வாவின் உரை தொடர்பில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா  ஒரு கூட்டத்தில் பேசும் போது பல விடையங்களை பேசினாலும் வடக்கு  கிழக்கு தமிழர்கள் தொடர்பில் அவர் பேசியது அடிப்படை மனிதவுரிமை மீறல் மாத்திரமல்ல சட்டத்தை தன்னுடைய கையில் எடுத்துள்ளார்.  அதாவது வடகிழக்கில் தமிழர்கள் விகாரைகளில் கை வைத்தால் அவர்களது தலையை களணிக்கு கொண்டு வருவேன் என ஊளையிட்டுள்ளார்.

இதற்கு முன்னைய காலத்தில் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை அம்மையாரை திருமணம் செய்வதாக வாய்கிழிய கத்தினார். அதன் பின்னர் முன்னேஸ்வரம் ஆலய வேள்வியை தடுப்பதாக பிதட்டினார். இறுதியில் மன்னிப்பு கேட்டார் தற்போது தமிழரின்  தலையை எடுக்கிறாராம்.

உண்மையான சட்டவாட்சி நடைபெறுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டுமாக இருந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கையை எடுத்து மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டும்  இல்லாவிட்டால்  மேர்வின் சில்வாவின் கருத்தை ஆட்சியாரின் மறைமுக சர்வாதிகாரமாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களை இனவாதிகளையும் மனநோயாளிகளையும் வைத்து கிள்ளுக்கீரையாக பாவிக்க நினைத்தால் நாடு மீண்டும் மிகப் பெரும் அதள பாளத்தில் எதிர்காலத்தில் செல்லும் என்பதை தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்ததே! – மனோ கணேசன்

“தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்தக் குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டுத் தரகுப் பணம் பெரும் பிரச்சினையால் ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிக்கூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையைப் போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரைப் போன்றவர்களிடமிருந்து பெளத்தைப் போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும்” என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இந்த மேர்வின் சில்வா சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில் விகாரைகளையோ, கோயில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளைச் செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதைச் சட்டப்படி அணுக வேண்டும். அந்தச் சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளைக் கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரைப் பாரதூரமானவராக எடுக்கத் தேவையில்லை. ஆனால், இவரது கருத்து பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றி தங்கள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.” – என்றார்.