ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்களை காணவில்லை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா – அலிசப்ரி

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என எனவும் இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி சப்ரி சீனாவின் தன்னலமற்ற உதவியை இலங்கை பாராட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் ஒருவரையொருவர் எப்போதும் ஒருவரையொருவர் மதித்துள்ளன ஆதரித்துள்ளன என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் சகவாழ்வு பரஸ்பரம்நன்மைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான உதாரணமாக திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை !

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது.

வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்த நிலையில் இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனக வக்கும்புர கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என தமிழ்த் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் இருப்பதாலேயே மக்கள் அதனை நிராகரித்துள்ளனர் என்றும் காணி விடுவிப்பில் எதுவும் முழுமையாக நடைபெறாத நிலையில் லண்டனில் ரணில் விக்ரமசிங்க பொய்யுரைத்துள்ளார் என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் காலக்கெடுக்களை கூறி தீர்வு வரும் என ஏமாற்றும் ஜனாதிபதியின் உத்திகளை கண்டு ஏமாறாமல், சர்வதேச சமூகம் உண்மைய நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பேச்சுவாரத்தைக்குச் சென்ற சம்பந்தன், அவர் ஏமாற்றியதாக தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது லண்டன் பேச்சில் தெரிவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் உதவித்திட்டங்கள் அறிவிப்பு – டலஸ் அழகப்பெரும

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உதவித்திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் இலக்குகளை அடைய முடியவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிலையினுள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அதேவேளை இத்திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாவல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பொருளாதார பாதிப்பால் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரண திட்டம் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஏழ்மையில், அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் கொண்டுவரப்படுவதாகவும் இந்த உதவித் திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை நேரடியாக குறிவைக்கிறதா என்பது சந்தேகமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, தேர்தல் ஒன்று அவசியமில்லை என மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என பிரித்தானிய எம்.பி. க்கள் வலியுறுத்தல்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள சியோபைன் மெக்டொனாக் மற்றும் விரேந்திர ஷர்மா ஆகியோர், இலங்கையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது.

துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அனைத்துப் பீடங்களுக்குமான மாணவர் ஒன்றியங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது

அக்கடிதத்தில், “எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள் அனைவரதும் நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்புக்களும் ஆதரவுகளுமே காரணமாகும்.

இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் அறியத்தருவதற்குமானதொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றமையால் அதனை இந்தக் கடிதம் வாயிலாக அறியத்தருகின்றோம்.

1. தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளோடு தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும் அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனையும் தவிர்க்குமாறும், அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

அண்மையில்க் கூட தமிழ் மக்களின் உணர்வுகளைப் உதாசீனப்படுத்தி அவமதிக்கும் விதத்தில் நிகழ்வொன்று இராணுவப் பிரசன்னத்தோடு இடம்பெற்றிருந்தது, அது தமிழ் மக்களின் ஆறாத மனங்களை மேலும் புண்படுத்தியிருந்ததோடு, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் மறைமுகமான சிங்களமயமாக்க முயற்சிகளால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமையை உறுதி செய்யுமாறு வேண்டுகின்றோம்.

பல்கலைக்கழக நுழைவு என்னும் எந்தப் புள்ளியில் இனப்பிரச்சினை ஆரம்பமாகியதோ அதே புள்ளியில் மீண்டும் வந்து நிற்கின்றோமா? என்று எண்ணத் தோணுகின்றது.

தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தில் பலமான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குரலை நசுக்கும் விதமாக பெரும்பாண்மையின மாணவர்கள் திட்டமிட்ட வகையில் உள்நுழைக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறானதொரு சூழலில் அவர்கள் பெரும்பாண்மையினைக் கைப்பற்றுவதன் ஊடாக தமிழ் மாணவர்களுக்குரிய தலைமைத்துவ வாய்ப்புக்கள் யாவும் சனநாயகம் என்ற போர்வையில் பறிக்கப்படுவதற்கான சூழல் எழுந்துள்ளது.

இதனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கென்றிருக்கும் இறுதியான ஒரேயொரு வாய்ப்பாகவிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இழக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

தாயகத்தில் இடம்பெறும் பௌத்த – சிங்களமயமாக்கலுக்கு எதிராக யாழ் பல்கலைச் சமூகம் போராடி வருகையில், எமது விரிவுரையாளர்களே பல்கலையினுள் சிங்களமயமாக்கலை முன்னெடுக்கும் சூழல் உருவாகுமேயானால் அது ஒரு முரணான செயலாகும்.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே எமக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எவரேனும் நீதி தாருங்கள்” என்னும் கையறு நிலைக்கு எமது தமிழ் மாணவர்களை தள்ளிவிட வேண்டாம் என்றும், இவை பொதுவெளியில் மக்கள் மன்றத்திற்குச் செல்ல முன்னர் அவ்வாறான தமிழர் விரோத முயற்சிகளை தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக் கொள்கிறோம்” என்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கம் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் – ரெலோ வினோ எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார்கள்.

இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பௌத்த மேலாதிக்கம் செயற்படுவதால் நீதி கட்டமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஐக்கிய நாடுகள் மனித53 ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகின்றது.மனித உரிமைகள்  பேரவையின்  பிரதி ஆணையாளரின் உரையில் இலங்கை தொடர்ந்தும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தாமல் தண்டனையில் இருந்து விடுபடும் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படாமல், அலட்சியமாக செயற்படுகிறது என்று சுட்டிக்காட்டி கண்டித்துத்துள்ளதை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

சர்வதேச விசாரணை பொறிமுறை விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை ஏமாற்றுமாக இருந்தால் அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அகப்படுவதை தடுக்க முடியாது என்பதனையும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகளை நிறைவேற்றாது இலங்கை  இருக்குமாக இருந்தால் அதற்கான தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அதற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி அதற்கு பதிலளிக்கையில் இங்கே அனைத்தும் சுமுகமாக நடைபெறுகின்றது என்றும் இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளில் 98 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆனால் வன்னியில் 98 வீதமான காணிகள் இன்னும் இராணுவத்திடமே இருக்கின்றன.

சிறியளவிலான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மக்கள் இன்னும் மீளவும் குடியேறாது தவித்துக்கொண்டுள்ளனர். அரச படைகள் தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வசனத்தில் அங்கே இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி உரையாற்றும் போது  பொய்களையே கூறுகின்றார். அதேபோன்று ஜெனிவாவில் உள்ள  இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியும் பொய்களையே கூறுகின்றார். எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையகத்தையோ, சர்வதேச சமூகத்தை எந்த வகையிலும் ஏமாற்ற முடியாது என்பதனை கூறுகின்றேன்.

ஜனாதிபதி அடிக்கடி  உரையாற்றுகின்றார். ஆனால் அவர் கூறுபவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த சித்திரைக்கு முன்னர் தீர்வு எட்டப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை. நல்லாட்சி காலத்தில் இருந்து பிரதமராக இருக்கும் போதிருந்து கூறுகின்றார். ஒவ்வொரு தைப்பொங்கல்,தீபாவளி, புத்தாண்டில் தீர்வு என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றார்.

தமிழ் மக்களுக்கென நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலைமையில் இனவாதம் பேசி பௌத்த பிக்குகளுக்கு அப்பால் இந்த பாராளுமன்றத்தில் உள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் தொடர்ச்சியாக இனவாத சிந்தனையுடன் பௌத்த மேலாதிக்கத்தை இந்த நாட்டில் மேலோங்க செய்ய திட்டமிட்ட வகையில் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

அரசாங்கத்தினால் அந்த இனவாத குரல்களுக்கு எதிராக செயற்படவோ, அதனை அடக்கவோ முடியாத நிலைமையே இருக்கின்றது.தொடர்ச்சியாக இவர்கள் போன்றோர் இனவாதத்தை மக்கள் மத்தியில் கக்கிக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி குருந்தூர் மலையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் முறையிட்டும் எங்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.

தொடர்ச்சியாக இந்த நிலைமை நீடிக்கப்படுமாக இருந்தால், வன்னி மாவட்டத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுமாக இருந்தால், இது சிங்களவர்களுக்கு உரியது பௌத்த பூமி தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமேயானது என்பதனை நிறுவுவதற்காக திட்டமிடும் போது அங்கே மிகப்பெரிய இன முரண்பாட்டை வளர்ப்பதற்கு   வழியேற்படுத்தப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.

நாங்கள் நீதிமன்றத்தை நம்புகின்றோம், அதனை நாடியுள்ளோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக பௌத்த மேலாதிக்கம் உயர்ந்து நிற்பதனால் நீதிமன்றங்கள் தேவையா? அதனூடாக நீதி கிடைக்குமா? என்ற நிலைமை உள்ளது என்றார்.

ஜேவிபி கால மனித புதைகுழி ஆவணங்களை அழிக்க கோத்தா உத்தரவிட்டார்; சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு!

1989ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கிளர்ச்சிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது, தான் இராணுவ அதிகாரியாக செயற்பட்ட பகுதியில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இரகசிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டி எடுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அது கூறியது.

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எதுவுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடப்படவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர், குடும்பங்களின் சட்டத்தரணிகள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை மற்றும் மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒருவர் தண்டிக்கப்பட்டார், பின்னர் அவர்கள் மன்னிக்கப்பட்டனர், அது கூறியது.

“இது அரசியல் விருப்பமின்மையின் கதை – போதுமான சட்ட கட்டமைப்பு, ஒரு ஒத்திசைவான கொள்கையின் பற்றாக்குறை மற்றும் போதுமான ஆதாரங்கள் இல்லாதது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அது தீர்க்கப்படாத சோகத்தின் கதை; இழந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்காமல் வாழவும் இறக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ”என்று அது கூறியது.

மனிதப் புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் உள்ள தாதமதத்தில் ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அது கூறியது.

2013 ஆம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து காவல்துறை பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய சக்திவாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக அறிக்கை கூறுகிறது.

1989 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது, ஒரு இராணுவ அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ச, இந்த பிராந்தியத்தில் பணியாற்றியிருந்தார்.

விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ராஜபக்ச மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் வியாழக்கிழமை (22) பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இலங்கையில் விமான சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், வலுசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உரிய நேரத்தில் நிதி உத்தரவாதத்தை வழங்கியமைக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.